dinamalar telegram
Advertisement

ஆயிரம் சந்தேகங்கள் :பிளாட்டினத்தில் ஏன் முதலீடு செய்வதில்லை?

Share

பெட்ரோல் பங்குகளில், 500 ரூபாய் தாளைக் கொடுத்தால், அதை உயர்த்தி வெளிச்சத்தில் பார்க்கிறார்களே, அப்படி பார்த்து போலி ரூபாய் தாளை கண்டுபிடித்துவிட முடியுமா?
ரியாஜ் அகமது, கோவை.
தற்போது போலி ரூபாய் தாள்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டதாக கருதுகின்றனர். முன்பெல்லாம் காந்தி ‘வாட்டர்மார்க்’கை பரிசோதித்தனர். தற்போது, நடுவில் இருக்கும் காந்தியின் முகத்தை ஒட்டி, ‘ஆர்.பி.ஐ.,’ என்ற எழுத்தும் இடதுபக்கம் ‘500’ என்ற எண்ணும் வாட்டர்மார்க்கில் தெரிகின்றனவா என்று பார்க்கின்றனர். 2,000 ரூபாய் தாளில், ‘2கே’ என்ற வாட்டர்மார்க் உள்ளது. போலி ரூபாய் தாள் அச்சடிப்பவர்களால், இந்தப் பாதுகாப்பு அம்சங்களை இன்னும் காப்பியடிக்க முடியவில்லை. அதனால், அவற்றைப் பரிசோதித்து ஏற்கிறோம் என்கின்றனர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.

எல்.ஐ.சி., – ஐ.பி.ஓ., எப்போது வரப்போகிறது?

மெல்வின் ஜோசப், வாட்ஸ் ஆப்.

மார்ச் 2022க்குள்ளாக எல்.ஐ.சி., – ஐ.பி.ஓ., முடிந்து பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படும் என்பது எதிர்பார்ப்பு. ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதற்காகவே இந்த ஐ.பி.ஓ., வரப்போகிறது. எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு கிடைக்கப் போகிறது; ஒரே கட்டமாக இல்லாமல், இரண்டு கட்டங்களாகவும் ஐ.பி.ஓ., வரலாம் என்ற யூகமும் உலவுகிறது. எண்ணற்ற எதிர்கால கோடீஸ்வரர்களை இந்த ஐ.பி.ஓ., உருவாக்கப் போகிறது என்று கற்பனையும் சிறகடிக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன் இருக்கும் ‘ஹைப்’புக்கு இணையாக இருக்கிறது, எல்.ஐ.சி., – ஐ.பி.ஓ.,

தங்கம் போல வைரம், பிளாட்டினத்தில் யாரும் அதிக முதலீடு செய்வதில்லையே! ஏன்?

மல்லிகா அன்பழகன், சென்னை.

வைரத்துக்கோ, பிளாட்டினத்துக்கோ தங்கத்துக்கு இருப்பது போன்று ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை இல்லை. விலை ஏற்ற, இறக்கத்தைக் கணிப்பது மிகவும் கஷ்டம். வெளிநாடுகளில் பிளாட்டினத்தை அடிப்படையாக கொண்ட எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகள் உண்டு. இந்தியாவில் வைரத்துக்கும் பிளாட்டினத்துக்கும் மறுவிற்பனை மதிப்பும், சந்தையும் மிகவும் குறைவு. அடகு வைத்து பணம் வாங்க முடியாது. பொதுப் பயன்பாட்டிலும், புழக்கத்திலும் இவை இரண்டும் இல்லை. அதனால் தான் யாரும் இவற்றில் முதலீடு செய்வதில்லை ஆபரணமாக மட்டும் வாங்கி அணிந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகத்தின் வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு பண்ணுவது நம்பிக்கை வாய்ந்ததா?

ரமேஷ்குமார், சென்னை.

இது தமிழக அரசு நிறுவனம். வங்கியல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. வைப்புத் தொகைக்கு, 5 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட் காப்பீடு இருக்காது என்பது மட்டும் தான் குறை. மற்றபடி, இந்த நிறுவனம் தொடர்ச்சியாக லாபம் ஈட்டி வருவதாகவே தெரிகிறது. போக்குவரத்து சேவைகளின் தேவை என்றும் குறையப் போவதில்லை. அதில் முதலீடு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், வளர்ச்சி காணவே செய்யும்.

பிரதமரது ‘ஜன் தன்’ வங்கிக் கணக்கு உள்ளவர் மறைந்து விட்டால், ஏதேனும் இலவச காப்பீடு உள்ளதா?

ஆர். அழகர்சாமி, திண்டுக்கல்.

இலவச காப்பீடு இல்லை. ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு வைத்திருப்பவர்கள், பிரதமரது ‘ஜீவன் ஜோதி பீமா’ திட்டத்திலும், ‘சுரக்ஷா பீமா’ திட்டத்திலும் சேர்ந்துகொள்ளலாம். முதல் திட்டத்தின் படி, 2 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். இரண்டாம் திட்டத்தின் மூலம் விபத்து காப்பீடு பெறலாம். இரண்டுக்கும், கணக்கு வைத்திருப்பவர் மிகச் சிறிய பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

அரசு, ஒரு ஏரியாவிற்காக நிர்ணயிக்கும் வழிகாட்டும் மதிப்பிற்கு கூடுதலான விலையில் வீடு அல்லது மனையை விற்க முடியுமா?

எஸ். வெங்கடேஸ்வரன், மின்னஞ்சல்.

நன்றாக விற்பனை செய்யலாம், பதிவும் செய்யலாம். கைடுலைன் மதிப்பை விடக் கூடுதலாக இருக்கும் ‘சந்தை விலை’யில் விற்பனை செய்தால், அத்தொகைக்கு ஏற்ப, முத்திரைத் தாள் கட்டணமும், பத்திரப் பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். கைடுலைன் மதிப்புக்கு குறைவாகத் தான் விற்பனை செய்ய முடியாது.

கடந்த 1993ல் ‘ஹேன்ஸ் பாலியூரித்தேன்’ நிறுவனத்தின் 100 பங்குகளை பிஸிக்கல் மோடில் வாங்கியதை தற்போது விற்க முடியுமா?

வெங்கடேஷ், சென்னை.

இது ஒரு பட்டியல் இடப்படாத நிறுவனம். ஏற்கனவே பங்குச் சந்தையில் இருந்தபோது, நீங்கள் இதன் பங்குகளை வாங்கியிருப்பீர்கள். இப்போது, இதுபோன்ற பட்டியல் இடப்படாத நிறுவனப் பங்குகளை வாங்கும் டிரேடர்கள் அல்லது ஆன்லைன் வர்த்தக வலைத்தளங்களில் விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள்.

தங்க டிரேடிங் நிறுவனம் ஒன்றில், ஒரு லட்சம் கட்டினால் மாதாமாதம் 25 ஆயிரம் தருவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையா?

ஆர். இளங்கோ, கிண்டி.

சந்தேகத்தோடு நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வியே, நீங்கள் இதை நம்பவில்லை, உஷாராக இருக்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது. இந்த ஜாக்கிரதை உணர்வு தான் உங்களைக் காப்பாற்றும். இந்த நிறுவனம் இருக்கும் தெரு பக்கம் கூட போய்விடாதீர்கள். அப்பாவி முதலீட்டாளர்களை, நெஞ்சில் ஈரமே இல்லாமல் சுரண்ட நினைக்கும் கயவர்கள் இவர்கள். போலீஸ் கண்ணில் இதெல்லாம் எப்படி சிக்காமல் போகிறதோ, தெரியவில்லை.

கடந்த 2013ல், ‘ஜீவன் தரங்’ என்ற எல்.ஐ.சி., பாலிசியில், ஆண்டுக்கு நான்கு தவணையில், தலா 8 ஆயிரம் ரூபாய் என ஆறு தவணையில் மொத்தம் நாற்பத்தி எட்டாயிரம் ரூபாய் கட்டி உள்ளேன். பின் கட்ட முடியவில்லை, பாலிசி தவணைக் காலம் முடிந்துவிட்டது. பாலிசியையும் முடக்கி விட்டார்கள். கட்டிய பணத்தை திரும்ப பெற முடியுமா?

த.ராஜதுரை, திருப்பூர்.

குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால் தான், உங்களுக்கு சரண்டர் மதிப்பில் பணம் கிடைக்கும். தற்போது, பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கு, அக்டோபர் 22ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க முடியுமா என்று பாருங்களேன்.

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ், pattamvenkatesh@gmail.com ph:98410 53881

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement