Advertisement

சமாதானமே சக்சஸ் சூத்திரம்!

சீனா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர், அமெரிக்கா – ஈரான் இடையே ஆயுதப் போர் ஆகியவை வெடித்துவிடுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதாரம் என்னும் பெவிகுவிக் எல்லாவற்றையும் ஒட்டிவிட்டது.

இந்த ஆச்சரியமான முன்னேற்றங்கள் தரும் பாடம் என்ன?பதினெட்டு மாதங்களாக, அமெரிக்காவும், சீனாவும் மோதிக்கொண்டன. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரி விதிக்க, சீனாவும் அதேபோல் பதிலடி வரி விதித்தது.வாஷிங்டனும், பீஜிங்கும் மோதிக்கொண்டது, உலக பொருளாதாரத்துக்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. யார் முதலில் சமாதானம் செய்துகொள்வர் என்று தெரியாமலேயே மோதல் தொடர்ந்தது. கடைசியாக, சென்ற வாரம் இரு நாடுகளுக்கு இடையே முதல்நிலை சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து, 14.20 லட்சம் கோடி ரூபாய் (20 ஆயிரம் கோடி டாலர்) அளவுக்கு சரக்குகளை சீனா இறக்குமதி செய்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.முக்கியமாக, அமெரிக்காவில் இருந்து, 3,200 கோடி டாலர் அளவுக்கு, விவசாயப் பொருட்களையும், 7,800 கோடி டாலர் அளவுக்கு தொழிலக உற்பத்திப் பொருட்களையும் வாங்கிக்கொள்ள சம்மதித்துள்ளது, சீனா.ஒப்பந்தம்மேலும், அமெரிக்க பொருட்களின் காப்புரிமைகள், டிரேட்மார்க் மற்றும் உற்பத்தி சார்ந்த அறிவுசார் சொத்துரிமையை களவாட முடியாத அளவுக்கு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை, ‘சீனாவின் சரணாகதி’ என்றே வர்ணிக்கலாம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சீன துணை பிரதமர் லீயு ஹீ முகத்தில், மருந்துக்கும் புன்னகை இல்லை. வர்த்தக பாதிப்புகள் ஏற்படுத்திய வலியின் வெளிப்பாடு இந்த உடன்படிக்கை.உண்மையில், சீனாவில் கடந்த, 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி., கடந்த ஆண்டில், 6.1 சதவீதம் அளவுக்குச் சரிந்துள்ளது. அமெரிக்காவுக்குத்தான் அதிகபட்ச ஏற்றுமதியைச் செய்து வந்தது சீனா. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர், சீனாவின் வளர்ச்சியைப் பெருமளவு பாதித்துவிட்டது.

அமெரிக்கா பக்கமும் நிலைமை ஒன்றும் உத்தமமில்லை. உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து விட்டன. சீனப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையை நிறைத்தனவே அன்றி, அதற்கு இணையாக அமெரிக்கப் பொருட்களை, சீனா இறக்குமதி செய்துகொள்ளவில்லை. ஆக, உள்நாட்டு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் பாதிப்புக்குள்ளாயின. இதில், இருவருக்குமே பரஸ்பர லாபம் உண்டு. மோதிக்கொண்டால் நஷ்டம் தான் அதிகம். பதினெட்டு மாதங்கள் தந்த ஞானம், இருவரையும் மீண்டும் கைகோர்க்க வைத்துவிட்டது.

‘சமாதானமே சக்சஸ் சூத்திரம்’ என்பதை இருநாடுகளும் புரிந்துகொண்டன.மிதமான போக்குஇதேபோல் தான், ஈரானும். காசிம் சுலைமானியைக் கொன்றுவிட்டனர் என்று ஈரான், அமெரிக்க துருப்புகள் இருந்த ஈராக்கின் விமான தளங்கள் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. அடுத்து, போர் வெடிக்கப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், ஈரானின் அதிபர் ஹசன் ருஹானி, மிதமான போக்கைக் கையாளத் துவங்கினார்.

இது நடுவே, ஈரான், உக்ரைன் பயணியர் விமானத்தைத் தாக்கி வீழ்த்திவிட, சர்வதேச அளவிலும் சிக்கல். உள்நாட்டிலும் கலவரங்கள். ஹசன் ருஹானி, பிப்ரவரி மாதம் மீண்டும் தேர்தலைச் சந்திக்க இருப்பதால், பொருளாதார ரீதியாக மக்களைச் சமாதானப்படுத்த வேண்டிய நிலை.போர் தேவையற்ற செலவுகளை இழுத்துவிட்டுவிடும் என்பதால், மிதமான போக்கை ருஹானி கடைப்பிடித்து வருகிறார். யார் பெரியவன் என்ற மோதலோ, பழிவாங்கும் மனப்பான்மையோ எங்கும் எடுபடுவதில்லை. எடுபடுவது பொருளாதார யதார்த்தம் தான்.இதன் தொடர்ச்சியாகத்தான், நம் நாட்டிலும் கோரிக்கைகள் எழுகின்றன. குறிப்பாக, ‘சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய்’ எனப்படும், ஏ.ஜி.ஆர்., கணக்கிடும் விஷயம் மிகப்பெரும் தலைவலியாக வெடித்திருக்கிறது.


அரசாங்கத் தரப்பில் இருந்து, தொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து, ஏ.ஜி.ஆர். நிலுவைத் தொகையை வசூலித்தே தீரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். நிதிப் பற்றாக்குறை எனும் பெரும்பூதம் அவர்களைத் துரத்துகிறது. நீதிமன்றமும் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொன்னது. தொலை தொடர்பு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. கடந்த வாரம், அதையும் தள்ளுபடி செய்துவிட்டது உச்ச நீதிமன்றம்.நிலுவை தொகைஇதன் அர்த்தம் என்னவெனில், பார்தி ஏர்டெல், 35,586 கோடி ரூபாயும், வோடபோன் ஐடியா நிறுவனம், 53,038 கோடி ரூபாயும் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்.

இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?வோடபோன் நிறுவனம், கையறு நிலைக்கே போய்விட்டது. நிறுவனத்தையே மூடிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.அப்படி மூடிவிட்டால், பாதிக்கப்பட போவது பணியாளர்களும், முகவர்களும், வாடிக்கையாளர்களும் மட்டுமல்ல. நம் தொழில்களும், அவற்றின் எதிர்கால வளர்ச்சியும். இந்தியாவில் தொழில்செய்து வளரமுடியும் என்ற நம்பிக்கையும் சிதைந்துபோகும்.அவற்றோடு, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகப் போகின்றன. பல லட்சம் கோடிகள், வாராக்கடனாகிவிடும் அபாயம் உண்டு.அமெரிக்காவும், சீனாவும் விட்டுக்கொடுத்துப் போகின்றன.


ஈரானும், அமெரிக்காவும் கமுக்கமாக சமாதானம் பயில்கின்றன. அரசாங்கமும், தொலைதொடர்பு நிறுவனங்களும் இணக்கமாகப் போக முடியாதா என்ன?யாரேனும் ஒருவர் அழிந்தால் தான், மற்றவருக்கு வாழ்வு என்பது பழைய நிலை. இருவரும் வாழ்ந்தாக வேண்டும்; வளர்ந்தாக வேண்டும். உலகப் பொருளாதாரம் சொல்லும் செய்தி அதுதான். அதை நம் அரசாங்கமும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement