Advertisement

தேவை, வரலாற்றை மாற்றும் பட்ஜெட்

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கிற பட்ஜெட், வழக்கமான ஒன்றாக இருக்காது என்ற நம்பிக்கை துளிர்விடத் துவங்கியுள்ளது. என்ன காரணம்?

கடந்த வியாழக்கிழமை அன்று, பிரதமர் மோடி தலைமையில், ‘நிடி ஆயோக்’ கூட்டம் நடைபெற்றது. 38 பொருளாதார மற்றும் வங்கித் துறை தலைவர்கள், தனியார் துறை முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, பிரதமருக்குத் தங்களது ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

ஏற்கனவே, நிதியமைச்சர், தொடர்ச்சியாக பல்வேறு தொழில்துறை அமைப்பினரைச் சந்தித்து வருகிறார். பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கான முயற்சி இது. ஆனால், நாடு தற்போது சந்தித்துவரும் பொருளாதாரத் தேக்கநிலை, இன்னும் கூடுதலான முனைப்பையும் வேகத்தையும் கோருகிறது. கொள்கை மட்டத்திலான மாற்றத்தை எதிர்பார்க்கிறது.

விரிவான ஆலோசனை

இதை அரசாங்கம் உணர்ந்துகொண்டிருப்பதன் பலனே, பிரதமரே, நிதித்துறை, தொழில்துறை, பொருளாதார அறிஞர்களைச் சந்தித்தது. ஏற்கனவே இதுபோன்று, 12 சந்திப்புகளை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மேற்கொண்டுள்ள மிகவும் விரிவான ஆலோசனையாக இது கருதப்படுகிறது.இத்தகைய ஓர் ஆலோசனைக்குப் பின்னேயுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


ஏற்கனவே, ரிசர்வ் வங்கியும், தேசிய புள்ளியியல் மையமும் தெரிவித்த கணிப்பையே, தற்போது உலக வங்கியும் தெரிவித்துள்ளது.அதாவது, இந்த நிதியாண்டில், நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும், ஜி.டி.பி., 5 சதவீதம் தான் வளரும். அடுத்த நிதியாண்டில் நிலைமை சீரடைய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் தலையீடும் முனைப்பும் மிகவும் அவசியம்.

வியாழனன்று, 2 மணி நேரம் நீடித்த சந்திப்பில், ஒவ்வொருவருக்கும், இரண்டு நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதாகத் தகவல். இச்சந்திப்பில் பேசப்பட்டதாக வெளிவந்துள்ள பல தகவல்கள் தான், நம் கவனத்தைக் கவர்கின்றன.

சுட்டிக் காட்டியுள்ளனர்

முதலில், பொருளாதார முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் குறுகிய கால அல்லது உடனடி நடவடிக்கைகள் ஒருபுறமும், நீண்டகால நடவடிக்கைகள் மறுபுறமும் முன்வைக்கப்பட்டு உள்ளன.அதில், அரசாங்கம், நிதிப் பற்றாக்குறை இலக்கு என்பதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திண்டாட வேண்டியது இல்லை. இப்போது வளர்ச்சி தான் தேவை. அதனால், கூடுதல் முதலீடுகளை அரசாங்கத் தரப்பில் இருந்து செய்ய வேண்டும்.


அதன் மூலம் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தாலும், சந்தை, அரசாங்கத்தை எந்தவிதத்திலும் தண்டிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசாங்கத்தின் நிதி சார்ந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையோடு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.


குறிப்பாக, நிதிப் பற்றாக்குறை மதிப்பீடு. அரசாங்கம், இதற்கு, 3.3 சதவீத இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில், அது, 3.4 சதவீதமாக உள்ளது. உண்மை நிலவரத்தைக் கணக்கிட்டால், அது, 6 சதவீதமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மூலம், வியட்நாமும், வங்கதேசமும் பயன் அடைந்து வருகின்றன.

அதுபோல், நாமும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கு, அரசாங்கமும், தனியார் தரப்பும் இணைந்த ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம், இந்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்ற, கருத்தும் முன்வைக்கப்பட்டது.

பலர், இக்கூட்டத்தில், கொள்கை ரீதியாக குழப்பங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல், அரசாங்கத்தில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் அடாவடிகளைப் பற்றியும் பிரதமருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம், ஆவணங்களுக்குச் சுயச்சான்று வழங்கும் முறையைக் கொண்டு வரலாமே என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தகட்ட உயரம்

இரண்டு மணிநேர சந்திப்பில், பிரதமர், இரண்டு இடங்களில் மட்டுமே தலையிட்டதாக தெரிகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பான விஷயங்கள் பேசப்பட்ட போது, அவர் தலையிட்டு, கூடுதலாக விவரங்கள் கேட்டிருக்கிறார். மற்றபடி, அனைவரது பேச்சையும் உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.

பின்னர் பிரதமர் பேசும்போது, நம் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த கட்ட உயரத்துக்கு இட்டுச் செல்ல, சுற்றுலா, நகர்ப்புற விரிவாக்கம், உள்கட்டுமானம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆகியவை, வழிகாட்டும் என்று தெரிவித்துள்ளார்.இந்தச் சந்திப்பினால்இ பல செய்திகள் உறுதியாகின்றன.நாட்டில் பொருளாதாரத் தேக்கம் உறுதியாகியுள்ளது. அதை மீட்க வேண்டிய கடமை, பிரதமர் உள்ளிட்ட, தலைமை அமைச்சர்களுக்கே உள்ளது என்பதே உள்ளார்ந்த செய்தி.


அதற்குச் செய்யப்பட வேண்டியவை எவை என்பதை தொழில் துறையினரின் வாயிலிருந்து தெரிந்து கொள்ளவே இம்முயற்சி.புதிய பாதைதொழில் வேறாகவும், அரசாங்கம் வேறாகவும் இல்லாமல், இரண்டும் கலந்து எடுத்த முடிவாக பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதற்கான முனைப்பாகவும் இதனைப் பார்க்கலாம்.


புதிய ஆலோசனைகள், பார்வைகள், கோணங்கள் பெறுவதற்கும் இதனைப் பயன்படுத்தி இருக்கலாம்.அசாதாரண நேரங்களில், அசாதாரண முடிவுகள் தேவைப்படுகின்றன. பாய்ச்சல் தேவைப்படும் தருணம் இது. வழக்கமான வரவு செலவு கணக்காக இல்லாமல், பட்ஜெட், முற்றிலும் வேறு கோணத்தில் வழங்கப்பட வேண்டும்.


1991 பட்ஜெட், எப்படி அடுத்த இருபதாண்டுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியதோ, அதுபோன்ற பட்ஜெட்டே தற்போது தேவை.தடைகளையும் தயக்கங்களையும் விலக்கி, பட்ஜெட், புதிய பாதையைக் காட்டும் என்று நம்புவோம்.

ஆர்.வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

pattamvenkatesh@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • R Sanjay - Chennai,இந்தியா

    எது எப்படி இருந்தாலும் பொது மக்களுக்கு இந்த மோடி அரசாங்கம் ஒன்றும் செய்யாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement