Advertisement

வேண்டாமே கொள்கை குழப்பம்!

Share

மத்திய, மாநில அரசுகளின் தொழிற்கொள்கை என்பது கல்லில் செதுக்கியது போன்று வலிமையாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்துள்ள மூன்று விஷயங்கள், தொழிலதிபர்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.ஆந்திர பிரதேசத்தில், சந்திர பாபு நாயுடுவுக்குப் பின், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி வந்துவிட்டது. பல்வேறு வித்தியாசமான திட்டங்களை அறிமுகப்படுத்திய, நாயுடுவின் கனவுத் திட்டமான, 'அமராவதி ஸ்டார்ட் அப்' திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்.அதாவது, 1,691 ஏக்கர் நிலத்தில் பல்வேறு தொழில்நுட்ப, பன்னாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குவதற்கு ஏதுவாக ஒரு நகரத்தை நிறுவ, நாயுடு அரசு கனவு கண்டது. தற்போதைய முதல்வர் ஜெகனோ, அது தன்னுடைய முன்னுரிமை இல்லை என சொல்லிவிட்டார்.ஸ்டார்ட் அப் நகரை அமைப்பதற்கு, நாயுடு, சிங்கப்பூர் அரசோடும் முதலீட்டாளர்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தார். அதை, ஜெகன் அரசு ரத்து செய்துவிட்டது.இரண்டாவது, தொலைதொடர்பு நிறுவனங்களின் கதறல்.மத்திய அரசின் தொலைதொடர்பு துறைக்கும் பல்வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே, 14 ஆண்டுகளாக ஒரு பிரச்னை நிலுவையில் இருந்தது.சரிசெய்த மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்.,) என்பதை எப்படி கணக்கிடுவது என்பதில் இருதரப்பினருக்கும் குடுமிப்பிடி சண்டை. அலைக்கற்றைக்கும் லைசென்சுக்கும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள், குறிப்பிட்ட சதவீதத்திலான தொகையை மத்திய தொலைதொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும்.அவர்கள் ஈட்டக்கூடிய வருவாயை எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதில் தான் பிரச்னை. அரசாங்கமோ, தனியார் வைத்திருக்கும் பல்வேறு நிரந்த வைப்பு நிதிகள், இடங்களின் வாடகை, இதர வருவாய் போன்ற ஏராளமான அம்சங்களையும் உள்ளடக்கியது தான் மொத்த வருவாய் என வலியுறுத்தி வந்தது.கதறல்தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களோ, அலைபேசி சேவைகளின் மூலம் பெறுவதை மட்டுமே வருவாயாக கருத வேண்டும் என கோரிக்கை வைத்தன.உச்ச நீதிமன்றம் வரை போனது வழக்கு. மத்திய அரசாங்கத்துக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்துவிட்டது.

இதனால், ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள், பழைய பாக்கி, அதற்கு வட்டி, அபராதம், அபராதத்துக்கு வட்டி ஆகியவற்றை அடுத்த மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்.இவர்கள் செலுத்தவேண்டிய மொத்த தொகை, 92,641 கோடி ரூபாய். அவ்வளவுதான், வோடபோன் கதற ஆரம்பித்துவிட்டது.வோடபோன் ஐடியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவில், 50,921 கோடி ரூபாய் நஷ்டத்தைக் காண்பித்திருக்க, பார்தி ஏர்டெல் நிறுவனமோ, 23,045 கோடி ரூபாய் நஷ்டம் என சொல்லியிருக்கிறது.வோடபோன் குழுமத்தின் தலைவர் நிக் ரீட், 'இனிமேல் இந்தியாவில் தொழில் செய்ய முடியுமா என தெரியவில்லை. நிலைமை மோசமாகிவிட்டது' என்று முதல்நாள் கதறிவிட்டார்.

அவரது பேச்சு, இந்திய ஊடகங்களில் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்தப் பிரச்னையை ஆராய, அரசு செயலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார், தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.உடனே, தன் ஆதங்கத்தையும் வேதனையையும் மறைத்து, வோடபோன் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார் நிக் ரீட்.மூன்றாவது, மலிவுவிலை பிரச்னை.

சமீபத்திய பண்டிகைக் காலத்தில், அமேசானும், பிளிப்கார்ட்டும் இணையத்தின் மூலமாக, 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளன. இவ்வளவு அதிகமான விற்பனைக்குக் காரணம், அதிரடி விலை குறைப்பு தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அனைத்திந்திய வணிகர் சங்கங்கள், இதை முக்கிய பிரச்னையாக எடுத்துக்கொண்டுள்ளன. கொள்ளையடிக்கும் மலிவு விலை விற்பனை என்பது பல்வேறு சட்டத்திட்டங்களுக்கு முரணானது; அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளன.வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயல், சட்டத்தை மீறி, இதுபோன்ற அதிரடி விலை குறைப்பின் மூலம் வர்த்தகம் செய்யும் ஆன்லைன் நிறுவனங்களை எச்சரித்துள்ளார்.மூன்றுமே அடிப்படையில் தொழிற் கொள்கை சார்ந்தவை. ஒரு அரசாங்கம் ஒரு திட்டம் தீட்டி, வெளிநாடு ஒன்றுடன் ஒப்பந்தமும் போட்ட பின், அதை ரத்து செய்வது என்ன வணிக அறம்?அபாயமுண்டுஏற்கனவே தொலைதொடர்பு நிறுவனங்கள் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன. இதில் மத்திய அரசு, கூடுதல் தொகை கொடு என்று வற்புறுத்துவது என்ன நியாயம்?

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்த நிறுவனம் வோடபோன். அதன் தலைவரே கதறுவது என்ன செய்தியை, பிற தொழிலதிபர்களுக்குக் கொடுக்கும்?ஆன்லைன் விற்பனைக்கு எதிராக ஏன் இந்த வன்மம்?இன்றைக்கு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர். அதனால், இந்தியாவின் வாசலில் கருணைக் கடவுள் லட்சுமி காத்துக்கொண்டிருக்கிறார். தொழில், வர்த்தக வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன; தொழிலதிபர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், தொழில், வர்த்த கொள்கைகள் வலிமையாக, ஊசலாட்டமில்லாது, ஸ்திரமாக இருக்கவேண்டும். அப்போதுதான், இந்தியாவில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வர். கொள்கை குழப்பம் ஏற்படுமானால், வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடக் கூடிய அபாயமுண்டு.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement