Advertisement

உஷார்படுத்தியிருக்கும், ‘மூடீஸ்!’

Share

‘மூடீஸ்’ என்ற முதலீட்டு சேவை நிறுவனம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு, முதலீட்டு ரேட்டிங்கை குறைத்துவிட்டது. இது சொல்லும் செய்தி என்ன? பாதிப்புகள் என்னென்ன?


‘பிட்ச், எஸ்., அண்டு பி., குளோபல், மூடீஸ்’ போன்ற நிறுவனங்கள் முதலீட்டுக்கான ஆலோசனைகளை வழங்கி வருபவை. ஒவ்வொரு நாட்டிலும், முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்து, இவர்கள் பல்வேறு தரக் குறியீடுகளை வழங்குவர்.

பெருநிறுவனங்கள், வங்கிகள், பென்ஷன் பண்டுகள் போன்றவை, இவர்களது தர குறியீட்டை ஒட்டியே, தங்கள் முதலீட்டு முடிவை எடுக்கும்.தற்போது, மூடீஸ் இந்தியாவுக்கு வழங்கி வந்த தரக் குறியீட்டை குறைத்துவிட்டது. இந்தியப் பொருளாதாரம், ‘ஸ்திரமானது’ என்ற நிலையில் இருந்து தற்போது, ‘நெகடிவ்’ என்ற தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2017ல் இதே நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்பதற்கான தரக் குறியீட்டை அப்போது உயர்த்தியது. இரண்டு ஆண்டுகளில் என்ன நடந்துவிட்டதாக கருதுகிறது மூடீஸ்?


காரணங்கள்

அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.7 சதவீதமாக இருக்கும் என்று கருதுகிறது மூடீஸ். அரசின் கணிப்பு, 3.3 சதவீதம் தான். வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையும், நிறுவன வரி குறைக்கப் பட்டதும், வருவாய் இழப்பை ஏற்படுத்தும். அதனால், நிதிப் பற்றாக்குறை அதிகமாகும். வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக இதர துறைகளிலும் தொடர்கின்றன.குறிப்பாக, கார் விற்பனை, சில்லரை வர்த்தகம், நுகர்பொருட்கள், கனரக வாகனங்கள் ஆகியவை சரிவைச் சந்தித்துள்ளன. இதனால், இந்தியாவின் வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.இதையெல்லாம் எதிர்கொள்வதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கிறது மூடீஸ்.அதனால், ஏற்கனவே பெரும் கடன் சுமையில் இருக்கும் இந்தியா, தொடர்ந்து அதிக சுமையை ஏற்க வேண்டிய நிலைமை.ஒரு பக்கம், உலக அளவில் பொருளாதாரச் சிக்கல்கள் இந்தியாவை பாதித்து வருகின்றன. அதேநேரம், இந்திய வாடிக்கையாளரின் நம்பிக்கையும் பெருகவில்லை. அரசின் முதலீடுகளும் பெருகவில்லை.


விளைவு, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதமாக சரிந்துள்ளது.தங்கள் முடிவுக்கு மேலும் வலு சேர்ப்பது போன்று, இந்தியாவில் தனியார் துறை முதலீடுகள் பெருகாதது, நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதது ஆகிய காரணங்களை அடுக்குகிறது மூடீஸ். மொத்த உள்நாட்டு உற்பத்தி உயராதவரையில், தங்களால் இந்தியாவின் தரக் குறியீட்டை உயர்த்த முடியாது என்றும் அது தெரிவித்துள்ளது.

முக்கியத்துவம்

வழக்கம் போல், இத்தகைய பயமுறுத்தல்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றோர் எண்ணம் பரவலாக இருக்கிறது. மூடீஸ் சொல்லிவிட்டதாலேயே நாம் ஒன்றும் தரம் தாழ்ந்துவிடவில்லை.நிதித் துறை தரப்பில் இருந்து தரப்பட்டுள்ள விளக்கத்தில், நம் இந்தியாவின் முதலீட்டுத் தரம் எத்தகையது என்பதை தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் தெரிவித்துள்ளனர்.

மூடீஸ் கருத்தை நாம் புறமொதுக்க வேண்டியதில்லை. அது அவர்கள் தொழில். உலகெங்கும் உள்ள பெருமுதலீட்டாளர்களுக்காக, பல்வேறு நாடுகளின் முதலீட்டுத் தரத்தை ஆய்வு செய்வது அவர்கள் வேலை.அவர்கள் பார்வையில், இங்கே முதலீட்டுக்கான சூழல் சரிந்து உள்ளது. இதர இரண்டு, ‘ரேட்டிங்’ நிறுவனங்கள் இவ்வளவு துாரம் நம் முதலீட்டுத் தரத்தைக் குறைக்கவில்லை. நாம் மூடீஸின் கருத்தை, ‘உஷார்’ அறிக்கையாக எடுத்துக் கொள்வதே நல்லது.


ஏற்கனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். சமீபத்தில், ரியல் எஸ்டேட் துறைக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளார். இதன் மூலம், நின்று போன்ற பல்வேறு சகாயவிலை வீட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட இருக்கிறது.


ரிசர்வ் வங்கியின் நிதிக் குழுவும், தொடர்ச்சியாக ஐந்து முறைகளாக, ‘ரெப்போ’ விகிதத்தைக் குறைத்து வந்துள்ளது. பொதுத் துறை வங்கிகள், இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலனை முழுமையாக மக்களுக்கு வழங்க மறுக்கின்றன. அவர்களோடு, நிதித் துறைச் செயலர் பேசிக் கொண்டே இருக்கிறார்.இந்திய அரசுக்கும் பொருளாதாரப் பிரச்னைகள் தெரிந்திருக்கவே தான், பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

துாண்டுதல்

இது நாள் வரை, அரசுத் தரப்பைச் சேர்ந்தவர்கள் எவரும் இந்தியாவில், ‘மந்தநிலை’ ஏற்பட்டு உள்ளது என்பதை வாய் திறந்து ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் சந்திப்பில், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியம், இதை ஒப்புக் கொண்டுள்ளார்.ஆக, மூடீஸ் தெரிவித்திருப்பது புதிய விஷயமல்ல.


ஆனால், நாம் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான துாண்டுதல். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல என்பதற்கான விமர்சனம், லேசான சுணக்கம் கூட ஏற்படாமல் நம்மைத் துரத்துவதற்கான தாற்றுக்கோல்.

பொருளாதாரம் என்பது கைக் குழந்தை போன்றது. அது வளரும் வரை, தொடர்ந்து பாலுாட்டி, சீராட்டி, நோய் நொடிகளுக்கு மருந்து கொடுத்து, அன்பையும்,பாசத்தையும் கொட்டி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், அது கலகலவெனச் சிரித்து, நம்மை மட்டுமல்ல, அடுத்த வீட்டுக்காரரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.

மூடீஸ் மட்டுமல்ல, நாமும் இதைத் தானே விரும்புகிறோம்.

ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement