Advertisement

சென்னை துறைமுகத்துக்கு மவுசு!

ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அங்கே சென்னைக்கும், ரஷ்யாவின் முக்கிய துறைமுகமான விளாடிவோஸ்டோக்குக்கும் இடையே, நேரடி சரக்குப் போக்குவரத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார். சட்டென்று நம் சென்னை துறைமுகம், உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது என்ன ஒப்பந்தம்? என்ன பலன்கள்?ரஷ்யா மிகப்பெரிய நாடு. அந்தப் பக்கம் ஐரோப்பா முதல், இந்தப் பக்கம் ஆசியா வரை விரிந்த நிலப்பரப்பு அது. நமக்குத் தெரிந்த மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்கள் எல்லாம், ஐரோப்பா பக்கம் இருக்கும் பகுதிகள். விளாடிவோஸ்டோக் என்ற நகரம், ரஷ்யாவின் துாரக் கிழக்கில் இருக்கும் நகரம். ஐரோப்பா பக்கம் உள்ள பகுதிகள் போல், துாரக் கிழக்கு நகரங்கள் அதிகம் வளரவில்லை. ஆனால், கனிம வளம் மிக்கவை.


கடல் பயணம்


இந்தியாவில் இருந்து, ரஷ்யாவுக்கு ஏதேனும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், நாம் வழக்கமான ஒரு பாதையில் போவோம். மும்பை வழியாக, சூயஸ் கால்வாயைத் தாண்டி, ரோட்டர்டாம் துறைமுகத்தைத் தொட்டு, பீட்டர்ஸ்பர்க் சதுக்க துறைமுகத்தை அடையும் நீண்ட கடல் பாதை அது. பெரிய கப்பல்கள் இந்தப் பாதை வழியாகப் போனால், பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தை அடைய, 48 நாட்கள் ஆகும்.இதற்கான மாற்றுப் பாதை தான், சென்னை – விளாடிவோஸ்டோக் நகருக்கு இடையேயான புதிய கடல் பாதை.விளாடிவோஸ்டோக்குக்குத் தெற்கே ஜப்பானிய கடல் வழியாக துவங்கி, கொரிய தீபகற்பம், தைவான், பிலிப்பைன்ஸ், தெற்கு சீனக் கடல், சிங்கப்பூர் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக, வங்காள விரிகுடாவுக்கு வந்து, அந்தமான், நிகோபார் தீவுகளைத் தாண்டி, சென்னை துறைமுகத்தை அடையலாம்.


இந்தக் கடல் பயணம் சுருக்கமானது. கப்பலின் வேகத்தைப் பொறுத்து, குறைந்தபட்சம், 12 நாட்களிலும், அதிகபட்சம், 24 நாட்களிலும் பயணம் செய்து விடலாம். இதை மனதில் கொண்டே, இரு நாடுகளுக்கு இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் செய்து கொண்டுள்ளனர்.ஏன் விளாடிவோஸ்டோக்?விளாடிவோஸ்டோக், நமக்கு ஏற்கனவே பரிச்சயமான பெயர் தான். ஆம், 1971ல், இந்தியா – பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது, அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது கடற்படைகளை கொண்டு நம்மை மிரட்டின. அப்போதைய சோவியத் யூனியன், இந்தியாவுக்கு ஆதரவு தரும் விதத்தில், விளாடிவோஸ்டோக் துறைமுகம் வழியாகத்தான் துருப்புகளை அனுப்பி வைத்து உதவியது.மேலும், விளாடிவோஸ்டோக்கில், 1992லேயே துாதரகம் அமைத்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சேரும்.தற்போது, சீனா அமைத்து வரும் பட்டுப் பாதைக்கு பதிலடி தரும் விதமாக, ரஷ்யாவுக்குச் செல்லும் புதிய கடல் பாதையை இந்தியா மேம்படுத்தி வருகிறது.ரஷ்யா தரப்பிலும், விளாடிவோஸ்டோக்கை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பக்கத்தில் சீனா உள்ளதால், அங்கிருந்து ஏராளமானோர் இந்த நகரத்தில் வந்து குடியேறுகின்றனர். அது, ஒரு அபாயமாகக் கருதப்படுகிறது.அதனால், விளாடிவோஸ்டோக்கை மேம்படுத்த, பல நாடுகளையும் அங்கே முதலீடு செய்ய அழைத்து வருகிறது ரஷ்யா.ஏற்கனவே, 17 நாடுகள் அங்கே முதலீடு செய்துள்ள நிலையில், இந்தியாவின் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.நாம் ஏற்கனவே, விளாடிவோஸ்டோக்கில் கால் பதித்துள்ளோம். நம் ராணுவத்துக்குத் தேவைப்படும், ’எம்.ஐ.ஜி., சுகோய்’ ரக போர் விமானங்கள், இப்பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் தயார் செய்யப்படுகின்றன. அங்கேயுள்ள எண்ணெய் துரப்பண திட்டம் ஒன்றில், நம், ‘ஓ.என்.ஜி.சி., விதேஷ் லிமிடெட்’ நிறுவனம், 6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.இப்பகுதி, கனிம வளம் மிகுந்தது. ஏராளமான மரங்களோடு, நிலக்கரி, வைரச் சுரங்கங்களும், தங்கம், பிளாட்டினம், டங்க்ஸ்டன் புதைபடிவங்களும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களும் நிறைந்தது.இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கு, முதலீடு தேவை. ஏற்கனவே, பியுஷ் கோயல், தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு மாநில முதல்வர்களையும், 140 நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், விளாடிவோஸ்டோக்குக்கு அழைத்துச் சென்றார்.
சென்னைக்கு மவுசு


இந்த பின்னணியில் தான், இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நம் சென்னை துறைமுகம் வழியாகத் தான், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிகள் அதிகரிக்கப் போகின்றன.கடல் வாணிபம் பெருகும்போது, துறைமுக நகரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகுவதை சரித்திரம் நமக்குத் தெரிவிக்கிறது.


விளாடிவோஸ்டோக்கில் மனிதவளம் மிகவும் குறைவு. நம் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், ஆசிரியர்களும் அங்கு சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, சிறு, குறு, நடுத்தர தொழில்களும், சேவை துறையினரும் அங்கே சென்று தம் தொழில்களை விரிவுபடுத்தி, ஏற்றுமதி, இறக்குமதிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது.ரஷ்யாவின் துார கிழக்குப் பகுதி வளர்ச்சிக்காக, இந்திய அரசு, ரூ7,000 கோடி கடனுதவியும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.மொழியும், கலாசாரமும் தான் கொஞ்சம் சிரமம் தரும். அதை இரு நாட்டினரும் சமாளித்தால், விளாடிவோஸ்டோக், தமிழகத்துக்குக் கிடைத்துள்ள அட்சய பாத்திரமாகவே விளங்கும்.


ஆர்.வெங்கடேஷ்


பத்திரிகையாளர்


pattamvenkatesh@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement