புதுடில்லி:பழைய இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என, மூலதன பொருட்கள் துறையை சேர்ந்த, இந்திய தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள் சங்கமான, பி.பி.எம்.ஏ.ஐ., அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளது.
இது குறித்து இவ்வமைப்பின் தலைவர், யதிந்தர் பால் சிங் சூரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:நிதி, வர்த்தகம், கனரக தொழில் என எந்த அமைச்சகத்தை எடுத்துக்கொண்டாலும், அவை, மூலதன பொருட்கள் துறை கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருவதை அறியும்.இது குறித்த அறிக்கையை உருக்கு, வர்த்தகம், கனரக தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துக்கும் சமர்ப்பித்துள்ளோம்.
இந்நிலையில், மூலதன பொருட்கள் துறையை, சரிவிலிருந்து மீட்க, பயன்படுத்திய பழைய இயந்திரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்.மேலும், பல நாடுகளுக்கு, பழைய இயந்திரங்களை இறக்குமதி செய்வதில் வழங்கும் சலுகைகளையும் நிறுத்த வேண்டும்.இறக்குமதி செய்யப்படும் பழைய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள், உள்நாட்டு மூலதன பொருட்கள் துறையை கடுமையாக பாதிக்கின்றன.
இறக்குமதி செய்த பழைய இயந்திரங்கள் உதவியுடன், புதிய ஆலையை ஆரம்பிப்பது, எந்த வகையிலும் பிரதமரின், ’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உதவாது.புதியது, எப்போதும் புதியதுதான். பழைய இயந்திரங்களை எந்த துறையில் பயன்படுத்தினாலும், அது தயாரிப்புகளின் தரத்தின் மீது பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே கிடையாது.
அரசின் ஆதரவாலும்,சலுகைகளாலும், இன்று பல துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. பல புதிய ஆலைகள் துவங்கப்படுகின்றன. அரசு எந்த காரணத்தை கொண்டும், தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை குறைக்க காரணமாக இருக்கும், பழைய இயந்திரங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் சூரி தெரிவித்துள்ளார்.
பழைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!