திருப்பதி வெங்கடாஜலபதி, பக்தர் ஒருவருக்கு கனவில் காட்சி தந்து, அந்த பக்தரின் ஊரிலேயே கோயில் கொண்டார் என்றால் எப்படி இருக்கும். அவர்தான் தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி சில்கூரில் உள்ள பெருமாள். இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
மாதவரெட்டி என்ற விவசாயி இங்கு வாழ்ந்தார். இவர் திருப்பதி பெருமாளை தரிசிப்பது வழக்கம். முதுமையின் காரணமாக செல்ல முடியவில்லை. உணவு, உறக்கமின்றி அவர் படும் வேதனையை பொறுக்காமல் ஸ்ரீதேவி பூதேவியுடன் கனவில் தோன்றினார் பெருமாள். 'திருப்பதிக்கு வரமுடியவில்லை என மாதவா... கவலைப்படாதே. உனக்காக உன் வீட்டுக்கு அருகில் புற்று ஒன்றில் சிலைவடிவில் இருக்கிறேன். எனக்கு அருகில் ஒரு சிவலிங்கம் இருக்கும்' என்று சொல்லி மறைந்தார். அந்தப் புற்றை வெட்டினார்.
சுவாமியின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் வந்தது. அதிர்ந்து போய் மண்ணைக் களைய வேங்கடவன் சிலை வடிவில் காட்சி தந்தார். மெய் சிலிர்த்துப் போனவர் 'கோவிந்தா கோவிந்தா' என கண்ணீர் விட்டார். தான் கொண்டு வந்த தண்ணீர், பாலால் அபிேஷகம் செய்தார். பின் கோயிலும் உருவானது.
கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. அபய வரத ஹஸ்தத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இன்றும் இவரது இடது புருவத்துக்கு மேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. சுப்ரபாத சேவையின் போது முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சனம் நடக்கும். அப்போது தழும்பைக் காணலாம்.
இங்கு பெருமாளை 11 முறை வலம் வந்து வேண்டுதல் வைப்பர். நிறைவேறியதும் 108, 1008 முறை வலம் வருவர். இதற்கென வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள். அதில் 108, 1008 என்ற எண்ணிக்கையில் கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு சுற்றையும் முடித்தபிறகு ஒவ்வொரு கட்டத்தில் துளையிடலாம்.
கருவறையின் இடப்புறத்தில் ஆஞ்சநேயரும், பிரகாரத்திற்கு வெளியில் கயிலாசநாதரும் காட்சி தருகின்றனர். இந்த சிவலிங்கம்தான் ஆதியில் மாதவரெட்டியின் கனவில் வந்தவர். இங்கு உண்டியல், தட்சிணை கிடையாது. பக்தர்கள் விரும்பினால் கல்கண்டு வாங்கி பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம்.
எப்படி செல்வது: ஐதராபாத்தில் இருந்து 33 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 1800 - 4254 6464
அருகிலுள்ள தலம்: கீசரா குட்டா ராமலிங்கேஸ்வரர் கோயில் 93 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மதியம் 3:00 - 7:00 மணி