சிவபெருமான் அளித்த வரம்
ஜெயத்ரதனின் சிவதவம் மண்ணில் இருந்து தொடங்கி விண்ணில் உள்ள கைலாச பர்வதத்தை முட்டத் தொடங்கியது. ஆத்மசக்தியை தேவமாகிய தவம் என்றும், அதீத சக்தியை அசுரமாகிய தவம் என்றும் சொல்வர். ஆத்மசக்தி புலன்களை ஒடுக்கி விருட்சத்தை விதையாக்கும். அசுரசக்தியோ புலன்களை பெருக்கி விதையை விருட்சமாக்கும்.
ஒன்றுக்கு ஒன்று எதிரானது! அதனாலேயே புலன்களை ஒடுக்கி தவம் செய்யும் முனிவர்கள் தவத்திற்குரிய மூலப்பொருள் தோன்றிடும் போது தங்களை அதனிடம் ஒப்படைத்தார்கள். அதே புலன்களை ஒடுக்கி தவம் செய்யும் அசுரர்களோ தவத்திற்குரிய மூலப்பொருளையே தங்களுக்கென்று கேட்டார்கள்.
நல்ல தவசிகள் கடவுள் தோன்றும் போது உன் திருவடிகளில் அடைக்கலம் தா என்றனர். அசுரர்களோ அதே கடவுள் தோன்றிய போது உன்னையே எனக்குத் தா என்றனர்.
அசுரத்துக்கும் தேவத்துக்கும் இதுவே வேறுபாடு. இங்கே ஜெயத்ரதனும், '' சிவபெருமானே... நான் நீயாக வேண்டும். அதாவது உன்னிடம் உள்ள ஆற்றல்கள் எல்லாம் என்னிடமும் இருக்க வேண்டும்'' என வரம் கேட்டான்.
சிவபெருமான் மோனப்புன்னகை புரிந்தார். ஜெயத்ரதனுக்கு அது கோபத்தை உண்டாக்கியது.
''பெருமானே... எதற்கு இந்த சிரிப்பு''
''அட... கோபம் வந்து விட்டதே உனக்கு''
''வரம் தராமல் நீ சிரித்தால் பதிலுக்கு என்னிடமும் சிரிப்பா வரும்''
''முதலுக்கே நீ மோசம் செய்கிறாய். உண்மையில் நான் தான் கோபப்பட வேண்டும். ஆனாலும் உன் பேராசையை எண்ணிச் சிரித்தேன். அது புரியவில்லையே உனக்கு''
''உனக்கான சக்திகளை நான் அடைய விரும்புவது பேராசையா... எங்கே உனக்கு போட்டியாக நான் வந்து விடுவேன் என்ற பயமா''
''நான் குணமற்றவன். என்னைப் பார்த்து கேட்கும் கேள்வியா இது''
''அப்படியானால் கேட்ட வரத்தை தா''
''நீ சிவமாக வேண்டும் அவ்வளவு தானே''
''அவ்வளவே...''
''என் கைலாசத்துக்கு வந்து எனது கணங்களோடு கலந்து விடு. மீண்டும் பிறவாமல் என்றும் சிவசாயுஜ்யனாக திகழலாம்''
''இல்லை... இல்லை... சிவகணமாகி நான் என்னை இழக்க விரும்பவில்லை. இந்த பூவுலகில் யாராலும் வெல்ல முடியாதவனாக பூவுலக சக்கரவர்த்தியாக திகழ விரும்புகிறேன்''
''இப்படி எத்தனை பேர்தான் கேட்பீர்கள். ஒன்றை ஒருவருக்கு தானே தர முடியும்''
''அப்படி என்னை முந்திக் கொண்டு யார் கேட்டார்கள்''
''என்னிடம் கேட்கத் தேவையே இன்றி வெல்லப்பட முடியாத வரத்தோடு ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கங்காதரன். உன் மைத்துனன் துரியோதனனின் பாட்டன் பீஷ்மன் தான் அவன்.
அடுத்து உன்னை விடவே கடும்தவம் புரிந்து என்னிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்று விட்டான் ஒருவன் அவன் பெயர் அர்ஜுனன். என்னை நினைக்க தேவையின்றி குருபக்தியாலேயே அந்த அர்ஜுனனே வியக்கும் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் ஏகலைவன். நீ எவ்வளவு முயன்றாலும் அழிக்கப்பட முடியாத ஒருவன் இருக்கிறான். உன்னால் மட்டுமல்ல என்னாலும் அவனை ஏதும் செய்ய முடியாது. என்னால் என்ன என்னால்... என் பிரதிபிம்பமான கிருஷ்ணனாலும் ஏதும் செய்ய முடியாத ஒருவனும் இருக்கிறான். அவன் பெயர் கர்ணன். காரணம் அவன் தர்ம கவசம். இத்தனைக்கும் அவனுக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. இப்படி ஒரு பட்டியலே இருக்கிறது. சொல்லிக் கொண்டே போகலாம்''
''பரமேஸ்வரா... அப்படியானால் கடுந்தவம் புரிந்த எனக்கு ஏதும் தர முடியாதா''
''கொடுக்க முடிந்ததைக் கேள். தருகிறேன்''
''பாண்டவர்களை அழித்து திரவுபதியை என் காலடியில் கிடத்தி அடக்கியாள வேண்டும். குறைந்த பட்சம் அந்த வரத்தை மட்டும் தரமாட்டாயா''
''திரவுபதி காமத்தால் பிறந்தவள் அல்ல. யாகத்தால் பிறந்தவள். அவளொரு அக்னி தேவி. அவளை அணைக்க முயன்றால் சாம்பலாவாய். அது மட்டுமல்ல... அவளின் கணவன் அர்ஜுனன் உன்னை முந்திக் கொண்டவன். அவனைக் கடந்து அவளை நெருங்க முடியாது''
''மகாதேவா... எப்படி கேட்டாலும் ஏமாற்றமே அளிக்கிறாய். என் தவம் வீணாவதா...எனக்கு வரம் தர முடியாத சாமான்யனாக நீ ஆகி விடுகிறாயே... அது உனக்கு சம்மதமா''
''தொடக்கத்திலேயே சொன்னேன். நான் குணமற்றவன் என்று! சர்வ சக்தியும் எனக்கு ஒன்று தான். சாமான்யமும் எனக்கு ஒன்று தான்''
''இப்படிச் சொல்லி சமாளிக்காதே. நான் அந்த பாண்டவர்களை அடக்கி ஒடுக்கியே தீர வேண்டும். அதற்கான சக்தியைக் கொடு''
''உனக்காக நான் ஒன்றை வேண்டுமானால் செய்ய முடியும். அர்ஜுனன் நீங்கலாக மற்ற நால்வரால் உன்னை வெல்ல முடியாது. அவர்களை எதுவும் செய்து கொள். சம்மதமா''
''சம்மதம்... அந்த நால்வரை பணயமாக வைத்தே அர்ஜுனன், திரவுபதியை என் காலடியில் விழ வைக்கிறேன்''
'' அந்த வரத்தை தருகிறேன். ததாஸ்த்து'' என்ற மறுநொடி மகாதேவர் மறைந்தார். ஜெயத்ரதனும் வானைப் பார்த்து, ''அடேய் பாண்டவர்களே... உங்களை இனி என்ன செய்யப் போகிறேன் பாருங்கள்'' என தண்ட கமண்டலத்தை வீசி விட்டு கொக்கரிக்கத் தொடங்கினான்.
...
வனக்குடில்!
சோகமாய் அமர்ந்திருந்தாள் திரவுபதி. பாண்டவர் ஐவரும் அரை வட்டமாக அவள் முன்நின்று அவள் சோக முகத்தை பார்த்து வருந்தத் தொடங்கினர். அப்போது தவுமியர், தாத்ரேயிகை, மார்க்கண்டேய மகரிஷியோடு அங்கு வந்தனர்.
மார்க்கண்டேயரை பார்த்ததும் பாண்டவர் முகங்களில் உற்சாகத் தெம்பு. திரவுபதியும் அவர் காலில் மண்டியிட்டு விழுந்து வணங்கினாள்.
''நல்லாசிகள் தாயே! நடந்ததை எல்லாம் அறிந்தேன். வருந்தாதே... எல்லாம் நன்மைக்கே'' என்றார் மார்க்கண்டேயர்.
''மகரிஷி... நாட்டை விட்டு ஒதுங்கி காட்டுக்குள் ஆதரவின்றி மிருகம், தாவரங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கேயும் தொல்லைகள் எங்களை தொடர்ந்து வருவது நியாயமா'' என தர்மன் வருத்தமுடன் பேச்சைத் தொடங்கினான்.
''தர்மா... சோதனை இல்லாத வாழ்வில் சாதனைக்கு இடமேது... இதை நீ அறியாதவனா''
''மகரிஷி... சாதனையே ஒருவகை மாயை தானே! அப்படியிருக்க சோதனை எதற்கு... நாங்கள் கூட தாங்கி விடுவோம். ஆனால் பாவம் திரவுபதி... மகாராணியாக வாழ வேண்டியவள் எங்களால் இந்த குடிசையில் தினமும் சோதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். அதுதான் வருத்துகிறது''
''வலி தானே வலிமை என்றாகிறது. சீதைக்கு நேராத ஒன்றா இந்த பேதைக்கு நேர்ந்து விட்டது'' என மார்க்கண்டேயர் ராமாயணத்தை தொட்டுப் பேசத் தொடங்கினார். அந்த காம்யக வனமும் அதைக் கேட்கத் தயாரானது.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்
98947 23450