கிருஷ்ணரின் காதலியான ராதாராணி பிறந்த ஊரில் அவளுடன் காட்சி தரும் கோயில் உத்தரபிரதேச மாநிலம் பர்சானா மலையில் அமைந்துள்ளது.
கறுப்பான என்னை ராதா காதல் செய்கிறாளா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என தாயாரிடம் யோசனை கேட்டார் கிருஷ்ணர். தாயாரின் சொற்படி வண்ணப்பொடிகளை ராதா மீது துாவ... அமைதியாக இருந்து பதிலுக்கு கிருஷ்ணர் மீது பொடிகளை துாவி தன்னுடைய காதலை வெளிப்படுத்தினாள். இந்த நிகழ்ச்சியை தான் மக்கள் ஹோலி திருவிழாவாக உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். உத்தரபிரதேசம் மதுரா மாவட்டத்தில் உள்ள இந்நகரில் இவ்விழா பிரபலம். இங்குள்ள நான்கு மலைகளை பிரம்மாவின் தலை என பக்தர்கள் போற்றுகின்றனர். அதற்கு ஏற்றாற்போல மலைஅடிவாரத்தில் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது. ராதாவின் பெற்றோரான விருஷபானு கீர்த்தி தம்பதியினருக்கும் மலை அடிவாரத்தில் கோயில் உள்ளது.
இங்குள்ள நான்கு மலைகளில் ஒன்றான பானுகார்க் மீது கிருஷ்ணரின் காதலி ராதாவிற்கு கோயில் உள்ளது. அங்கு பளிங்கு கற்களில் வடிவமைக்கப்பட்ட ராதா கிருஷ்ணர் கருவறையில் காட்சி தருகின்றனர்.
ராதாவிற்கு தனியாகவும் சன்னதி உள்ளது. இவர்களை ஸ்ரீஜி (அன்புடையவர்கள் என்பது பொருள்) என பக்தர்கள் அழைக்கின்றனர். கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமியில் இருந்து எட்டாவது நாள் ராதாஷ்டமி ஆகிய இரு தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றன. அப்போது 56 வகையான பிரசாதங்களை நிவேதனம் செய்வர்.
பூஜை முடிந்த பிறகு அங்கு கோயிலில் வளர்ந்து வரும் மயிலுக்கு படைக்கப்பட்ட பிரசாத லட்டினை உணவிடுவது ராதா கிருஷ்ணருக்கே கொடுப்பதாக ஐதீகம். ஹோலியின் ஒரு வாரத்திற்கு முன்பே விழாக்கோலத்தில் இந்நகர் ஜொலிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைப்பர். முன்னொரு காலத்தில் நாராயணபட் என்பவர் சிதைந்திருந்த இக்கோயிலில் திருப்பணிகள் செய்தார். பின்னர் இப்பகுதியை ஆண்ட ராம்வீர்சிங் என்ற மன்னர் விரிவாக இக்கோயிலை கட்டினார்.
எப்படி செல்வது: மதுராவில் இருந்து 50 கி.மீ.,
விசேஷ நாள்: வசந்தபஞ்சமி, ஹோலி குருபூர்ணிமா
நேரம்: அதிகாலை 5:00 - 1:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 099992 94729
அருகிலுள்ள தலம்: மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி 50 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 0565 - 242 3888
காதலிக்கு ஒரு கோயில்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.