Load Image
Advertisement

பச்சைப்புடவைக்காரி - 46

மறுக்கப்பட்ட பதவி உயர்வு

“என் புருஷனுக்கு என்னமோ ஆயிருச்சியா. சாமானெல்லாம் போட்டு உடைக்கறாரு. கண்டபடி திட்டுராரு”
“ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணுங்கம்மா.”
“வெளிய தெரிஞ்சா அசிங்கமாயிரும்யா. நீங்க சொன்னா கேப்பாருன்னு தோணுது” ஓடினேன்.
பாலாஜியை எனக்கு தெரியும். தனியார் நிறுவன அதிகாரி. பச்சைப்புடவைக்காரியைப் பற்றி அடிக்கடி என்னிடம் பேசுவார்.
பாலாஜி வீடு இருந்த தெருவில் வெற்றிலை மென்றபடி நின்ற பெண் என்னை தடுத்தாள்.
“அவசரமா என்ன?”
“ஒரு ஆளு சாகாமச் செத்துக்கிட்டிருக்கான்.”
“நீ போய்க் காப்பாத்திருவையாக்கும்?”
தாயை அடையாளம் கண்டு வணங்கினேன்.
“மோசமான நிலையில் உள்ளான். உன் மனதில் நான் தோற்றுவிப்பதை சொல்லு”
பாலாஜியின் வீட்டில் புயலுக்குப் பின் இருக்கும் மயான அமைதி நிலவியது. அவரது மனைவி என் வருகையை அறிவித்தாள்.
கதவைத் திறந்து பாலாஜி வெளியே வந்தார். ஆடைகள் கிழிந்திருந்தன.
“பத்து வருஷமா மேனேஜர் பதவிக்காக தவமிருந்தேன். பரீட்சையெல்லாம் எழுதி பாஸ் பண்ணேன். யாரை எல்லாமோ காக்கா பிடிச்சேன். அடுத்த வருஷம் வந்துரும்னு ஆசைகாட்டி பத்து வருஷத்த ஓட்டிட்டாங்க. பச்சைப் புடவைக்காரி கோயில எத்தனை தரம் சுத்தி வந்தேன். ஆபீசில சாதாரண பிரமோஷனக் கொடுக்க முடியாதவளால எப்படி முக்திய தர முடியும்?”
“நான் என்ன சொல்றேன்னா...''
“நிறுத்துங்க சார். அன்பு குறைஞ்சதாலதான் இந்த நிலைமை. இன்னும் அன்பு காமிங்கன்னு சொல்லப்போறீங்க!”
“இல்ல”
நான் கத்திய கத்தலில் மனிதர் அடங்கினார்.
“அப்புறம்?”
“பொள்ளாச்சி பக்கத்துல ஒரு அனாதை ஆசிரமத்துல பச்சைப்புடவைக்காரி கோயில் இருக்கு. ஒரு தரம் போயிட்டு வந்திருங்க”
“நீங்க இப்படி சொல்லவேமாட்டீங்களே!”
“எல்லாம் அவ சொன்னது.”
சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினேன்.
தெருமுனையில் நின்ற பச்சைப் புடவைக்காரியிடம்,“அன்பின் வழியைக் காட்டாமல். இப்படி...''
“இதுவும் அன்பின் வழிதான்”
“எப்படி?”
“என்ன நடக்கிறது என்று பார்”
காட்சி விரிந்தபோது பாலாஜியும் அவரது மனைவியும் அனாதை ஆசிரம வளாகத்தின் நடுவே இருந்த கோயிலுக்குள் நுழைந்தனர். தீபாராதனையின் போது பாலாஜியின் மனதில் ஓடிய நினைவும் தெளிவாகத் தெரிந்தது.
“இன்னும் ஒரே மாதத்தில் பதவி உயர்வு எனக்கு கிடைக்கவேண்டும்”
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி.
கோயிலைவிட்டு வந்தபோது ஆசிரமத்தின் தலைவி பாலாஜியைப் பார்த்தாள்.
பூஜாரி பாலாஜியை அறிமுகப்படுத்தினார்..
“மதியச் சாப்பாடு நம்ம வீட்டுலயே வச்சிக்கலாம்” என்றாள். அவரும் சம்மதித்தார்.
“ஆசிரமத்துல இருக்கற குழந்தைங்களப் பாத்துட்டு வரலாமே”பாலாஜி பின்தொடர அருகே இருந்த கட்டிடத்திற்குள் தலைவி நுழைந்தாள். அந்த நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைச் சொல்லியபடி வந்தாள்.
2 முதல் 17 வயது வரையான இருபது குழந்தைகள் இருந்தன. ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு சோகக்கதை இருந்தது. மிகவும் சோகம் பானு என்ற குழந்தைதான். கை கால் சரியாக இல்லை. தவழ்ந்துதான் செல்லவேண்டும் என்ற நிலை. பானுவைப் பார்த்த பார்வையில் பாலாஜி கலங்கிவிட்டார். தலைவி, “நாம எல்லாம் வீடு இல்லையே, சம்பளம் உயரலையே, கார் வாங்க முடியலையேன்னு கவலைபடுறோம். இவ அதுக்கெல்லாம் ஆசைப்படல. அடிப்படை வசதி, குறைந்தபட்ச பாதுகாப்பு இருந்தா பானுவுக்குப் போதும். ஆனா அதுவும் கிடைக்கலையே. உடம்புல குறைபாடு இருந்தாலும் மனசளவுல நல்லாத்தான் இருந்தா. இவளுக்குப் பத்து வயசாகும்போது இவளது தாய்மாமாவே கற்பழிச்சிட்டான். அதுலருந்து புத்தி கலங்கிருச்சி. அப்பன்காரன் எவளையோ இழுத்துக்கிட்டு ஓடிட்டான். அம்மாவோ தற்கொலை பண்ணிட்டா. பானு எந்த நம்பிக்கையில வாழறான்னு தெரியல. குணப்படுத்த முடியாதுன்னு டாக்டருங்க கைவிரிச்சிட்டாங்க. இந்த பொண்ணு சாமி காப்பாத்துன்னு சொல்லும்போது அழாம இருக்கமுடியாது” என்றாள்.
பாலாஜியின் கண்கள் நிறைந்துவிட்டன. அதன்பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
வெளியே வரும்போது தலைவி கேட்டாள்.
“சாப்பாடு ரெடியாக அரை மணி நேரமாகும். டீ, காபி தரச் சொல்லட்டுமா?”
“வேண்டாம், மேடம். இன்னொரு தரம் கோயிலுக்குப் போகணும். அப்புறம் உங்கள ஆபீஸ்ல சந்திச்சி முக்கிய விஷயம் பேசணும்”
“வாங்க போகலாம்”
பூஜாரி இரண்டாம் முறையாக தீபாராதனை செய்த போது பாலாஜியின் மனம் நீவிவிட்டதுபோல் சுத்தமாக இருந்தது. கண்ணீர் மல்க, “தாயே! எனக்கு பதவி உயர்வு வேண்டாம். பரங்கிக்காயும் வேண்டாம். இருக்கும் பதவியில் கிடைக்கும் சம்பளத்தில் என் காலத்தை ஓட்டி விடுகிறேன். குழந்தை பானுவிற்காக மடியேந்தி பிச்சை கேட்கிறேன். பதவி உயர்வுக்காக பிரார்த்தித்தது முட்டாள்தனம் என புரியவைத்த என் ஞானகுரு அவள். நான் மனதில் நினைத்து வைத்திருக்கும் குருதட்சிணையைத் தர நீங்கள்தான் உதவ வேண்டும்”
பாலாஜியின் முகத்தில் இருந்த ஒளி, தெளிவையும் பார்த்து அவர் மனைவி வியந்தாள். ஆனால் ஏதும் பேசவில்லை.
“என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களே, வாங்க ஆபிசுக்குப் போகலாம்” தலைவி அழைத்தாள்.
பாலாஜி மென்மையாகப் பேசினார்.
“மேடம் பச்சைப்புடவைக்காரி எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கொடுக்கல. எனக்கு குழந்தைய தத்தெடுத்துக்கறதுல நாட்டமில்ல. இருந்தாலும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். மாலதியும் சம்மதிப்பாள்னு நெனைக்கறேன்.
“பானுவ எங்க மகளா தத்தெடுத்துக்கறோம். அவ இங்கே வளரட்டும். மாசா மாசம் எங்க மகளப் பாக்க வருவோம். அவளுக்கு ஆகற செலவெல்லாம் நாங்க ஏத்துக்கறோம். எங்களால முடிஞ்ச அளவுக்கு மருத்துவம் பாக்கறோம். நான் கும்பிடற மகா மருத்துவச்சி மனசு வச்சா பானுவுக்கு குணமாயிரும்.”
தலைவி எழுந்து வணங்கினாள்.
காட்சி முடிந்ததும் பச்சைப்புடவைக்காரி, “பாலாஜியின் கர்மக்கணக்கு சரியில்லை என்பதால் கடைசிவரை பதவி உயர்வு கிடைக்காதபடி செய்துவிட்டேன் பார்த்தாயா?”
“யாரிடம் கதை அளக்கிறீர்கள்? அந்தப் பதவி உயர்வைவிட லட்சம் மடங்கு மதிப்புள்ள புரிதலை பாலாஜிக்குக் கொடுத்தீர்கள். பத்து பிறவிகளில் பாலாஜி பெற வேண்டிய ஆன்மிக வளர்ச்சியை பத்தே நிமிடத்தில் கொடுத்தீர்கள். நுாறாண்டு தவமிருந்து பெற வேண்டிய அன்பை சில நொடிகளில் கொடுத்தீர்கள்.
“எனக்குக் கிடைக்கவேண்டிய நுாறு ரூபாய் வரவில்லையே எனக் கவலைப்பட்டார் பாலாஜி. நுாறு ரூபாய்க்குப் பதிலாக ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்தை அனாயாசமாகத் துாக்கிக் கொடுத்துவிட்டீர்கள். அன்பை வர்ணிக்கும் வார்த்தைகளை உங்களாலும் கொடுக்கமுடியாது, தாயே!”
அன்னை முறுவலித்தபடி மறைந்தாள். நான் தனியாக அழுதுகொண்டிருந்தேன்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement