Load Image
Advertisement

ஆண்டாளும் அற்புதங்களும் - 16

பாசுரங்களால் பைந்தமிழை ஆண்ட பேரரசி

ஆண்டாள் ஒரு அதிசயத்தக்க ஆளுமை என்பது அனைவரிடமும் சென்று அடைந்ததில் அவளது கவித்துவமான பாசுரங்களுக்கு பெரிய பங்குண்டு. தமிழ் மண்ணிலே பிறந்து நம் தமிழ் மொழியிலே பாசுரங்களை படைத்து விட்டுச் சென்றிருக்கிறாள். நாம் எல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! ஒரு தோழியாக வழிகாட்டியதோடு தாயாக நம்மையெல்லாம் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறாள். ஒரு ஆசிரியர் போல இதுதான் பாதை எனச் சுட்டிக் காட்டுகிறாள். இறுதியில் ஒரு தெய்வ வடிவாகி நாம் போக வேண்டிய பாதைக்கு அருளாசியும் வழங்கி இருக்கிறாள்.
தமிழில் ஆண்டாளை வாசிக்காத கவிஞர்கள் இருக்க முடியாது. எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்தவள் எனும் பட்சத்தில் தமிழின் மிக மூத்த கவிஞர் ஆகிறாள். கம்பன் உட்பட பெருவாரியானவர்கள் அவளுக்குப் பின் வந்தவர்கள் தான். அவள் கவிதைகளை வாசிக்காமல் யாரும் இங்கு கவிஞராகி இருக்க முடியாது. அந்த வகையில் பார்க்கும்போது இந்த கவிதை மண்டலத்தின் பேரரசியாக விளங்குவது ஆண்டாள் தான். அவளது பாசுரங்களால் பைந்தமிழை ஆண்ட பேரரசியாகிறாள். அவள் கவிதைக்குள் நாம் இறங்கிப் போவது என்பது எப்படி தெரியுமா?
2018 ஆம் ஆண்டு தாமிரபரணி புஷ்கரணிக்கு பாபநாசம் சென்றிருந்தபோது கண்ட ஒரு காட்சி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீராட வந்தனர். படித்துறையில் ஐந்து படிகள் வரை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஐவரில் ஒருவர் ஐந்தாம்படியில் நின்று கால் மட்டும் நனைந்தால் போதும் என ஒரு குவளையில் நீரை முகர்ந்து மேலே ஊற்றிக் கொண்டிருந்தார்.சரி, இன்னும் கொஞ்சம் கீழ் இறங்கி முழங்கால்வரை நனைத்துக் கொண்டு குளித்தார் இரண்டாமவர். மூன்றாமவரோ கீழிறங்கி இடுப்பு வரை நீர் சூழ்ந்தபடி நின்று குளித்தார். அட, இதெல்லாம் போதாது எனக்கு என்றுச் சொல்லி தலை மட்டும் நீருக்கு மேல் தெரிய நின்று குளித்தார் நான்காமவர். ஐந்தாமவரோ, சீருகிற ஆற்றின் உள்ளே சென்று முழுதும் மூழ்கிக் குளித்தார். இங்கே பார்த்தால் ஒருவர் ஐந்தாம் படியில் இருக்கிறார், மற்றொருவர் மூன்றாம் படியில் இருக்கிறார், மற்ற மூவரும் உள்ளே இறங்கி முங்கி, மூழ்கிக் குளித்தார்கள். இதில் யார் யாருக்கு எப்படி வசதியோ அப்படி குளித்தார்கள். அது மட்டுமல்லாமல் அவரவருக்கு ஒரு உயரம் இருக்கிறது அல்லவா, அதற்கு ஏற்பவும் படியில் நின்று குளித்தார்கள். இதில் நீரென்று பார்க்கும்போது உடலின் உயரம் முன்னே நிற்பது போல் ஆண்டாளின் பாசுரங்களுக்குள் பார்க்கும்போது நம் மனதின் உயரம் அந்த கவிதை வனத்துக்குள் முந்திச் செல்லும்.
ஆம், திருப்பாவை பாசுரங்களில் நுழைந்து பாசுர அழகை காதலித்து கவிஞராக அதிலே நீந்தி வரவும் முடியும். பக்தி இலக்கியமாக பார்த்து அதில் இருக்கக் கூடிய பக்தி ரசத்தில் தோயவும் முடியும். தத்துவரீதியாக அணுகி அதிலுள்ள தத்துவ முத்துக்களை அள்ளி சேகரிக்கவும் முடியும். ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் எந்த படியில் நாம் இருந்தாலும் நம்மை காப்பாற்றி கரை சேர்த்து விடும் பணியை ஆண்டாள் செவ்வனே செய்கிறாள்.
நாச்சியார் திருமொழியிலும் எத்தனை அழகான இனிமையான பாசுரங்கள். அதிலும் கலிப்பா வடிவில் எழுதி இருக்கிறாள். கலிப்பா என்பது கடினமான ஒரு வடிவம். இது மிக அரிதான இலக்கண ஞானம் படைத்தவர்களால் மட்டுமே எழுதக்கூடிய கவி வடிவம். இப்படி ஒரு அனுகிரகத்துடன் பிறந்தவள் தான் ஆண்டாள். நாச்சியார் திருமொழியில் அவள் கவித்துவமாக இயற்கை பொருட்களிடம் பேசும் அழகை பார்ப்போம்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்கிறாள், ''கண்ணா உன்னால் எனக்கு ஒரு ஐந்து பொருட்களை பிடிப்பதே இல்லை” என்று. அட, அது என்ன ஐந்து பொருட்கள்? முதலில் குவளை மலர்களைக் கண்டால் எனக்கு பிடிக்காது என்கிறாள். அடுத்ததாக குயிலே உன்னை பார்த்தாலும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் கூவாதே என்கிறாள். அடுத்து, மயிலே தோகையை விரித்து ஆடாதே என்கிறாள். கருவிளம்பூவே... என் முன்னே வராதே. அப்படி வந்தாலும் எனக்கு காட்சி தராதே என்கிறாள். அட, அந்த கலாக்கனியை கண்டாலும் பிடிப்பதில்லை என்கிறாள். இந்த ஐந்தும் பாதகத்திகள் என குறிப்பிடுகிறாள். அப்படி என்ன பாதகம் செய்தார்கள்? குயில், மயில், குவளை மலர், கருவிளம்பூ, கலாக்கனியும் என் மனம் கவர்ந்தவனின் நிறத்தில் இருக்கிறதே. அதனால் அருகே வராதீர்கள். அவனை எனக்கு ஞாபகப்படுத்தாதீர்கள் என்கிறாள்.
அது மட்டுமா! இயற்கையோடு இணைந்த கவிதாயினி அல்லவா அவள்! இன்னும் என்னென்ன சொல்கிறாள் பாருங்கள். ஏ கோவைப்பழமே... நீ பிளந்திருப்பதை பார்த்தால் என் மாதவனின் இதழ்களை நினைவூட்டுகிறது. முன்பு ஒரு நாளில் இதே போன்ற கோவைக்கனி போன்ற இதழ்களால் அவன் என்னிடம் அஞ்சாதே என்றான். ஆனால் அவன் இன்னும் வந்து 'பயம் கொள்ள வேண்டாம்' என என்னை பார்த்து தேற்றவில்லை. சொன்னவன் சொன்னவன் தான். அப்படிச் சொன்ன அந்த பெருமான் துயில் கொள்ளும் படுக்கையான பாம்பைப் போல அவனுக்கு என்ன இரண்டு நாக்குகளா என்கிறாள்? மேலும் குயிலைப் பார்த்து, ''ஏ குயிலே நீ கூவாதே” என்று.. அந்தக் குயிலோ இவளிடம், ''கூவுவது மட்டுமே எனக்குத் தெரிந்த தொழில். அதையும் நான் செய்யாது என்ன செய்வது?” என்று இவளிடம் கேட்கிறது. ''என்றைக்கு திருமலையில் இருக்கக்கூடிய ஸ்ரீனிவாசன் என்னை திருமணம் செய்கிறானோ அன்று முதல் நீ கூவுவாயாக'' என்கிறாள்.
அடுத்து மேகங்களை பார்க்கிறாள். மேகங்களே... கடல் நீரை முகர்ந்து வந்து பின் தான் அதை மழையாக மாற்றி வழங்குகிறீர்கள். ஒருவேளை அந்த கடலானது வற்றிப் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? எப்படி மழையை தருவீர்கள்? அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் மேகமே நீ கவலை கொள்ளாதே! கோதையினுடைய கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரை முகர்ந்து கொண்டுச் செல்லுங்கள். அப்படி முகர்ந்து கொண்டு செல்லும் என் கண்ணீரை திருமலையில் வசிக்கக்கூடிய ஸ்ரீனிவாசனின் தலைமீது பொழியுங்கள். அப்போது ஸ்ரீனிவாசன் உங்களைப் பார்த்து கேட்பான், ''மழை எங்காவது சுடுமா என்று?” உடனே நீங்கள் அந்த மாயவனிடம் சொல்லுங்கள், நாங்கள் இதை கடலில் இருந்து முகர்ந்து கொண்டு வரவில்லை. கோதையினுடைய சுடும் கண்ணீரிலிருந்து முகர்ந்து கொண்டு வந்தோம். அதனால்தான் மழை சுடுகிறது என்று சொல்லுங்கள் மேகங்களே என்று சொல்கிறாள்.
அடுத்ததாக மழைக்கு வருகிறாள். மெழுகு விளக்கை பார்த்திருக்கிறீர்களா? அந்த காலத்தில் மெழுகு உருகி வெளியேறாமல் இருக்க மெழுகு விளக்கை சுற்றிலும் களிமண் வைத்து நிரப்பி இருப்பார்கள் போலும். சுற்றி இருக்கின்ற களிமண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருக்கும் மெழுகு உருகுகிறது அல்லவா? அப்படித்தான் அந்த மாதவன் வந்து என்னை திருமணம் செய்து கொள்வான் என்கின்ற ஏக்கத்தால் எனது உயிர் உடலுக்குள் உருகி உருகி போகிறது. இந்த உருக்கம் நிற்க வேண்டும் என வாழ்த்து சொல்லுவாய் மழையே என்கிறாள்.
பின்னொரு வேளையில் கடலைப் பார்த்து அவள் இப்படிச் சொல்கிறாள். ''கடலே... கடலே…அவன் உனக்குள் புகுந்து அமுதத்தை எடுத்தான் அல்லவா? அப்படித்தான் அவன் எனக்குள் புகுந்து என் உயிர் என்னும் அமுதத்தை கடைந்து எடுத்துச் சென்று விட்டான். அதை அவன் எப்போது திரும்ப கொடுப்பான் எனக் கேட்டுச் சொல்வாய் கடலே” என்று பேராவலுடன் கேட்கிறாள்.
இப்படி நாச்சியாரின் கவிதைகளில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டால் கலங்காத மனங்கள் கூட கலங்கும். அப்படி ஒரு மாபெரும் காதல். காதல் மட்டுமல்ல, என்ன ஒரு உணர்வு அலை!
சங்க கால மரபில் 41 பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய நீட்சியாக இருப்பவள் ஆண்டாள். ஒரு கவிதாயினியாக அவளைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அவளுடைய ஆசிர்வாதம் இருந்தால் தான் எழுத்துக் களத்தில் தொடர்ந்து காலுன்றி நீடித்து நிற்க முடியும் என்பது உண்மை. அவளைச் சரணடைந்து ஆசிகளை பெறுவோம்... வாருங்கள்!
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement