கேரளா மலப்புரம் காடாம்புழாவில் இருக்கும் பழமையான அம்மன் கோயில் இது. பக்தர்களுக்கு வேண்டுதல்கள் இங்கு நிறைவேறுகின்றன. வாங்க தரிசிப்போம்.
சந்தோஷம் நிலைக்க...
வனமாக இருந்த இப்பகுதி வழியாக ஆதிசங்கரர் வரும் போது ஒரு பேரொளி தோன்றுவதை கண்டார். அதன் அருகே நெருங்க முடியாத அளவிற்கு சூடு அதிகமாக இருந்தது. காரணம் எதுவாக இருக்கும் என தெரிந்து கொள்ள மகாவிஷ்ணுவை தியானித்தார். அவரின் அருளுடன் அதை நெருங்கும் போது பூமிக்குள் சென்று அந்த ஒளியானது மறைந்தது. அது அம்மனின் சக்தி என்பதை உணர்ந்தார். அதுவே நாளடைவில் பகவதியம்மன் கோயிலாக உருவாகியது. அவ்விடத்தில் பிரம்பு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.
பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு அருள்செய்ய கயிலாயத்தில் இருந்து வேடுவனாக வந்தார் சிவபெருமான். அவருடன் வந்த பார்வதிக்கு தாகம் எடுத்தது. சுவாமி அம்பு எய்து கங்கையை வரவழைத்து கொடுத்தார். இதை மலையாளத்தில் காடன்அம்பு எய்த அழா என்பர். அப்பெயரே மருவி இப்பகுதிக்கு காடாம்புழா என நிலைத்து விட்டது. சுவாமியுடன் வந்த அம்மனே இங்கு கோயில் கொண்டுள்ளார். இங்கு அம்மனுக்கு நடைபெறும் லட்சார்ச்சனை பிரசித்தி பெற்றது. இங்கு நரசிம்மர், சக்கரத்தாழ்வார், நாககன்னியர், ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. வேண்டுதலுக்காக நிறைவேற்றப்படும் பூச்சொரிதல், நேராக உடைக்கும் தேங்காய் பிரார்த்தனை முக்கியமானது. சந்தோஷம் நிலைக்க தேங்காய் உடைப்பு பிரார்த்தனை செய்யுங்கள். நிம்மதியாக வாழுங்கள்.
எப்படி செல்வது : மலப்புரம் - கோழிக்கோடு சாலையில் உள்ள வெட்டிச்சிராவில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடி செவ்வாய் வெள்ளி, புரட்டாசி நவராத்திரி தை செவ்வாய், வெள்ளி
நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0494 - 261 5790
அருகிலுள்ள தலம்: குருவாயூரில் இருந்து 53 கி.மீ.,
நேரம்: அதிகாலை 3:00 - 1:00 மணி; மாலை 4:30 - 9:15 மணி
தொடர்புக்கு: 0487 - 255 6335
சந்தோஷம் நிலைக்கணுமா...
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.