Load Image
Advertisement

பச்சைப்புடவைக்காரி - 39

நான் அமைச்சராக முடியாதா?

“நான் ராமசுந்தரம். ஒரு அரசியல் கட்சியில பெரிய பொறுப்புல இருக்கேன். இப்பவே உங்க கணக்குக்கு கோடி ரூபாய மாத்திவிட்டுடறேன். வேலை முடிஞ்சதும் எவ்வளவு கேட்டாலும் தரத் தயாரா இருக்கேன்”
கட்சிக்கரையுடன் வேட்டி, வெள்ளைச் சட்டை. இளமையான, துடிப்பான தோற்றம்.
“எனக்கு எதுக்கு கோடி ரூபாய்? நான் அரசியல்லயும் இல்லை. வியாபாரியும் இல்ல. பதிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள என்னால உங்களுக்குத் தர முடியாது”
“நீங்க மனசு வச்சா பத்தாயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பொருள எனக்கு தரலாம்”
“அப்படி என்ன பொருள்?”
“அடுத்த மாசம் மந்திரி சபையில அதிரடி மாற்றம் நடக்கப் போகுது. புதுமுகங்கள அறிமுகப்படுத்தப் போறதா பேச்சு அடிபடுது. எனக்கு மந்திரி பதவி கெடைக்கணும்”
“அமைச்சர் பதவி கெடைச்சா நிறைய சம்பாதிக்கலாம். கையில் அதிகாரத்த வச்சிக்கிட்டு ஆட்டிப் படைக்கலாம். அதுதானே உங்க ஆசை?”
“இல்லங்க. இன்னிக்கு அரசியல்ல எந்தளவுக்கு ஒழுங்கா இருக்க முடியுமோ அந்தளவுக்கு ஒழுங்கா இருக்கேன். சினிமா உலகத்துல கற்பக் காப்பாத்திக்க முடியாது. அரசியல்ல காசு வாங்காம இருக்கமுடியாது. இருந்தாலும் அரசியல் விதிகளுக்கு உட்பட்டு மக்களுக்கு என்னால முடிஞ்ச நல்லதச் செய்யலாம்னு'' மவுனமாக இருதேன்.
“ஐயா, நான் பச்சைப்புடவைக்காரியோட பக்தன். அவதான் எனக்கு எல்லாம். நான் அமைச்சராகணும்னு தினமும் அவகிட்ட வேண்டிக்கிட்டிருக்கேன்”
“நானும் பிரார்த்தனை செய்றேன்.”
“ஒரு கோடிய எப்போ கொடுக்கட்டும்?”
“இப்ப வேண்டாம். பின்னால பாக்கலாம்”
ஒரு மாதம் கழித்து ராமசுந்தரம் அலைபேசியில் அழைத்தார்.
“எல்லாமே போச்சு. பல வருட நம்பிக்கை வீணாக போச்சு. பச்சைப்புடவைக்காரிக்காக விரதமிருந்தது விரயமாப் போயிடுச்சு”
“என்னாச்சு?”
“வயசு குறைச்சலா இருக்கு. அடுத்த தேர்தல்ல ஜெயிச்சாப் பாத்துக்கலாம்னு முதலமைச்சர் சொல்லிட்டாராம்யா. பச்சைப்புடவைக்காரிய கும்பிட்டதுக்கு என்ன வச்சிச் செஞ்சிட்டாய்யா அந்த வஞ்சகி. அவளப் போய் கருணைக் கடல்னு சொல்றீங்களே, உங்களச் சொல்லணும்”
பதில் சொல்வதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ராமசுந்தரம் கனமான நினைவாக மனதில் உறைந்து போனார். அன்று கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.
“உடனே இந்தக் கடைக்குப் போ”
“யார் நீங்கள்? நான் கோயிலுக்குப் போகிறேன் என உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்.கோயிலில் இருப்பவளே சொல்கிறேன். நான் சொல்லும் கடைக்கு ஓடு”
தாயை வணங்கி விட்டு ஓடினேன்.
அது பெரிய மின்னணு சாதனம் விற்கும் கடை. அங்கே அரசியல் தலைவர் ராமசுந்தரம் கடைக்காரரோடு விவாதம் செய்து கொண்டிருந்தார்.
“இத திருப்பி எடுத்துக்கங்க. டப்பாவ கூடப் பிரிக்கல. இதுக்கு யார் பணம் கட்டினாங்களோ அவங்கள வரச் சொல்றேன். பணத்த திருப்பிக் கொடுத்திருங்க”
கடைக்காரர் பயந்து போயிருந்தார்.
டப்பாவைப் பார்த்ததும் உள்ளே என்ன இருந்தது எனப் புரிந்தது.
“சார் இது பிளே ஸ்டஷேன். பசங்க இத வச்சிக்கிட்டு வெளையாடினா நேரம் போறதே தெரியாது. உங்க வீட்டுல''
“பசங்க இருக்காங்க. என் பையனுக்கு 12 வயசு. இது வேணும்ன்னு கட்சியோட துணைத் தலைவர்கிட்ட கேட்டிருக்கான். அவரும் 3 லட்சத்தப் போட்டு இத வாங்கி வீட்டுல கொண்டு வந்து இறக்கிட்டாரு.”
“நல்லதாப் போச்சுன்னு விடவேண்டியதுதானே? இத ஏன் திருப்பிக் கொடுக்கறீங்க?”
“நீங்க வேற! மூணு லட்சரூபாய்க்கு வெளையாட்டுப் பொருள் வாங்க முடியும்னா அவன் கெட்டுக் குட்டிச்சுவராப் போயிருவான். பெரிய விஷயம் கெடைக்கணும்னா அதுக்காகக் கஷ்டப்படணும், காத்திருக்கணும்ங்கற பாடத்தக் கடைசி வரைக்கும் கத்துக்க மாட்டான். பணம் இருக்குங்கறதுக்காகப் செல்லம் கொடுத்துக் கெடுக்கறது பெரிய தப்பு”
பச்சைப்புடவைக்காரி என்னை அனுப்பிய காரணம் தெளிவாகத் தெரிந்தது. அவளை வேண்டிக்கொண்டேன். அவளே வார்த்தைகளாக மலர்ந்தாள்.
“உங்க பையனுக்கு ஒரு சட்டம் உங்களுக்கு ஒரு சட்டமா?”
“என்ன உளறுறீங்க?”
“12 வயசு பையன் ஆசைப்பட்ட மூணு லட்ச ரூபாய் பொருள வாங்கிக்கொடுத்தா கெட்டுப்போவான்னு நெனக்கறீங்க. ஏன்னா நீங்க ஒரு பொறுப்பான தந்தை. அதே மாதிரி உங்களுக்கு 36 வயசுல அமைச்சர் பதவி கெடைச்சா நீங்க கெட்டுப்போயிருவீங்கன்னு பச்சைப்புடவைக்காரி நெனைக்கறா. ஏன்னா அவ பொறுப்பான தாய். ஏற்கனவே கட்சிக்காரங்க உங்கமீது பொறாமையில இருக்காங்க. திடீர்னு அமைச்சர் பதவி கெடைச்சா பொசுங்கிப் போயிருவாங்க. உங்கள எப்படி கவிழ்க்கணும்னு திட்டம் போடுவாங்க. கஷ்டப்படுவீங்க.அடுத்த தேர்தலுக்குள்ள கட்சியில உங்க செல்வாக்கு அதிகமாயிரும். உங்க கட்சியில இருக்கற பல பெரிய தலைகள் தேர்தல்ல மண்ணைக் கவ்வும்போது நீங்க மட்டும் ஜெயிச்சி, உங்களுக்கு அமைச்சர் பதவியக் கொடுத்தா தப்பாத் தெரியாது. பெரிய விஷயங்களுக்குக் கஷ்டப்படணும், காத்திருக்கணும்ங்கற பக்குவமும் உங்களுக்கு வந்திருக்கும்.
“பச்சைப்புடவைக்காரி பதவி கொடுக்கலேன்னு தெரிஞ்சவுடன வஞ்சகி, கிராதகின்னு திட்டினீங்களே, அது மாதிரி உங்க பையன் திட்ட மாட்டான். கொஞ்ச நாளைக்குக் கோபமா இருப்பான். அப்புறம் உங்க அன்பைப் புரிஞ்சிப்பான்யா”
இருப்பது கடை என்பதை மறந்துவிட்டு ராமசுந்தரம் அழத் தொடங்கினார்.
பின் கண்களைத் துடைத்தபடி, “உங்க பேங்க் விபரங்களக் கொடுங்க. கோடி ரூபாய உங்க கணக்குக்கு மாத்திவிட்டுடறேன்”
“வேண்டாம்யா. அந்தப் பணத்தில ஏதாவது நல்ல காரியம் பண்ணுங்க. உங்க தொகுதில பள்ளிக்கூடங்களுக்கு இன்னும் வசதிகளச் செய்யுங்க. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துங்க. ஒரு தலைமுறையே உங்கள வாழ்த்தும். பெரிய பதவிகள் எல்லாம் உங்களத் தேடி வரும்”
கடையை விட்டு வெளியேறிய போது வாசலில் ஒரு ஊழியை வழிமறித்தாள்.
“அவனுக்குப் பக்குவத்தைக் கொடுத்து விட்டாயே!”
“பேசியது நீங்கள். வாயசைத்ததுதான் நான். ராமசுந்தரத்துக்குப் பக்குவத்தைக் கொடுத்தது நீங்கள். அதை அவரிடம் சேர்த்த தபால்காரன் நான். என்னைப் போய்...''
“இனிமேல் என்னுடைய வேலையில் உன் பங்கு அதிகமாக இருக்கப் போகிறது. என் சக்திலோகத்தில் உனக்கு பெரிய பதவி தரலாம் என தீர்மானித்திருக்கிறேன்”
“நான் என்ன பாவம் செய்தேன் தாயே? ஏன் இந்த திடீர் பதவியிறக்கம்?”
“என்னடா உளறுகிறாய்?”
“நான் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறேன் என உங்களுக்குத் தெரியுமா? கையில் கிளிதாங்கிய ஒரு கோலக்கிளிக்கு காலமெல்லாம் கொத்தடிமை என்ற பெரிய பதவியில் இருக்கும் என்னை ஏன் ஒரு சின்ன பதவியைக் கொடுத்து தண்டிக்கிறீர்கள்?”
கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள் அன்னை. கடைவாசலில் நின்றபடி அவள் அன்பை நினைத்து அழுதுகொண்டிருந்தேன்.
--தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement