கிழமைப்பட வாழ்
ஏங்க... பக்கத்து பிளாட்ல ஏதோ சத்தம் கேட்குது, என்னன்னு பாருங்களேன்.... ஏய்... சும்மா கிட, நாளைக்கு ஏதாவது பிராப்ளம்ன்னா யாரு அலையறது.... பாஸ் யாரோ கீழ விழுந்துட்டாங்க.... கொஞ்சம் நில்லுங்களேன்... சும்மா வாய்யா... ஏற்கனவே ஆபீசுக்கு லேட்டாயிட்டு இருக்கு.... யோவ்.... எல்லாம் ஒதுங்குங்கய்யா.... கைல இருக்க போனை வச்சு படம் பிடிக்கிறதுக்குப் பதிலா யாராவது ஓடிப் போய் தண்ணி கொண்டு வரக் கூடாதா? இப்படி பல குரல்கள் நம்மைச் சுற்றிச் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காரணம் மனிதன் மனிதத்தில் இருந்து விலகி விட்டானோ? எனத் தோன்றுகின்றது.
சமீபத்தில் வெயிலில் பணி செய்து கொண்டிருந்த டிராபிக் கான்ஸ்டபிள் மயங்கி ரோட்டில் விழுந்த போது கடந்து போன வாகனங்கள்.... கணக்கில் அடங்காது. அங்கிருந்த பிச்சைக்காரன் ஒருவன் ஓடி வந்து உதவி கேட்டுப் போராடி மீட்டான் என்பது செய்தி. எனவே தான் அவ்வையார் 'கிழமைப் படவாழ்' என்றாள். அப்படின்னா... குரல் கேட்கிறது. தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காவும் வாழ வேண்டும் என்பது இதன் பொருள். பரபரப்பாக சக மனிதனைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி ஓடுகிறோம். என்ன வாழ்க்கை என புரியவில்லை.
ஒரு காலத்தில் திருமணம் என்றால் சொந்தங்கள் பத்து நாட்களுக்கு முன்பே வீட்டில் கூடுவர். திருமண வேலைகளை பகிர்ந்து கொள்வார். ஆனால் இன்றோ ஏ டு இசட் என எல்லாம் சமையல்காரரிடமே கொடுத்து விட்டு வரவேற்பிலே கூட வாடகை ஆட்களை நிறுத்துகிறோம். அவர்களும் செயற்கையாக புன்னகைக்கிறார்கள். திருமணம் என்றால் தான் இப்படி என்றால் இறப்பு என்றால் கேட்கவே வேண்டாம். வெளிநாடுகளில் பிள்ளைகளை விட்டு விட்டு இறுதிச் சடங்கிற்கும் வர இயலாத சூழலும் வாழ்க்கையும், வெறும் பொருட்கள் மட்டுமே வாழ்க்கை என்ற பாதையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நம் பாரத கலாசாரம், சனாதன தர்மம் பொதுவுடைமை சார்ந்தது. 'எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்பார் தாயுமானவர். கோயில்களில் ஓதப்படும் வேத பிரார்த்தனையில், 'எல்லா மக்களும் இன்பமாய் வாழ்க! மங்கலங்களே உலகில் நிறையட்டும்' என்பார்கள். இதுவே நம் சமயத்தின் அடிநாதம். பெருமை.
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு. விருத்தாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். பிரம்மாவை நோக்கி அவன் தவம் செய்தான். தவத்தை மெச்சிய பிரம்மா காட்சியளித்த போது, ''உலோகம் அல்லது மரத்தால் ஆன ஆயுதங்களால் மரணம் வரக் கூடாது'' என வேண்டினான். பிரம்மாவும் வரம் தந்தார். அவ்வளவு தான். அசுரனும் தனக்கு மரணமே வராது என எண்ணிக்கொண்டு தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான்.
எல்லோரும் சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரோ தேவர்களிடம், ''ததீசி என்னும் மகரிஷி தன் உடல் எலும்புகள் வஜ்ரம் போல் ஆக வேண்டும் என வரம் பெற்றவர். அவரால் உங்களுக்கு உதவ முடியும்'' என வழிகாட்டினார்.
இந்திரன் தலைமையில் தேவர்கள் மகரிஷியைச் சந்தித்த போது, ''இந்திரா! உலக நலனே முக்கியம். அழியப் போகும் எனது உடல் உங்களுக்கு பயன்படுமானால் அது பெரிய பேறு அல்லவா! என் முதுகெலும்பை ஆயுதமாக்கி அசுரனைக் கொல்லுங்கள்'' என்றார். அவ்வாறே அவரின் முதுகெலும்பை எடுத்து ஆயுதம் செய்தனர். வஜ்ரம் போல் இருந்ததால் அது வஜ்ராயுதமாயிற்று. அரக்கனுடன் போரிட்டனர். உலோகம், மரத்தால் ஆன ஆயுதமாக இல்லாமல், முதுகெலும்பால் ஆன ஆயுதம் என்பதால் அசுரன் அழிந்தான். மகரிஷி ததீசியின் தியாகத்தை உலகமே பாராட்டியது. இதன் அடிப்படையில் இந்திய அரசின் உயரிய 'பரம்வீர் சக்ரா' விருதில் ததீசி முனிவரின் முதுகெலும்பு படத்தைப் பொறித்து அவரது தியாகத்தை போற்றுகிறோம். இது போல் எண்ணற்ற தியாகிகள் நாட்டின் எல்லையில் பனி, மழை, வெயிலிலும் நாட்டை பாதுகாப்பதால் தானே நாம் நிம்மதியாக வாழ்கிறோம்.
உடலாலும், மனத்தாலும் பிறருக்கு உதவும்படியான வாழ்வைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவோம். பொங்கல் சமயத்தில் கிராமங்களில் போட்டி நடத்துவார்கள். ஒரு ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு வித்தியாசமான போட்டியை அறிவித்தார். ஒரு அறையில் அண்டா நிறைய பிரியாணி வைக்கப்பட்டிருக்கும். அதைச் சாப்பிட பத்து பேரை அனுப்புவார்கள். ஆனால் ஒரு கண்டிஷன். உள்ளே போகும் முன்பு அந்தப் பத்துப் பேருடைய கைகளையும் மடக்க முடியாதபடி மூங்கில் தப்பையால் கட்டி விடுவர். அவர்கள் உள்ளே சென்று சாப்பிட வேண்டும். முதலில் பத்து பேர் போனார்கள். சாப்பாட்டை எடுக்க முடியாதே! கைகள் தான் மடக்க முடியாதபடி கட்டப்பட்டு உள்ளதே. எனவே சாப்பாட்டை அள்ளி கிரிக்கெட் வீரர் பந்தை எறிவது போல் உருட்டி வாய் நோக்கி வீசினார்கள். மூக்கிலும் கண்ணிலும்பட்டு வீணானதே தவிர யாருக்கும் பயன்படவில்லை. அடுத்த பத்து பேர் தயாராக இருந்தார்கள்.
அவர்களுக்கும் கைகள் மடக்க முடியாத படி கட்டப்பட்டன. அவர்களும் உள்ளே சென்று திகைத்தனர். ஆனால் அவர்களுக்குள்ளே ஒரு சமூக சிந்தனையாளன் இருந்தான். மற்ற ஒன்பது பேரையும் நோக்கி நண்பர்களே! சற்று பொறுங்கள். நாம் கைகளை மடக்க முடியாதபடி கட்டுப் போட்டிருப்பதால் நாமே சாப்பிட முடியாது. அதனால் ஒன்று செய்யலாம். நாம் ஒவ்வொருவரும் உணவைக் கைகளால் எடுத்து அடுத்தவர் வாயில் ஊட்டலாம் அல்லவா? மடக்க முடியாமல் நீண்டுள்ள கைகளால் அடுத்தவரின் வாயில் ஊட்டி உணவையும் வீணாக்காமல், பசியாறி மகிழ்வோமே என்றார். நல்ல சிந்தனையாகப்பட்டது. அவ்வாறே செய்தனர். கிராமத் தலைவரும், மக்களும் கைதட்டி வரவேற்றனர். நாமே அனுபவிக்க வேண்டும் என்றால் இப்படித்தான். முதல் குழு போல ஆகி விடும். பிறருக்கும் உதவுவோமே என வாழத் தொடங்கினால் நாமும் வாழ முடியும்.
நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். காபாலிகன் ஒருவன் ஆதிசங்கரரிடம் வந்து சாமி! ஒரு துறவியைப் பலி கொடுத்தால் நான் சாகாவரம் பெறுவேன் என வேண்டினான். அவரும் நான் தனியே அமர்ந்து தவம் செய்யும் போது உன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள் என மனதாரக் கூறினார். ஆனால் நரசிம்மரின் அருள் பெற்ற அவரது சீடர் பத்மபாதர் என்பவர் காபாலிகனை விரட்டி குருநாதரைக் காத்தார் என்பது வரலாறு. ஆயினும் ஆதிசங்கரரின் தன்னலமில்லாத சிந்தனை நமக்குப் பாடமாகும்.
இன்றுகூட தங்களின் உடலை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தானம் செய்பவர்கள், கண்தானம் வழங்குவோர் பலர் இருக்கிறார்கள். மிக நெருங்கிய உறவுகள் மூளைச்சாவு அடைந்த சூழலிலும் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நெறிப்படுத்தும் சமூகநலச் சங்கங்கள், அமைப்புக்கள் உள்ளன. குருதி கொடையாளர்கள் ரத்தம் தந்து உயிர்களை காப்பாற்றுகிறார்கள்.
ஆயினும் மனிதம் இன்னும் ஆழமாக ஊன்றப்பட வேண்டும். மகாகவி பாரதியார் சொல்வது போல் நிதி நிரம்ப உள்ளவர்கள் செல்வத்தால் உதவிகளைச் செய்யுங்கள். நிதி குறைவாக உள்ளவர்கள் காசுகளால் உதவுங்கள். எங்களிடம் செல்வமெல்லாம் உதவி செய்வதற்குக் கிடையாது என்றால் உழைப்பின் மூலமாவது பிறருக்கு உதவுங்கள். இயலாதவர்களை சாலையைக் கடந்து கொண்டு விடுதல். ரயில், பஸ் நிலையங்களில் வயதானவர்கள் அல்லது இயலாதவர்களுக்கு அவர்களின் பைகளைத் துாக்கித் தந்து உதவுதல், அரசு அலுவலகம், வங்கி போன்றவற்றில் படிவம் நிரப்பக் கூட இயலாதவர்களுக்கு உதவுதல் இது போன்ற உடலால் ஆன உதவிகள். அதுவும் கூட என்னால் முடியாது என்றால் வாய் வார்த்தைகளாலாவது பிறருக்கு உதவினால் இந்தச் சமுகம் புன்னகை பூக்கும் சமூகமாக மாறிட ஆவன செய்யுங்கள் என்பார்.
தனது உயிர் என்றும், தான் என்ற எண்ணம் கொண்டும் சுயநலம் இன்றி பிறருக்காக வாழும் பெரியவர்களை உயிர்கள் எல்லாம் வணங்கும் என்கிறார் திருவள்ளுவர். பிறருக்காகவும் கொஞ்சம் வாழ்ந்திட முயல்வோம். நாம் குறைந்த பட்சம் சக மனிதர்களிடம் ஒரு புன்னகையையாவது சிந்துவோமா?
- தொடரும்
இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்
ilakkiamegamns@gmail.com
அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 31
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.