பிப்.1 - கண்ணப்ப நாயனார் குருபூஜை
மலர்ச்சோலைகள் சூழ்ந்த மலைப்பகுதி உடுப்பூர். அங்கு வேடர்களின் தலைவராக இருந்தவர் நாகன். இவரது மனைவி தத்தை. இவர்களுக்கு குழந்தை இல்லை. முருகப்பெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை கையில் துாக்க முடியாத அளவிற்குத் பருமனாக (திண்ணமாக) இருந்ததால், 'திண்ணன்' என்று பெயர் வைக்கப்பட்டது. நாட்கள் ஓடின. திண்ணனுக்கு பதினாறு வயதில் வேடுவ அரசனாக முடி சூட்டப்பட்டது.
மெய்க்காவலர்களான நாணன், காடன் உடன் வேட்டைக்குச் சென்றான் திண்ணன். கண்ணில்பட்ட பன்றியைத் துரத்தி, கொன்றான். வேட்டைக்காக தாங்கள் வாழ்ந்த மலைப்பகுதியை விட்டு வெகுதுாரம் வந்ததை உணர்ந்தனர். தாகமும், பசியும் மேலிட, மலையடிவாரத்தில் பொன்முகலி ஆற்றிற்கு சென்றனர். அப்போது திண்ணன் அருகில் இருந்த காளத்தி மலையை பார்த்தான். இந்த மலையைக் குறித்து கேட்டதற்கு, அந்தணர் ஒருவர் தினமும் குடுமித்தேவர் என்னும் பெயருடைய காளத்தியப்பருக்கு (சிவபெருமான்) இங்கு பூஜை செய்வதாக சொன்னான். உடனே காளத்தியப்பரை காண காடனிடம் பன்றியை சுட்டு வைக்கும்படி கூறிவிட்டு, நாணனுடன் வேகமாக மலைக்கு சென்றான்.
காளத்தியப்பரை பார்த்ததும் அவனது விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. 'கரடியும், புலியும் வாழும் காட்டில் தனியாக இருக்கிறாரே? இவருக்கு வேண்டிய உணவு கிடைக்கிறதா' என அழத் தொடங்கினான். பின் மலை அடிவாரத்திற்கு ஓடினான். வாயில் ஆற்றுநீரை நிரப்பியும், பூக்களைத் தலையில் செருகியும், சுட்டு வைத்திருந்த பன்றிக் கறியையும் எடுத்துக் கொண்டு மலையேறினான். லிங்கத்தின் மீது இருந்த பூக்களை காலால் அகற்றி, வாயில் இருந்த நீரை உமிழ்ந்தான். தன் தலையில் செருகிய பூவை சாற்றி, பன்றிக் கறியை சமர்ப்பித்தான். குழந்தைக்கு எப்படி தாய் ஊட்டுவாளோ அதுபோல் உபசாரம் செய்தான். மெய்க்காப்பாளர்கள் அழைத்தும் அவன் ஊருக்கு செல்லவில்லை. இரவில் அங்கேயே காவல் இருந்தான். இப்படி தினமும் அந்தணர் பூஜை செய்வதும், திண்ணன் மாமிசம் படைப்பதுமாக ஐந்து நாள்கள் கழிந்தன. 'இதை யார் செய்கிறார்' என மனம் வருந்தினார் அந்தணர். ஐந்தாம் நாள் இரவு அந்தணரின் கனவில் தோன்றிய சிவபெருமான், காலையில் திண்ணனின் பக்தியை மறைந்திருந்து காணும்படி கூறினார்.
ஆறாம் நாள் காலை. அவரும் அப்படியே செய்தார். சிறிது நேரத்தில் திண்ணன் வந்ததும், காளத்தியப்பரின் வலக்கண்ணில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. பதறியவன் பச்சிலைகளை பிழிந்து விட்டான். ரத்தம் நின்றபாடில்லை. அப்போது அவனுக்கு, 'ஊனுக்கு ஊன்' என்ற அவனது குல வழக்கத்தின் சொலவடை நினைவிற்கு வந்தது. உடனே கூரிய அம்பினால் தனது வலக்கண்ணைத் தோண்டி, காளத்தியப்பர் மீது அப்பினான். ரத்தம் வழிவது நின்றது. இதை பார்த்து ஆனந்தக் கூத்தாடினான். இது சிறிது நேரமே நீடித்தது. மீண்டும் அவரது இடக் கண்ணில் ரத்தம் வருவதை கண்டு திகைத்தான். பின் மற்றொரு கண் இருக்கே என்று சந்தோஷப்பட்டான். 'இரண்டாவது கண்ணும் போனால், எப்படி கண்ணைப் பொறுத்துவது' என யோசித்தான். உடனே தனது ஒரு காலை காளத்தியப்பரின் இடக்கண்ணில் வைத்து, அம்பினால் தன் இடக்கண்ணையும் பெயர்க்கப் போனான். அப்போது ஒரு கை, 'நில் கண்ணப்பா!' என தடுத்தது. கருணைக் கடலாக விளங்கும் காளத்தியப்பர்,
'இனி எப்போதும் என் வலப்பக்கத்திலேயே இருப்பாயாக' என அவனை ஆட்கொண்டார். கண்ணை மீண்டும் பெற்றதோடு 'கண்ணப்பர்' என்ற பெயரையும் பெற்றார். ஆறுநாளில் சிவபெருமானின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார். இதற்கு காரணம் உண்மையான அன்பே.
கண்ணைக் கொடுத்த திண்ணன்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.