Load Image
Advertisement

முதல் வணக்கம் முருகனுக்கே...

மூலஸ்தானத்தில் உள்ள கடவுளின் பெயர்களை 1008, 108 என சொல்லி அர்ச்சனை செய்வது வழக்கம். அவற்றை சொல்லி வழிபட முடியாவிட்டாலும் அவரது பன்னிரெண்டு பெயர்களையாவது கூறி போற்றுங்கள். சிவபெருமான், மகாவிஷ்ணு, பார்வதிக்கு சிறப்பாக பன்னிரெண்டு பெயர்கள் உள்ளன. அதைப்போலவே முருகனுக்குரிய பெயர்களை அர்ச்சனையாக குறிப்பிடும் பாடல் இது.

நாத விந்து கலா ஆதீ! நமோ நம,
வேத மந்த்ர சொரூபா! நமோ நம,
ஞான பண்டித ஸாமீ! நமோ நம, ... வெகுகோடி
நாம சம்பு குமாரா! நமோ நம,
போக அந்தரி பாலா! நமோ நம,
நாக பந்த மயூரா! நமோ நம, ... பரசூரர்
சேத தண்ட விநோதா! நமோ நம,
கீத கிண்கிணி பாதா! நமோ நம,
தீர சம்ப்ரம வீரா! நமோ நம, ... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ! நமோ நம,
துாய அம்பல லீலா! நமோ நம,
தேவ குஞ்சரி பாகா! நமோ நம, ... அருள்தாராய்.
ஈதலும், பல கோலால பூஜையும்,
ஓதலும், குண ஆசார நீதியும்,
ஈரமும் குரு சீர்பாத சேவையும் ... மறவாத,
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே, மனோகர!
ராஜ கெம்பிர நாடு ஆளும் நாயக! ... வயலுாரா!
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கோண்டு, அவரோடே முன் நாளினில்
ஆடல் வெம்பரி மீது ஏறி, மா கயி ... லையில் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்கு, வைகாவூர் நல்நாடு அதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ... பெருமாளே.

கேட்பவருக்கு உதவி செய்யும் பண்பு, கோயில்களில் விருப்பத்துடன் செய்யும் பூஜை, நல்ல நுால்களை படிக்கும் வாய்ப்பு, ஆசாரத்துடன் வாழும் வாழ்வு, உயிர்களிடத்தில் காட்டும் கருணை இவை யாவும் முருகனை வணங்கினால் கிடைக்கும். அவரே வயலுார், பழநியில் எழுந்தருளியுள்ளார் என்கிறார் அருளாளர் அருணகிரிநாதர்.
அதிகமான திருப்புகழ் பாடல்கள் பெற்ற தலம் பழநி. முருகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இப்பாடலை பாடுவர். சிவனடியார்களில் ஒருவரான சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான். இவர் கயிலாயத்திற்கு சென்று சிவபெருமான் முன்பு பாடிய இப்பாடலே 'திருக்கயிலாய ஞான உலா'. அது தான் முதல் உலா என தெரிவிக்கும் பாடல் இது. நாதவிந்து கலாதீ... எனத்தொடங்கும் இத்திருப்புகழை படிப்பவருக்கு முருகனின் கடைக்கண் பார்வை கிடைக்கும்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement