dinamalar telegram
Advertisement

அழகிரி பதவி விலக வேண்டுமா? கருணாநிதி காட்டம்

Share
Tamil News
சென்னை : "உர விலை உயர்வுக்காக மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய வேண்டுமா' என, தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:அகவிலைப் படி உயர்வு கேட்டு, மாதக் கணக்கிலே கோரிக்கை வைத்து போராடிப் பெற்ற காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால், எந்தச் சங்கமும் கோரிக்கை வைக்காத நிலையில், அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படி உயர்வை இந்த அரசு அறிவித்துள்ளது ஒரு சாதனை.மத்திய அரசின் உரக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால், அமைச்சர் பதவியில் ஏன் அழகிரி ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கேட்டிருக்கிறார்.உர விலையை உயர்த்துவதில் தி.மு.க.,வுக்கு உடன்பாடு இல்லை என, எங்கள் கருத்தை, உரிய இடத்தில் பதிவு செய்திருக்கிறோம். அதற்காக, அமைச்சர் பதவியே வேண்டாமென ஒதுங்கி வந்துவிட்டால் மார்க்சிஸ்டுகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போலும்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பர் புறக்கணிக்கப்பட்டுவிட்டார் என்ற செய்திகள் வருவதற்கு முன்பே, மாநாட்டு ஆய்வரங்குகளில் ஒன்றுக்கு கம்பர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று ஏற்கனவே கூறியிருந்தேன்.அண்ணாதுரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தி.மு.க., ஆட்சியில் நடத்தியபோதே, சென்னை மாநகரில் பத்து தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைத்தபோதே, அதில் ஒன்றாக கம்பர் சிலை வைக்கப்பட்டது.என்னைப் பற்றி இன்றும் காட்டமாக வர்ணிக்கும் ராமதாஸ், பென்னாகரம் இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, என்னுடன் போனில் பேசியபோது, இந்தக் கடுமை எல்லாம் மறந்து போனதன் காரணம் தான் விந்தையிலும் விந்தை.பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்முறை வெடிக்கும் என பிரசாரம் செய்தவர்களை ஏமாற்றுகிற அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியே, ஓட்டுப்பதிவு முடிந்த உடன், "ஓட்டுப் போட வந்திருந்தவர்களை வெப்- கேமராவில் பதிவு செய்ததன் மூலம், போலி வாக்காளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இடைத் தேர்தல்களில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு இயல்பானது தான். மாவட்ட நிர்வாகம், போலீசாரின் ஒத்துழைப்பால் தேர்தலை அமைதியாக நடத்த முடிந்தது' என விளக்கம் அளித்துள்ளார்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் "ஆக்கிரமிப்பு?' தமிழக முதல்வர் கருணாநிதி, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:"மதுரை தெற்கு வட்டத்தில் 300 தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பாதையாகப் பயன்படுத்திய 19 அடி அகலம், 160 அடி நீளமுள்ள இடத்தை சிலர் தடுத்து வருகின்றனர்; அதைத் தடுத்து, பட்டா வழங்க வேண்டும்' என மதுரை கிழக்கு தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நன்மாறன் எனக்கு கடிதம் எழுதினார்.அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டேன். அந்தப் பகுதிக்கு மாவட்ட கலெக்டரும், இதர அதிகாரிகளும் நேரடியாகச் சென்று, 30 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவரும் பாதையை ஆக்கிரமிப்பு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்ததோடு, பட்டா வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளனர்.போலீஸ் இன்ஸ்பெக்டரையும் நேரடியாக அந்த இடத்துக்கு வரவழைத்து, மக்களின் புழக்கத்தில் இருந்த 19 அடி பாதைக்கும், அங்கே வாழும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு, அந்த மக்கள் முன்னிலையிலேயே கலெக்டர் கேட்டுக்கொண்டார்.தலித் மக்கள் பயன்படுத்திவரும் பாதைக்கான நிலம், நகர நில அளவை பதிவேட்டில் மகாதேவன் செட்டியார் பெயரில் உள்ளது. அவரிடமிருந்த இடத்தை வாங்கியவர்கள், அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். தற்போது, அந்த ஆக்கிரமிப்பு, அரசால் அகற்றப்பட்டுள்ளது.எனினும், முழுமையாக விசாரணை நடத்தி, அந்த இடம் யாருக்குச் சொந்தமானது; 30 ஆண்டுகளாக அது தலித் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதால், விதிமுறைப்படி என்ன செய்ய முடியுமோ, அதை அரசு செய்யும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement