Load Image
Advertisement

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!

'இந்த கார்த்திகையோட எனக்கு, 90 வயசு முடியுது. ஏழு வயசுல விராலிமலை முருகன் முன்னால சதிராட ஆரம்பிச்சது; இன்னைக்கும் ஆடுறேன்; இனிமேலும் ஆடுவேன்!' வெற்றிலை குதப்பியபடியே பேசும் முத்துக்கண்ணம்மாள் பாட்டி, மன்னர் ராஜகோபால தொண்டைமானின் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இறைபணி செய்த, 32 தேவதாசிகளுள் ஒருவர்; பாரம்பரிய சதிராட்ட கலைஞர்.

அதென்ன சதிராட்டம்?
ஒருத்தர் ஜதி போட இன்னொருத்தர் ஆடுறது பரதம். ஒருத்தரே பாடிகிட்டு ஆடுறது சதிராட்டம். சினிமா மூலமா பரதத்துக்கு கிடைச்ச அங்கீகாரம் எங்களுக்கும் கிடைச்சிருந்தா, பொட்டு கட்டி கோவில்ல சதிராடின என்னை, இந்த உலகம் கொண்டாடி தீர்த்திருக்கும்!

பொட்டு கட்டுறதுன்னா...?
தங்கத்துல சின்ன பொட்டு செஞ்சு, அதை சாமி பாதத்துல வைச்சு அர்ச்சனை பண்ணி கழுத்துல கட்டிக்குவோம். இப்படி பொட்டு கட்டிக்கிட்டவங்க கடவுளுக்கு சொந்தமானவங்கன்னு அர்த்தம்! ப்ப்ச்ச்ச்... 1947க்கு அப்புறம் இந்த வழக்கம் ஒழிஞ்சு போச்சு.

'இன்னமும் ஆடுறேன்'னு சொன்னீங்களே...
ஆமா தாயி; முன்ன மாதிரி மூணு மணி நேரம் தொடர்ந்து ஆட முடியலைன்னாலும், விராலிமலை முருகன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்ல வருஷம் தவறாம முடிஞ்ச அளவுக்கு சதிராடுறேன்.
மூச்சிரைக்கும் வயதிலும் தன் சதிராட்டத்தை நிறுத்தாத பாட்டி... கோவை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அவ்வப்போது சென்று சதிராட்டத்தை பயிற்றுவிக்கிறார். 18 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில், புதுக்கோட்டை விராலிமலையில் பிள்ளைகளுடன் வசிக்கிறார்.

பிள்ளைங்க உங்களை நல்லா பார்த்துக்குறாங்களா பாட்டி?
என் காலம் வேற; அவங்க காலம் வேற! அவங்க சொல்றதை கேட்டா தான், இப்ப இயங்குற உலகத்தை புரிஞ்சுக்க முடியுங்கிறதுல நான் தெளிவா இருக்குறேன். அதனால, வீட்டுல அன்புக்கு குறைச்சலில்லை. ஆனா, 'தமிழகம் முழுக்க சதிராடி நிறைய விருதுகள் வாங்கியிருந்தும், அரசு இன்னும் கண்டுக்கலையே'ங்கிற வருத்தம் மனசுல இருக்கு! ம்ஹும்... என்னை மாதிரியான கலைஞர்களை அரசு ஊக்குவிச்சிருந்தா, என் கலை இப்படி அழிவு நிலைக்கு வந்திருக்காது.

சாமியோவ்... பாட்டி சொன்னது கேட்குதா?



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement