Advertisement

நவராத்திரி - கொலு ஏன்?

நவராத்திரி என்றாலே, கொலு தான் பிரதானம். கொலு என்றால், அழகு என்றும் பொருள்.
கொலு என்றால், மண் பொம்மைகளை வைப்பது தான் ஐதீகம். அந்த கொலுவிற்கு ஏன் பொம்மைகளை வைக்கின்றனர் என்பதற்கு ஒரு கதை உண்டு...
சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள், கடவுளிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்ற கர்வத்தில் அட்டகாசம் செய்து வந்தனர். இந்த இரு அரக்கர்களையும் கண்டு, அஞ்சி நடுங்கினர், ஈரேழு உலகினர். இதைக்கண்ட தேவர்கள், மும்மூர்த்திகளிடமும் சென்று முறையிட்டனர்.
ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது இவர்கள் பெற்ற வரம் என்பதால், சக்தியை நோக்கி பிரார்த்திக்க கூறினர், மும்மூர்த்திகள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, அன்னைக்கு அளித்து, சிலையாயினர். அதே போல, இந்திரனும், திக் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை, சக்திக்கு அளித்து, சிலையாக நின்றனர்.
ஆயுதங்களை பத்து கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு, அரக்கர்களை அழித்தாள், அன்னை.
மும்மூர்த்திகளும் சிலையாக நின்றதால் தான், அதை குறிக்கும் வகையில் பொம்மை கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
போரில், வெற்றி பெற்ற தினமே, விஜயதசமி. போர், ஒன்பது நாட்கள் விடாமல் நடந்ததால், நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
கொலு வைப்பதால், வீடு சுத்தம் அடைந்து, ஆரோக்கியம் பெருகும். மேலும், உற்றார், உறவினர்களை கொலுவிற்கு அழைப்பதால், சமூக உறவுகள் மேம்படும்.
பிளாஸ்டிக்கால் ஆன கொலு பொம்மைகளை தவிர்த்து, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற, களி மண் பொம்மைகளால், கொலு வைத்து மகிழ்வோம்.
- எம்.விக்னேஷ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement