Load Image
Advertisement

இளஸ்... மனஸ்... (131)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவி எழுதிக் கொண்டது. தினமலர் நாளிதழை, தற்போது தான் வாங்கி வருகிறோம். அப்பா தான், எனக்கு சிறுவர்மலர் இதழை அறிமுகப்படுத்தி, 'இளஸ்... மனஸ்...' பகுதியை, படிக்கச் சொன்னார். இப்போது, என் தோழிகள் கூட, 'இந்த வாரம் ஜெனி ஆன்டி என்ன சொல்லியிருக்காங்க'ன்னு கேட்கும் அளவிற்கு வந்து விட்டது.
ஆன்டி... எங்க வீட்டுப் பிரச்னைய உங்க கிட்ட சொல்றேன். என் அப்பாவுக்கு, இரண்டு சகோதரர்கள்; நாங்கள் அனைவரும், ஒற்றுமையாக இருந்தோம்; 'கசின்ஸ்' ஒன்று சேர்ந்தால், அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

இப்போது, சகோதரர்களுக்குள் சண்டை வந்து, 'மன்னிக்க மாட்டேன்; நான் மானஸ்தன்; கடைசி வரை பேச மாட்டேன்!' என்று கூறி, பிரிந்து விட்டனர். ஆனால், பிள்ளைகளாகிய எங்களால் அப்படி இருக்க முடியவில்லை; எங்களையும் பேசக் கூடாது என்று, தடை உத்தரவு போடுகின்றனர்; நாங்கள் தெரியாமல் பேசிக் கொள்வோம்.
தற்போது, பெரியப்பாவிற்கு, 'ஹார்ட்' ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதைக் கேட்டதும், என் அப்பா அப்படியே, 'அப்செட்' ஆகி விட்டார். மனதுக்குள், அண்ணன் மீது பாசம் இருப்பது தெரிந்தது.
'பெரியப்பாவை நலம் விசாரிக்க போகலாம்'ன்னு சொன்னேன். ஆனா, 'ஈகோ' தடுக்குதுன்னு சொல்லிட்டாரு அப்பா.
இந்த சந்தர்ப்பத்தை வைத்து ஒண்ணு சேர விரும்புகிறோம் ஆன்டி. அப்பாவுக்கு ஒரு, 'அட்வைஸ்' கொடுங்க ப்ளீஸ்...

அன்பு மகளே... உன்னுடைய குடும்ப விஷயத்தில், என் மூக்கை நுழைக்கச் சொல்கிறாய்... இது நன்றாக இருக்காதும்மா. இருந்தாலும், உன் நல்ல மனதிற்காக, நல்ல நோக்கத்திற்காக, உன் அப்பாவிடம், சில விஷயங்களை சொல்கிறேன்...
அன்பு சகோதரரே வணக்கம்! என்ன தான் சண்டை போட்டு பிரிந்தாலும், அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், 'தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்...' என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க. உங்க மனதிலும், அந்த பாதிப்பு இருக்கிறது என்று, மகள் சொல்வதில் இருந்து புரிகிறது.
பிரதர்... உங்களுக்கு, 'அட்வைஸ்' பண்ண எனக்கு உரிமையில்லை; இருந்தாலும், சில கருத்துக்களை சொல்கிறேன்.
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை; இனி, திரும்பவும் இதேபோல், பூமியில் பிறக்கப் போவதில்லை. சின்ன வயதில், நீங்கள் ஒன்றாக இருந்த, அன்பான தருணங்களை நினைத்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது, அத்தனை உன்னதமானது. இதில், 'ஈகோ'விற்கு இடம் வேண்டாம்; அன்புக்கு இடம் கொடுங்கள்.
மன்னிப்பின் மகிமை பற்றி, மருத்துவம் என்ன கூறுகிறது தெரியுமா... நீங்கள், ஒரு நபர் மீது எரிச்சல், கோபப்படும் போது, உங்கள் மூளையில், ஒரு வடிவம் உருவாகிறது.
உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம், ரொம்ப, இறுக்கமாக மாறி விடுகிறது. அதன்பின், அந்த வலுவான நிலமையே, உங்கள் இயல்பாக மாறி, நிரந்தர கோபக்காரனாக, எரிச்சலுள்ளவனாக மாறி விடுகிறீர்கள் என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள்.
கோபம், எரிச்சல் குறித்து செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள், மன்னிக்கிற மனிதனின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக உள்ளதாக கூறுகின்றனர்.
வட அமெரிக்க கண்டத்திலுள்ள, கலிபோர்னியா மாநிலத்தின், ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், 'லேர்ன் டு பர்கிவ்' என்ற புத்தகத்தில், மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியும், அற்புதமாக எழுதியுள்ளார்.
மன்னிப்பவர்களுக்கு, புற்றுநோய் வருவது குறைவு என்கிறது, 'ஏல்' மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வு கட்டுரை.
மன்னிக்கும் குணம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
போதுமா... இதற்கு மேலும், நான் எதுவும் சொல்ல தேவை இல்லை பிரதர்... 'நான், மானஸ்தன்; அவர் பேசின வார்த்தைகளை மறக்கவே மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்...' என்று சொல்லி, நீங்களாகவே, எதற்காக, உங்களுக்கு நோய்களை வரவழைச்சிக்கிறீங்க... மன்னித்துப் பாருங்க!
'என் அண்ணன் தானே... அவர் செய்ததை, பேசியதை எல்லாம் மறந்துட்டேன்...' என்று சொல்லி, அவரைப் பார்த்து, நலம் விசாரிங்க. உங்களைப் பார்த்ததும், அண்ணனுக்கு பாதி நோய் பறந்து போகும்.
சகோதரர்கள் நேரில் மனம் விட்டுப் பேசும் போது தான், பல உண்மைகள் புரியும். பலர் சொல்வதைக் கேட்டு, ஒருவரை ஒருவர், தவறாக நினைத்த விஷயங்கள் பனி போல் விலகும். அதன்பின் பாருங்களேன்... உங்கள் மனம் லேசாகி விடும்.
மன்னிக்கும் மனதுடையவர்களாக பெற்றோர், இருந்தால் தான், குழந்தைகளும் அந்த குணத்தை கற்றுக் கொள்வர். இங்கே, உங்கள் பிள்ளைகள் முன்மாதிரியா இருக்காங்க... பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றுங்க!
நீங்கள் அனைவரும் குடும்பமாய் ஒன்று சேர வாழ்த்துகள்!
- அன்புடன், ஜெனிபர் பிரேம்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement