Advertisement

உதவுதல் ஆனந்தமே!

உதவி செய்யும் மனப்பான்மை உயர்ந்தது. பிறர்க்கு உதவி செய்வதற்கு எந்தவிதமான பேதமோ, தடையோ கிடையாது. உதவி செய்வது உறவுகளை, அன்பை வளர்க்கும். ஆனால், இன்றைய சூழலில் உதவி செய்ய நினைத்தாலும் சில நேரங்களில் மனம் தயங்குகிறது. அதற்குக் காரணம் என்ன? உதவுவதால் நமக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்ற பயம்தான். இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது என்பது ஆனந்தமா? ஆபத்தா? என்ற தலைப்பில் மதுரை, அனுப்பானடி, சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் உரையாடினார்கள். உதவுதலின் பயன்கள் என்ன? அதில் உள்ள தயக்கங்கள் என்ன என்பன குறித்து அவர்களது கருத்துகளை அறிந்துகொள்வோம்.

க.கு.யோகேஸ்வரி, 10ஆம் வகுப்பு
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காம செய்யறதுதான் உதவி. உதவி தேவைப்படறவங்களுக்கு, நம்மாலான உதவிய செய்யணும். அதனால, நமக்கு என்ன நடக்கும்னு யோசிச்சு தயங்கக் கூடாது. எல்லாத்துலயும்தான் ஆபத்து இருக்கு. உண்மையா உதவி தேவைப்படறவங்களுக்கு, உடனே உதவி செய்யறதுதான் நல்ல பண்பு.

மூ.ஜெ.ஷர்மி, 10ஆம் வகுப்பு
மாணவர்கள் செய்யற எந்த உதவியும் ஆபத்தைத் தராது. வயசானவங்களுக்கு உதவறது, சரியாப் படிக்க முடியாதவங்களுக்குச் சொல்லித்தர்றது இதனால எல்லாம் எந்த ஆபத்தும் வந்துடாது. உதவணும்னு எண்ணம் இருந்தா எல்லோரும் உதவலாம். படிச்சு முடிச்ச புத்தகத்தை, அடுத்தவங்களுக்குத் தர்றதும் உதவிதான். உதவி செய்யறதால நிச்சயமா மனத்திருப்தி கிடைக்கும்.

கொ.கு.சாந்தினி, 10ஆம் வகுப்பு
உதவி செய்யறதுல ஆபத்துன்னு ஏன் நினைக்கறோம்னா, இப்பல்லாம் முகவரி கேக்கறது போல வந்து, திருடிட்டுப் போறதெல்லாம் நடக்குது. இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கறதால, நிஜமாவே முகவரி கேக்கறவங்களைப் பார்த்தாக் கூட பயமா இருக்கு. உதவறதுக்கு முன்னே உண்மையாவே அந்த உதவி தேவையான்னு தெரிஞ்சுகிட்டு, உதவலாம்.

பா.கு.தபஸ்யா லெட்சுமி, 11ஆம் வகுப்பு
உதவி செய்யறதுக்கு முன்னாடியே, அதனால என்ன ஆகும்னு எல்ேலாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால, நம்மால முடிஞ்ச சின்னச்சின்ன உதவிகளைப் பிறருக்குச் செய்யணும். வீட்டு வேலையில அம்மாவுக்கு உதவறது கூட உதவிதான். உதவணும்னு மனம் இருந்தா எல்லோராலயும் உதவ முடியும். நாம யாருக்கும் உதவி செய்யலன்னா நமக்கு எந்த உதவியும் கிடைக்காது.

ரா.ஜெயஸ்ரீ, 12ஆம் வகுப்பு
பேப்பர்ல வர்ற சில செய்திகளைப் பார்க்கும்போது ஹெல்ப் பண்றதுல ஆபத்துகள் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுது. விபத்துல அடிபட்டவங்களுக்கு உதவறதெல்லாம் ஆபத்து கிடையாது. ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி சொல்லலாம். பக்கத்தில இருக்கறவங்களை உதவிக்குக் கூட்டி வரலாம். இதெல்லாமும் உதவிதான். ஆபத்துன்னு நினைக்காம அந்த நேரத்துக்கு உதவறதுதான் சரி.

ரு.சி.புவனேஷ்வரி, 12ஆம் வகுப்பு
இந்த காலத்துல உதவறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. கண் தானம், உடல் தானம் இதெல்லாம் கூட உதவிதான். இதைப்பத்தி மத்தவங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கறதுகூட சமூகத்துக்குச் செய்யற உதவிதான். ஓய்வு நேரத்தில நாம படிச்சதை பிறருக்குச் சொல்லிக் கொடுத்து உதவலாம். உதவுறது எப்பவுமே ஆனந்தம் தரும் விஷயம்தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement