Advertisement

பனீர் கொழுக்கட்டை

தேவையானவை

அரிசி (கொழுகட்டை) மாவு -2 கப்
தண்ணீர்- 2 கப்
உப்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை
அகலமான அடி கனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விடவும். தண்ணீர் தள, தளவென கொதிக்கும் போது உப்பு, எண்ணெய் விட்டு பின் மாவை கொட்டி கிளறவும். அடுப்பை சிம்மில் வைக்கவும். மாவின் நிறம் மாறும் போது கையில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். பின், ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து மாவின் மேல் மூடி வைக்கவும். மாவு காயாமல் இருக்கும். கொழுக்கட்டைக்குள் வைக்க பனீர் உளுந்து பூரணம் செய்வது எப்படி என பார்ப்போம்.


தேவையானவை
வெள்ளை உளுந்து - 1 டம்ளர் (1/2 மணி நேரம் ஊற வைக்கவும்)
பச்சை மிளகாய் 5 (அவரவர் காரத்திற்கேற்ப)
பெருங்காயம், உப்பு - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
துருவிய பனீர் - 1 கப்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை
உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். பின், அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். பின், ஆற வைத்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, கடுகு பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள உளுந்து கலவை மற்றும் துருவிய பனீரை போட்டு தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கினால் பூரணம் ரெடி.
ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் மாவில் சிறிது எடுத்து பிசைந்து உருண்டை பிடிக்கவும். அதனுள் பூரணத்தை வைத்து மூடி வைத்து ஆவியில் 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement