Advertisement

பத்து ரூபாய் சாப்பாடு!

மதுரை, அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள அந்த சிறு உணவு விடுதியில், ஆட்டோ ஓட்டுவோர், சைக்கிள் ரிக் ஷா மற்றும் கைவண்டி இழுப்போர், கிராமத்தில் இருந்து மஞ்சள் பையோடு வந்தவர்கள் மற்றும் மாணவர்கள் என்று, மதிய வேளையில் கூட்டம் அலைமோதுகிறது.
ராமு தாத்தா வழங்கும், 10 ரூபாய்க்கான ருசியான சாப்பாடை, சாப்பிடத்தான் அப்படி ஒரு கூட்டம்.
யார் இந்த ராமு தாத்தா? 85 வயதாகும் இவர், பல ஆண்டுகளாக, ஏழை - எளியவர்களுக்காக, 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வருகிறார்.
விருதுநகர் அருகே உள்ள வில்லுாரை சேர்ந்தவர், ராமு; தன், 13 வயதில் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பல ஊர்களில் ஓட்டலில் வேலை பார்த்துள்ளார்.
அப்படி ஒரு சமயம், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வடலுார் போயிருந்த போது, பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ளோர் வயிறார சாப்பிட்டு, மனதார வாழ்த்துவதை பார்த்தவர், அன்றிலிருந்து தானும் அதுபோல, முடிந்த வரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆரம்பத்தில், மதுரை குருவிக்காரன் சாலையில், சாலையோரக் கடை போட்டு, ஒரு இட்லி, 10 பைசாவிற்கு விற்று, தன் தொழிலை ஆரம்பித்தார். பின், படிப்படியாக வளர்ந்து, இப்போது, மதுரை, அண்ணா பஸ் நிலையம் பகுதியில், உணவு விடுதி வைத்துள்ளார்.
காலை உணவுடன், மதிய உணவும் வழங்க ஆரம்பித்தார். அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர் மற்றும் காய்கறி கூட்டுடன் இவர் கொடுக்கும், 10 ரூபாய் சாப்பாடு, வயிற்றுக்கும், மனதிற்கும் இதமாக இருப்பதால், எளியவர்கள் தேடி வந்து சாப்பிடுகின்றனர்.
மேலும், காசு இல்லாதோர், இவர் கடையில் இலவசமாக சாப்பிட்டு போகின்றனர். அத்துடன், தினமும், 20 சாப்பாட்டை, பார்சலாக கட்டி, நடக்க முடியாதவர்களுக்கு கொடுக்கிறார். இப்போது, வயதாகி விட்டதால், வேலை ஆட்களிடம் கொடுத்தனுப்புகிறார்.
மனைவி பூரணத்தம்மாள், இவருக்கு துணையாக மட்டுமின்றி, இவரின் தொழிலுக்கு துாணாகவும் இருந்தார்; மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார். இறக்கும் தருவாயிலும், கணவரிடம், 'எந்த சூழ்நிலையிலும், குறைந்த விலையில் ஏழைகளுக்கு சாப்பாடு போடுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்...' என்று சொல்லி இருக்கிறார்.
'அந்த மகராசி இல்லாம, நான் மனதளவில் கஷ்டப்படுறேன்; ஆனா, கடைக்கு வரக்கூடியவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, இந்த வயதிலும் உழைக்கிறேன்.
'அந்தந்த மாதம் உணவு பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் எவ்வளவு செலவாகுமோ, அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன். என் செலவிற்கு கட்டுப்படியானால் போதும்; ஒரு பைசா லாபம் வேண்டாம்...' என்று சொல்லி, சாப்பிடுவோரை அன்போடு கவனிக்கிறார்.

எல்.முருகராஜ்

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  வாழ்த்துக்கள் ... வாழும் தெய்வத்திற்கு ...

 • MUNIRATHINAM ANBUCHEZHIAN - kalpakkam,இந்தியா

  வாழ்த்துக்கள் ஐயா ..வாழ்க வளமுடன்

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

   எத்தனை ஹோட்டல்காரர்கள், இப்படி குறைந்த விலைக்கு சாப்பாடு கொடுப்பார்கள்.கணக்கு காட்டாமல் வைத்து இருந்த துட்டை தொலைத்தவர்கள்தானே அதிகம்.தினம் மனம் நொந்து எங்கே எங்கே என்று தேடி தேடி மோடியை திட்டுவது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

  • Manian - Chennai,இந்தியா

   அன்னதானத்திலேயும் கோயில் அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள். இவர் போல் இருப்பவர்கள் கருவேப்பில்லை போன்றவர்கள். பொதுவாக கறிவேப்பிலை(ரிஷிகேசை தவிர) வேறெங்கும் காடாக வளராது. போன ஜென்மாக் கடனை அடைக்கும் உந்தல் இவர்கள் போன்று சில நல்லவர்களையும் செய்யவிக்கிறது. இங்கே உண்வு உண்டவர்களா அதுபோல் சிலருக்காவது செய்வார்களா என்பது சந்தேகமே. இவர் இனி பிரக்கவே மாடடார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement