Advertisement

கொழுக்கட்டை!

தேங்காய் பூந்தி கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 0.5 கிலோ, இனிப்பு பூந்தி - 1 கப், சர்க்கரை - 0.5 கப், தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவி, வறுக்கவும். ஏலக்காயை பொடி செய்து, பூந்தி சர்க்கரையுடன் துருவி, வறுத்துள்ள தேங்காய் சேர்த்து, லேசாக மசித்து கொள்ளவும்.
அரிசி மாவை, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து, மெல்லிய கிண்ணம் போல் செய்து, அதில் மசித்து வைத்துள்ள பூந்தி கலவையை போட்டு மூடி, இட்லி தட்டில் வேக வைத்து பரிமாறவும்.


வெல்ல மோதக கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - அரைக் கிலோ, வெல்லம் - 1.5 கப், தேங்காய் ஒன்று, ஏலக்காய் சிறிதளவு.
செய்முறை: தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம் பாகாய் காய்ச்சி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். சூடு ஆறிய பின் சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
அரிசி மாவை வெந்நீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து மெல்லியதாக தட்டி, தேங்காய் பூரணத்தை வைத்து, ஓரங்களை மூடி, இட்லி தட்டில் வேக வைத்து பரிமாறவும்.


தாளித்த உப்பு கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 1 கப், வேக வைத்த கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊற வைத்து, நன்றாக அரைத்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்த மாவு, வேக வைத்த பருப்பு, சர்க்கரை, தேங்காய் துருவலுடன் உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். ஆறிய பின், சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து பரிமாறவும்.


எள் உருண்டை!
தேவையான பொருட்கள்: எள் - 100 கிராம், வெல்லம் - 2 கப், நெய் சிறிதளவு.
செய்முறை: எள்ளை கல் நீக்கி, கழுவி சுத்தம் செய்து வெறும் சட்டியில் படபடவென பொரிய விடவும். வெல்லத்தில், 1 கப் தண்ணீர் விட்டு பாகு பதம் வந்தவுடன், வறுத்து வைத்துள்ள எள்ளை கொட்டி கிளறி, கையில் ஒட்டாமலிருக்க, நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.


நவதானிய சுண்டல்!
தேவையான பொருட்கள்: கொள்ளு, காராமணி, பச்சை பயறு, மொச்சை, காராமணி, பட்டாணி, கறுப்பு கொண்டை கடலை, வெள்ளை கொண்டை கடலை - தலா 1/4 கப், வறுத்து பொடித்த எள் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: தானியங்களை ஊற வைத்து, குக்கரில் வேக விடவும். வெந்ததும் தண்ணீர் வடித்து, கடுகு தாளித்து, உப்பு சேர்த்து கிளறிய பின், எள்ளு பொடியை துாவி, இறக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement