Load Image
Advertisement

பெண்ணே... பூச்செண்டு தா! - 3

சென்ற வாரம்: கிளி சொன்ன ஆலோனைப்படி, பேரண்ட பறவைகளை சந்திக்க வந்த, மந்திரி குமாரன். மரத்தின் அடியில் படுத்திருந்தான். அப்போது, பேரண்ட பறவைகளின் குஞ்சுகளை சாப்பிட வந்த பாம்பை கொன்றான். இனி -

அண்ட, பேரண்ட பறவைகள் திரும்பி வந்ததும், தங்கள் குஞ்சுகளுக்கு இரை கொடுத்தன. ஆனால், குஞ்சுகளோ, இரையை தொடாமல் சோகத்துடன் இருந்தன.
'ஏன் வழக்கத்துக்கு விரோதமாக இப்படி இருக்கிறீர்கள்...' என்று கேட்டன.

'இந்த மரத்தின் அடியில் ஒருவன் இருக்கிறான்; எங்களை சாப்பிட வந்த பாம்பைக் கொன்று, காப்பாற்றினான்; அவனுக்கு பரிகாரம் செய்யாவிட்டால், உணவு உண்ண மாட்டோம்...' என்றன குஞ்சுகள்.
அண்ட, பேரண்ட பறவைகள் இரண்டும், மரத்தின் அடியில் இருந்த மந்திரிகுமாரனிடம், 'வந்த காரணம், என்ன' என்று கேட்டன.
ஏழு கடல்களைத் தாண்டி உள்ள தீவுக்குச் செல்ல, உதவி கேட்டான், மந்திரிகுமாரன்.
''இரை தேட, நாளை காலை போவேன். அப்போது, என் மீது அமர்ந்து கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொள். ஏழு கடல்களை தாண்டியுள்ள தீவில் விடுகிறேன்...'' என்றது, ஆண் பறவை.
மறுநாள் -
குதிரையை, பக்கத்து ஊர் விவசாயிடம் ஒப்படைத்த மந்திரிகுமாரன், ''திரும்பி வரும் வரை பத்திரமாக பார்த்து கொள்...'' என்று கூறி, ஆலமரத்தடிக்கு வந்தான். ஆண் பறவை மீது அமர்ந்து கழுத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். வழியில், நவரத்தினங்கள் நிறைந்த கடல் ஒன்றைக் கண்டான். உடனே, ''காலைக் கடன் கழிக்க வேண்டும்; கொஞ்சம் இறக்கி விடுகிறாயா...'' என்றான்.
பறவையும், நவரத்தினங்கள் நிறைந்த கடல் அருகில், இறக்கியது. மந்திரிகுமாரன், உயர்ந்த வகை ரத்தினங்களை, கை நிறைய அள்ளி, மடியில் கட்டிக் கொண்டான்.
மீண்டும் பயணம் தொடர்ந்தது. பேரண்ட பறவை, ஏழு கடல்களைத் தாண்டி, தீவில் இறக்கியது.
மந்திரிகுமாரன், அங்குள்ள வீதி வழியே சென்றான். கோவிலில், சிலை உருவில் பார்த்த பெண், ஒரு மாளிகை உப்பரிகையில் நிற்பதை கண்டான். உடனே, அந்த மாளிகைக்குள் சென்றான்.
அதன் சொந்தக்காரர், நவகோடி நாராயணன். அவர் முன், நவரத்தினங்களை, கொட்டியதும், பிரமித்து விட்டார். அவரது சொத்தைப் போல், பல ஆயிரம் மடங்கு மதிப்புள்ளவை.
''ஐயா... இந்த ரத்தினங்கள் எங்கு கிடைத்தன...'' என்று கேட்டார், நவகோடி நாராயணன்.
''எங்கள் அரசரிடம், இதைப்போல, பல ஆயிரம் மடங்கு மதிப்புள்ள கற்கள், குவியல் குவியலாக உள்ளன. தங்களிடம் எங்கள் மன்னருக்கு ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது. எனவே இதை, தங்களுக்கு பரிசாக கொடுத்தனுப்பினார்...'' என்றான், மந்திரிகுமாரன்.
''இவ்வளவு பெரிய செல்வத்துக்கு அதிபதியாக உள்ள, உங்கள் மன்னருக்கு ஆக வேண்டிய காரியம் என்ன...'' என்றார், நவகோடி நாராயணன்.
அரசகுமாரன், அவரது மகள் உருவில் கோயிலில் உள்ள சிலையை கண்டு, பைத்தியமாகிவிட்டதை கூறி, ''உங்கள் மகளை நேரில் பார்த்தால் தான், அரச குமாரன் பிதற்றி கொண்டிருப்பதை நிறுத்துவான். அதற்காகத்தான் அரசர் உங்களிடம் அனுப்பினார்...'' என்றான், மந்திரி குமாரன்.
இதைக் கேட்டு பரிதாப்பட்ட நவகோடி நாராயணன், மந்திரிகுமாரனுடன், மகளை கப்பலில் அனுப்பி வைத்தார்.
மந்தரிகுமாரன், அவளை அழைத்தபடி கோயிலுக்கு வந்தான். வடக்கு பிரகாரத்திற்குள் நுழையும் முன், பூக்களைப் பறித்து தொகுத்து, ஒரு செண்டாக்கினான்.
அதை, நவகோடி நாராயணன் மகளிடம் கொடுத்து, ''கோயிலின் வடக்குப் பிரகாரத்தில், அரசகுமாரன், பூச்செண்டு கேட்டு பிதற்றி கொண்டிருப்பான்; அவனிடம், பூச்செண்டை கொடு. அவன் பித்தம் நீங்கி, என்னைப் பற்றி விசாரித்தால், வழியில் இறந்து விட்டதாக கூறு. கஷ்டப்பட்டு உன்னை அழைத்து வந்த என் மீது, அவனுக்கு நட்பு உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்...'' என்றான்.
அந்த அழகிய பெண், அரசகுமாரனைப் பார்த்ததும், ''இதோ பூச்செண்டு...'' என்று நீட்டினாள். அதை வாங்கியதும், அரசகுமாரனின் பைத்தியம் நீங்கியது.
''சிலை உருவில் இருந்த உன்னை, உயிருடன் கொண்டு வந்த நண்பன் எங்கே...'' என்று, கேட்டான், அரசகுமாரன்.
''வரும் வழியில், ஒரு சிறுத்தை, அடித்துக் கொன்று விட்டது...'' என்றாள் அப்பெண்.
துக்கமடைந்த அரசகுமாரன், ''துன்பங்களை கடந்து, உன்னை இங்கு அழைத்து வந்த நண்பன் இறந்து விட்டானா... அவன் இறந்த பின், உயிர் வாழ்ந்து என்ன பயன்...'' என்று கூறியவாறே, உடைவாளால், தன் தலையைத் துண்டித்து இறந்தான்.
இதைப் பார்த்த பூவழகியும், அதே உடைவாளால், தன் தலையை துண்டித்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில், அங்கு வந்த மந்திரிகுமாரன், இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்து, தானும், உடைவாளால் தலையை துண்டித்துக் கொண்டான்.
சிறிதுநேரத்தில், கோவில் அர்ச்சகர் பூஜை செய்ய வந்தார். மூவர் தலையும் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்தார். 'கோயிலில் சோக சம்பவம் நேரிட்டு விட்டதே' என்று மனம் வருந்தி, தலையைத் துண்டித்துக் கொண்டார்.
மறுநாள் -
கோவிலுக்கு வந்த பக்தர்கள், நான்கு பேர், தலை வெட்டுண்டு கிடப்பதைக் கண்டனர். இந்த சோகத்தைக் காண சகிக்காமல், 'நால்வரையும் உயிர்ப்பிக்கா விட்டால், எல்லாரும் தலைகளை துண்டித்துக் கொள்வோம்...' என, காளியிடம் பிரார்த்தித்தனர்.
பிரார்த்தனையைக் கேட்டு பிரசன்னமானாள் காளிதேவி. தலை வெட்டுண்டு கிடந்த, நால்வரையும் உயிர்ப்பித்தாள். உயிர் பெற்ற அரசகுமாரன், அர்ச்சகருக்கு பரிசுகள் அளித்தான். பூவழகியை அழைத்துக் கொண்டு, மந்திரிகுமாரனுடன் நாட்டிற்குச் சென்றான். தந்தையிடம், விவரத்தைச் சொன்னான். அவர் அகம் மகிழ்ந்து, நவகோடி நாராயணனை வரவழைத்து பேசினார். பூவழகிக்கும், அரசகுமாரனுக்கும் விமர்சையாக திருமணம் நடத்தி வைத்தார்.
- முற்றும்.
நன்றி: கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement