Advertisement

ரவுத்திர வீணை!

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு,
'தமிழனோட உயிருக்கு விலை அஞ்சு லட்ச ரூபாய்'னு, அரசு அதிகாரிகள் நிர்ணயம் பண்ணியிருக்கிறது உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்கய்யா... என் அம்மா லலிதாவோட உயிருக்குத் தான் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த விலை சொல்லியிருக்காங்க!
சமயபுரம் கோவில் சித்திரை திருவிழா தேர் வலத்துக்காக, எங்க அம்மாவும், தங்கச்சியும், கடந்த ஏப்ரல் 16ம் தேதி ராத்திரி கிளம்பினாங்க. எங்க அம்பிகாபுரம் வீட்டுல இருந்து, 5 கி.மீ., தொலைவுல திருச்சி - சென்னை புறவழிச் சாலை. அதுலதான், 55 ஆண்டுகள் பழமையான காவிரி ஆற்றுப் பாலம் இருக்கு.
ராத்திரி 10:30 மணி இருக்கும். பாலத்தோட மையப்பகுதியில, பராமரிப்பு இல்லாம இருந்த நடைபாதையில அம்மா கால் வைக்க, பாரம் தாங்காம ஓட்டை விழுந்து அம்மா கீழே விழ, பாறையில மோதி சம்பவ இடத்துலேயே மரணம். கூடவே விழுந்த தங்கச்சிக்கு முதுகு தண்டுவடத்துல பலத்த அடி.ரெண்டு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனா, 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மிஷின் ரிப்பேராகி ஆறு மாசமாச்சு!'ன்னு, சர்வ சாதாரணமா சொல்லிட்டாங்க. உடனே, தனியார் மருத்துவமனையில தங்கச்சியை சேர்த்து, லட்சக்கணக்குல கடன் வாங்கி அவளை பிழைக்க வைச்சோம்.
கோட்டை போலீசார் விசாரணையில, தேசிய நெடுஞ்சாலைத் துறையோட பராமரிப்பு குறைபாடு தான் விபத்துக்கு காரணம்னு தெளிவாயிடுச்சு. 'வயசான அம்மா தானே; அஞ்சு லட்ச ரூபாய் வாங்கிக்குங்க! இல்லேன்னா, கோர்ட்ல பார்த்துக்கோங்க!'ன்னு அதிகாரிகள் சொல்றாங்க. ஏப்ரல் 30ம் தேதி ஆட்சியர்கிட்டே மனு கொடுத்துட்டு வந்தேன். இன்னும் பதில் இல்லை.
எங்களுக்கு முறையான நீதி கிடைக்கணும். அதுக்கு நீங்க உதவணும். செய்வீங்களா?
- அரசின் நிர்வாக அலட்சியத்தால் பலியான தன் தாயின் மரணத்திற்கு நீதி கேட்கும் மயூரி, திருவெறும்பூர், திருச்சி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement