Advertisement

அனுபவம்: அளிக்கும் பரம ருசி!

வடநாட்டு சாட் உணவுகளுக்கு, சென்னையில் ஓரு பாரம்பரிய கடை இருக்கிறது என்றால் நம்புவீர்களா? எல்லிஸ் ரோட்டில் இருக்கும், பாம்பே லஸ்ஸி கடைக்கு வயது 45. 1973-ல் தொடங்கிய இந்த சாட் உணவகம் இன்றுவரை அப்பகுதி மக்களின் விருப்பமான கடை. தேவி திரையரங்கின் பின்புற வாசலுக்கு எதிரில் இருப்பதால், படம் பார்த்து திரும்பும் மொத்தக் கூட்டமும், இந்த கடையை நோக்கி வரும். கடை சிறியது தான் என்றாலும், உணவின் தரத்தில் எந்த குறைவும் இல்லை. பாம்பே லஸ்ஸியின் சிறப்பே கச்சோடியும், லஸ்ஸியும் தான்.
சமோசா, கச்சோடி, ரசமலாய், ஜிலேபி, ரசகுல்லா, குலாப்ஜாமூன், ஜிலேபி, காரட் அல்வா, பால்கோவா, பாசந்தி மற்றும் லஸ்ஸி என, இங்கு கிடைக்கும் சாட் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். காலை, 9:00 மணி முதல், இரவு 10:00 மணிவரை, கச்சோடியும் சமோசாவும் சூடாக இங்கு கிடைக்கும். சுடச்சுட தயாராகும் உருளைக்கிழங்கு மசாலா நிறைத்த சமோசாவுக்காக, மாலை நேரங்களில் மக்கள் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள்.
மந்தார இலையில் சூடாக சமோசாவை வைத்து, விரலால் உடைத்து விட்டு, அதில் கார சட்னியையும், இனிப்பு சட்னியையும் ஊற்றி கையில் கொடுப்பார்கள். சுடச்சுட சாப்பிடுவதே தனிசுகம் எனில், சூடான சமோசாவுக்கு சரியான ஜோடி, லஸ்ஸி.
சாதா, ஸ்பெஷல் என, இரண்டு வகைகளில் லஸ்ஸியை தருகிறார்கள். சாதா லஸ்ஸியில் பாசந்தி சேர்த்து, தூக்கலாக பாலாடை நிரப்பி, சர்க்கரை தூவி, ஒரு கிளாஸூக்கும் அதிகமாக கொடுத்தால், அதுவே ஸ்பெஷல் லஸ்ஸி. ஒரு ஸ்பெஷல் லஸ்ஸி பருகினால், அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. லஸ்ஸி தயாரிக்க, புளிக்காத இளம் கெட்டித்தயிர் பயன்படுத்துவதால், சுவை கூடுகிறது.
லஸ்ஸி பிடிக்காதவர்கள் கூட, இங்கு சாப்பிட்டால் நிச்சயம் லஸ்ஸி ரசிகராகி விடுவர். 'வாரத்திற்கு இரண்டு நாளாவது இங்கு வந்துவிடுவேன்' என்று அங்கு வரும் பல வாடிக்கையாளர்கள் பெருமையாகச் சொல்வதையும் பார்க்க முடிகிறது.
நொறுக்குத்தீனியாக, மாலைநேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே சிற்றுண்டி உண்ண இங்கு செல்லலாம். அண்ணாசாலை, தேவி திரையரங்கம், மெரினா, சேப்பாக்கம் போன்ற இடங்களுக்கு வருகிறவர்கள், அப்படியே பாம்பே லஸ்ஸிக்கு சென்று, சாட் உணவுகளை வேட்டையாடி விடுங்கள்!

5 நிமிடங்களில் லஸ்ஸி!
தேவையான பொருட்கள்:
கெட்டித் தயிர் : 1 கப்
சர்க்கரை : 5 டீஸ்பூன்
பாதாம் : 5
செய்முறை:
புளிப்பு இல்லாத இளம் தயிராக இருக்க வேண்டும். தயிருடன் சர்க்கரை சேர்த்து, மிக்சியில் நன்கு அடித்துக்கொள்ளுங்கள். நுரை பொங்கும் இந்த லஸ்ஸியை டம்ளரில் ஊற்றி, அதன்மீது பாதாமை துருவி, தூவுங்கள். விரும்பினால் ஐஸ் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் உணவு என்பதால் உடலுக்கு நல்லது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement