Advertisement

சிறுதானிய சமையல்: கொழுப்பைக் கரைக்கும் சிறுதானிய அடை

புதிய மசாலா சுவைகளுக்கு நம் நாக்கு பழகிவிட்டதால், சிறுதானியங்களை பாரம்பரிய பலகாரங்களாக சமைத்துச் சாப்பிடும் போது, அந்த ருசி இன்றைய தலைமுறையினருக்கு பிடிப்பதில்லை. அதனால் சிறுதானியங்களை அவர்களுக்கு பிடித்த வடிவில் அளிக்க வேண்டும் என்று கூறும், சமையல் கலைஞர் ரேவதி சண்முகம், சுவையான சிறுதானிய அடை தயாரிப்பதற்கான செய்முறையை அளிக்கிறார்.

தேவையானவை:
கம்பு, கேழ்வரகு : ¼ கிலோ
சோளம் : ¼ கிலோ
கொள்ளு : ¼ கிலோ
பாசிப்பயறு : ¼ கிலோ
குதிரைவாலி : ¼ கிலோ
சாமை அரிசி : ¼ கிலோ
வரகரிசி : ¼ கிலோ
கறுப்பு உளுத்தம்பருப்பு (தோலுடன்): 4 தேக்கரண்டி
கொண்டைக்கடலை : 4 தேக்கரண்டி

செய்முறை:
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும், காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவில் வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும்.
இத்துடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, அடையாகத் தட்டி, அதன்மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்.

பலன்கள்:
கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். குதிரைவாலி, இதயநோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சீரணத்துக்கு நல்லது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமனையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement