Advertisement

அனுபவம்: சுவையால் கவரும் 'கார்த்திக் டிபன் சென்டர்'

அண்ணாநகரில் உயர்தர உணவகங்களுக்கு குறைவில்லை. அப்படியிருந்தும் இந்த குட்டி உணவகத்தை நாடி வரும் வாடிக்கையளர்களின் எண்ணிக்கைக் குறைவதேயில்லை. ஆண், பெண் வித்தியாசமில்லாமல், வர்க்க வேறுபாடுகள் இன்றி அனைவரையும் ஈர்க்கும் உணவகமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது கார்த்திக் டிபன் சென்டர்.
காலை 6:30 மணிக்கே உணவகத்தைத் திறந்து விடுகிறார்கள். சுடச்சுட இட்லியோடு அதிகாலை தொடங்குகிறது. தோசை வகைகளில் வடகறி தோசை, பொடி தோசை, மசால் தோசை, பட்டர் பொடி, பட்டர் மசாலா என, 20 வகையான தோசை, கிச்சடி, பொங்கல், வடை, சப்பாத்தி, பூரி கிழங்கு, இடியாப்பம் என பல்வேறு டிபன் வகை உணவுகள் காலையில் கிடைக்கும்.
அண்ணாநகர் இரண்டாம் அவன்யூ மற்றும் பனிரென்டாவது அவன்யூ சேரும் முக்கிய இடத்தில் இந்த உணவகம் அமைந்திருப்பதால், அந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, நிச்சயம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். காலையில் தொடங்கி, இரவு 12 மணிவரை உணவகம் செயல்படுகிறது. மாலையில் காலிபிளவர் தோசை, தக்காளி தோசை அதிகமாக விரும்பி உண்ணுகிறார்கள். மாலையில் எந்த நேரத்திலும், மிளகு தூக்கலாக சமைக்கப்பட்ட பொங்கலை இங்கு ருசிக்கலாம்.
டிபன் வகைகளுக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வெஜிடபிள் குருமா ஆகியவற்றை அன்லிமிட்டட் ஆகப் பரிமாறுகிறார்கள். இரவு பதினொரு மணி என்றாலும், யார் எது வேண்டும் என்று கேட்டாலும், இல்லை என்று கூறாமல் இன்முகத்துடன் பரிமாறுவதே கார்த்திக் டிபன் சென்டரின் ஸ்பெஷல். நம் எதிரிலேயே அனைத்து பதார்த்தங்களும் செய்து கொடுப்பதால், சுத்தம் பற்றிய அச்சமில்லை. இதனாலேயே இவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு ஓட்டல் மாதிரி இருந்தாலும், இது ஒரு கையேந்தி பவன் தான். பொதுவாக பேச்சிலர்கள், வயதானவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கடைகளுக்குச் செல்வார்கள். ஆனால் இங்கு ஆண், பெண் பேதமில்லாமல், குடும்பத்துடன் வந்து சாப்பிடுகிறார்கள். டோக்கன் பெற்றுக்கொண்டு நின்று கொண்டே சாப்பிட்டாக வேண்டும் என்பது மட்டுமே கொஞ்சம் சிரமமாக இருக்கும். இருப்பினும் சுவையும், வாசமும் இந்த சிரமத்தை மறக்கடித்துவிடும்.
காலை டிபன், மதியம் வெரைட்டி ரைஸ், மாலையும் இரவும் டிபன் என்று சுவையான வெஜிடேரியன் உணவினை, குறைவான விலையில் சுவைத்து மகிழ இங்கு சென்று வரலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement