Advertisement

ரௌத்ர வீணை!

குட்டி கதைகள் சொல்லும் தமிழக முதல்வருக்கு,
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லணும்; சொல்லவா?
கோவில் நடுவுல ஒரு தாமரை குளம். அதுல நீராட வருது ஒரு யானை. அது தண்ணிக்குள்ளே காலை வைச்சதும், குளத்துல இருந்த ஒரு முதலை யானையோட காலை கவ்வுது. வலி பொறுக்க முடியாத யானை, 'பெருமாளே...'ன்னு பிளிற, தன் சக்ராயுதத்தால முதலையை கொன்னு யானையை காப்பாத்துறாரு திருமால்.
எவ்வளவோ கதைகள் படிச்சிருக்கிற நீங்க, இந்த கதையையும் நிச்சயம் படிச்சிருப்பீங்க. இப்போ நான் எதுக்கு இந்த கதையை சொல்றேன்னா, அன்னைக்கு யானை கூப்பிட்ட அடுத்த வினாடியே கடவுள் வந்துட்டாரு.
ஆனா, இரண்டரை வருஷமா நான் அழுதுட்டு இருக்குறேன். நீங்களும் உங்க அதிகாரிகளும் மவுனமா இருக்குறீங்க! உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?
கடந்த 2015, ஏப்ரல் 8ம் தேதி.
பழைய கொள்ளிடம் ஆத்துல குளிக்கப் போன என் கணவரை, கரையேற விடாம இழுத்துட்டுப் போயிடுச்சு முதலை. தகவல் கேள்விப்பட்டதும், அப்போ சட்டசபை உறுப்பினரா இருந்த பாலகிருஷ்ணன் வந்து, சடலத்தை உடனடியா மீட்கணும்னு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாரு.
பத்து நாள் தீவிரமா தேடுனாங்க. ஆனா, உடலை கண்டுபிடிக்க முடியலை.அப்பவே, 'வனவிலங்கு தாக்குதல்ல உயிரிழந்ததால, 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், அரசு வேலையும், இலவச வீட்டு மனையும் வழங்கணும்'னு, கடலுார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினதா சொன்னாரு.
ஆனா, அண்ணாமலை நகர் காவல் நிலையத்துல, 'நபர் காணவில்லை'ன்னு, மிகச்சாதாரணமான வழக்கா பதிவு பண்ணிட்டாங்க. இந்த முதல் தகவல் அறிக்கை பதிவால, என் கணவருக்கு இறப்பு சான்றிதழ் கிடைக்காம ரெண்டரை வருஷமா சிரமப்படுறேன்! இது இல்லாததால, கடைக்காக வாங்குன கடன் தள்ளுபடி ஆகாம, கடை கைவிட்டு போயிருச்சு. வருமானம் இல்லை. ரெண்டு பிள்ளைகளை வைச்சிட்டு, என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுப் போய் நிற்கிறேன்.
வருவாய் துறையினர் விசாரணையில, முதலை தாக்கி என் கணவர் இறந்ததை உறுதிப்படுத்தி கடிதம் கொடுத்தாங்க! அப்புறம் அவங்களே, இறப்பு சான்றிதழ் விண்ணப்ப மனுவை நிராகரிச்சுட்டு, 'கோர்ட்டுக்கு போய் பார்த்துக்கோங்க'ன்னு சொல்லிட்டாங்க! இப்போவரைக்கும் இறப்பு சான்றிதழும் கிடைக்கலை; இழப்பீடும் இல்லை! மூணு மாசத்துக்கு முன்னாடி கூட, கடலுார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு போய் கண்ணீர் விட்டுட்டு தான் வந்தேன்.
அய்யா, மக்களுக்காகத் தானே ஆட்சி நடத்துறீங்க?
- பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைக்கு இரையாகிய கணவர் பாண்டித்துரையின் சடலம் கிடைக்காமல், அதனால் இழப்பீடும் கிடைக்காமல் வறுமையில் வாடும் சாந்தி, சாலியந்தோப்பு, சிதம்பரம், கடலுார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement