Advertisement

கண்டுபிடிப்புகள் 2017

உலகளவில் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை, ஆண்டுதோறும் அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிடுகிறது. அதன்படி 2017 கண்டுபிடிப்புகளில் சில:

நினைத்த சூட்டில் 'காபி'
பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் அருந்துவது காபி அல்லது டீ. சூடு அதிகமாக இருந்தால் அது, நம் நாக்கை சுட்டு விடும். சூடு குறைவாக இருந்தால் குடிப்பதற்கு மனது வராது. எனவே சூடு சரியாக இருப்பதற்காக ஒரு 'மக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் தயாரிக்கப்பட்ட இது 'ஆப்' மூலம் செயல்படும். இதில் நமக்கான 'வெப்பநிலையை' தேர்வு செய்தால், 37 விநாடிகளில் அது தயாராகிவிடும். இதன் விலை ரூ. 5,062.


குறைந்த எடைக்கு 'தீர்வு'
குழந்தைகளுக்கு சராசரி உடல் எடை முக்கியமானது. எடை குறைந்தால், அடிக்கடி உடலின் வெப்பநிலை குறையும். பிரச்னையின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை பெற்றோர் அறிய இயலாது. இதற்கு தீர்வாக 'பெம்பு' என்ற 'கைக்கடிகாரம் போன்ற கையில் கட்டும் சாதனத்தை' கண்டறிந்துள்ளனர். இதனை குழந்தையின் கையில் கட்ட வேண்டும். குழந்தைக்கு அதிக குளிர் ஏற்படும் போது 'ஆரஞ்சு' நிற ஒளி எழுப்பி 'அலர்ட்' செய்யும். இதன் மூலம் குழந்தையின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி செய்து காப்பற்றலாம். இதுவரை 10 ஆயிரம் குழந்தைகள் இதனை பயன்படுத்தியுள்ளனர்.
விலை ரூ. 1800.

பார்வை தரும் 'இ-கண்ணாடி'
உலகில் லட்சக்கணக்கான பேர், பார்வையின்றி உள்ளனர். அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக உள்ளது. பார்வைத்திறன் குறைவாக மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு 'இசைட் 3' என்ற உயர்ரக எலக்ட்ரானிக் கண்ணாடி உருவாக்கியுள்ளனர். இதற்காக எவ்வித ஆப்பரேஷன் செய்ய தேவையில்லை. பார்வை குறைபாடு உள்ளவர் அணிந்து கொண்டால் போதும். அவர்கள் பார்க்கலாம். இதில் சக்திவாய்ந்த கேமராக்கள், எச்.டி. வீடியோ திரைகள் உள்ளன. பிப்ரவரியில் அறிமுகமானது. இதுவரை அமெரிக்காவில் 1,000 பேர் பயன்படுத்துகின்றனர்.
விலை ரூ. 6.4 லட்சம்.

நாலா பக்கமும் 'லிப்ட்'
உலகில் வானாளாவிய கட்டடங்கள் பெருகி வருகின்றன. இரண்டு மாடி படியில் ஏறுவதற்கே, இப்போதைய சந்ததியினர் மூச்சு வாங்குகின்றனர். இதனால் 'லிப்ட்' மற்றும் 'நகரும் படிக்கட்டை' தான் பயன்படுத்துகின்றனர். இதில் கீழ் தளத்தில் இருந்து மேலே செல்வதற்கு விரைவாகவும், கஷ்டப்படாமலும் செல்ல முடிகிறது. 2 தளங்கள் உள்ள கட்டடங்களில் கூட 'லிப்ட்' உள்ளன. ஆனால் இவ்வகை லிப்ட்கள் கீழே, மேலே மட்டும் தான் செல்லும். தற்போது ஜெர்மனி நிறுவனம் பக்கவாட்டிலும் செல்லும் 'லிப்ட்' உருவாக்கி சாதித்துள்ளது. இந்த லிப்டில் இடது மற்றும் வலது பக்கமாகவும் செல்ல முடியும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement