Advertisement

இளஸ்... மனஸ்... (90)

அன்பு சகோதரி ஜெனிபருக்கு,
என் மனக்குமுறலை, கொட்டுகிறேன். இதன் மூலம், பல குழந்தைகளுக்கு, விடுதலை வரும் என்று நம்புகிறேன். என் மகள், தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறாள். காலையில், 6:45 மணிக்கு, பள்ளி வாகனம் வரும்; 8:00 மணிக்கு வகுப்பு ஆரம்பம். சாப்பிட்டும், சாப்பிடாமலும், ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்து ஓடுவாள்.
நிம்மதியாக, காலை கடன்களை முடிக்க கூட நேரம் இருப்பதில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், 'இன்டெர்வெல்' நேரத்தில், அனைவரும், 'டாய்லெட்' செல்வதால், 'சுத்தமாக இருக்காது, அசிங்கமாக கிடக்கும்' என்று, போக மாட்டாள். வகுப்பு நேரத்தில், அவசரம் என்றால் கூட, ஆசிரியர்கள் விடுவதில்லை. கண்டபடி திட்டுவதால், சிறுநீரை அடக்கி... தொற்று உட்பட, பல உபாதைகள் வந்து விட்டன. 'டாய்லெட்' போக பயந்து, தண்ணீர் குடிக்க மாட்டாள்; வீட்டிற்கு வந்தபின், அவசரமாக ஓடுவாள்; மகளின் ஆரோக்கியம் குறித்து, மருத்துவர் கண்டபடி திட்டுகிறார்; நான் என்ன செய்யட்டும்.
ஆசிரியர்கள்... ஏன் இப்படி நடந்துக் கொள்கின்றனர். கொஞ்சம் கூட, மனசாட்சியே இல்லையா... அவசரம் என்றால் அனுமதித்தால் என்ன! அப்படி என்ன படிப்பு முக்கியம்... தனியார் பள்ளி நிலையே இப்படி என்றால்... அரசு பள்ளிகளில் நிலைமை... ஆசிரியர்களுக்கு உறைக்கும்படி, புத்தி சொல்லுங்க சகோதரி!

என்னை கேட்டால்... ஆசிரியர்கள் செய்ய வேண்டிய முதல், முக்கிய பணி இதுதான் என்று சொல்வேன். படிப்பை விட, ஆரோக்கியம் மிக மிக முக்கியம். இப்போது... சிறுவர், சிறுமியர், மருத்துவமனைகளில், 'டயலிசிஸ்' செய்வதைப் பார்க்கும் போது, ரத்தக்கண்ணீர் வருகிறது.
பல நோய்களுக்கு காரணம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை அடக்குவது தான் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருமணி நேரம் பட்டினி, ஒருநாள் விரதம், ஏன்... வாரக்கணக்கில் விரதம்... இவையல்லாம் உடலுக்கு நல்லது. ஆனால், மலம், சிறுநீர் கழிப்பதை, ஒரு மணி நேரம் தள்ளிப்போடுவது நல்லதல்ல; இதையே தொடர்ந்து செய்தால், உடல் சித்ரவதைப்படும்.
மூன்று வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆசிரியர்களிடம் சொல்லப் பயந்து, சிறுநீரை அடக்கப் பழகுகின்றனர். முடியாத பிள்ளைகள். வகுப்பறையியே கழித்து, அவமானப்படுகின்றனர். பத்து நிமிட, இடைவெளியில், அத்தனை பேரும் எப்படி கழிப்பறை பயன்படுத்த முடியும். 'பெல்' அடித்து விட்டால், அடித்து, பிடித்து வகுப்பறைக்கு ஓடி வருகின்றனர். போகாமல் வருவோர், ஆசிரியரின் திட்டுக்கு பயந்து, அடக்குகின்றனர். 'மலம் கழிக்க வேண்டும், சிறுநீர் வருகிறது' என்று எத்தனை பேரால், தைரியமாக கேட்க முடிகிறது.
உரிய நேரத்தில் வெளியேற்றாவிட்டால், சிறுநீர் பாதையில், அடைப்பு ஏற்பட்டு, 'நெப்ரான்'கள் செயலிழந்து, சிறுநீரகம் சுருங்கும். சிறுநீரகம் செயல்படாவிட்டால், 'டயலிசிஸ்' செய்ய வேண்டி வரும்; மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தவிர, வேறு வழி இல்லை.
என்ன கொடூரம் பாருங்கள்! குழந்தைகள் இப்படியா பாதிக்கப்பட வேண்டும். இந்த அபாயம் குறித்து, எப்போதாவது ஆசிரியர்கள் யோசித்ததுண்டா...
ஆசிரியர்களே... பிள்ளைகள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை; அவர்களுக்கு, முதல் முக்கியப் பாடம், 'அவசரம் என்றால் தைரியமாக கேளுங்கள்...சிறுநீரை அடக்கி வைத்தால், பின் விளைவுகள் ஏற்படும்.
உடல் பிரச்னை எதுவாக இருந்தாலும், பகிர்ந்துக் கொள்ளுங்கள்...' என்று, அன்பாக சொல்லுங்கள். 'டாய்லெட் போறேன்...' என்று, சும்மா... ஏமாற்றுவோரை கண்டு பிடிப்பது சுலபம்; அவர்களிடம், சற்று கண்டிப்பு காட்டினால் போதும். படிக்கும் பிள்ளைகளின் உடல் நலம் உங்கள் கைகளில்...
- வேதனையுடன், ஜெனிபர் பிரேம்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement