Advertisement

ஹிட்லரின் கடைசி உத்தரவு!

அடால்ப் ஹிட்லர், ஜெர்மனி நாசிக்கட்சி தலைவர். 1934ல், ஜெர்மனி நாட்டின் தலைவரானார். ஜெர்மனியின், 'பியூரர்' என, அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் தலைமையிலான செம்படையிடம், ஜெர்மன் தலைநகர் பெர்லினில், ஹிட்லரின் நாசிப்படை வீழ்ச்சி அடைந்தது.
ஹிட்லருக்கு, குழந்தைகள் என்றால் அலாதி பிரியம். தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம், அவர் முதலில் கேட்கும் கேள்வி, அவர்கள் வீட்டுக் குழந்தைகளை பற்றித்தான்...
இரண்டாம் உலகப் போரில் தோல்வியை தழுவிய ஹிட்லர், தன் உடல் எதிரிகளிடம் கிடைத்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். ரஷ்யப்படை, ஹிட்லரை நெருங்கும் முன், திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்தன.
இறுதிப் போர் நடந்து கொண்டிருந்தது... ரஷ்யாவின் செம்படை, ஜெர்மனியில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அன்று காலை, தான் பதுங்கியிருந்த சுரங்க அறைக்கு, அதிகாரிகளை, குடும்பத்துடன் அழைத்த ஹிட்லர், 'எதிரிகள் நெருங்கி கொண்டிருக்கின்றனர்; அனைவரும் தப்பி ஓடிவிடுங்கள்... கடைசியாக ஒரு வேண்டுகோள்.
'இதோ... இன்னும் சிறிது நேரத்தில், என் அருமை காதலி ஈவா பிரவுனை சுட்டுவிட்டு, நானும் சுட்டுப் கொள்ளப் போகிறேன்; இருவர் உடலையும், உடனே எரித்து விடுங்கள்; ஒரு எலும்பு துண்டு கூட, எதிரிகளிடம் சிக்கி விடக் கூடாது' என்றார்.
கடைசி நேரத்திலும் அவர் பதட்டம் அடையவில்லை. அதிகாரிகள் குடும்பத்தினருடன் மிகவும் இயல்பாக பேசினார். அதிகாரி ஹம்லரின், நான்கு வயது மகளிடம், 'டார்லிங் உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்.
'அங்கிள்! எனக்கு சாக்லெட் மிகவும் பிடிக்கும்; ஒரே ஒரு சாக்லெட் தாருங்களேன்' என்றது குழந்தை.
'நேற்று இந்த நேரம் கேட்டிருந்தால், லாரி லாரியாக கொடுத்திருப்பேன்; இப்போது இந்த நேரத்தில்...' என்று குரல் கம்மியவர், சட்டென்று சுரங்க அறைக்குள் சென்றார்.
அங்கே ஈவா, ஒரு, சாக்லேட்டை மென்று கொண்டிருந்தாள். அவளிடம் விவரம் கூற, மென்று கொண்டிருந்த சாக்லெட்டை, ஹிட்லருக்கு ஊட்டிவிட்டு, 'டோன்ட் ஒர்ரி டார்லிங்... நான்கு வயது சிறுமியிடம் தோற்றுப் போவதா... நோ... நோ...' என்று கூறி, மீதி இருந்த சாக்லேட்டை அவரிடம் நீட்டினாள்.
குழந்தையிடம் திரும்பி வந்த ஹிட்லர், 'சாரி மை சைல்ட்... சின்ன சாக்லேட் தான்... என் கடைசி பரிசு!' என்று கூறி கொடுத்தார்.
'தேங்க்யூ அங்கிள் இது போதும், நாளைக்கு நிறைய வாங்கி தாருங்கள்' என்று கூறி, வாங்கினாள். சுற்றியிருந்தவர்கள் கண்ணீரில் நனைந்தனர். அனைவருக்கும் நன்றி கூறி, 'சல்யூட்' அடித்து, 'சீக்கிரம்... காலம் தாழ்த்தாதீர்கள்...' என, காவல் அதிகாரிகளை தவிர, மற்றவர்களை அனுப்பிவிட்டு, சுரங்க அறைக்கு திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களில், முதல் குண்டு வெடிக்கும் சத்தம்... சரிந்தாள் ஈவா; இரண்டாவது குண்டில், ஹிட்லர் சரிந்தார்.
சோபாவில் கிடந்த ரத்தம் தோய்ந்த உடல்களை, போர்வையால் போர்த்தி, துாக்கிச்சென்ற அதிகாரிகள், எரி குழியில் கிடத்தி, 'சல்யூட்' அடித்து, சிரம் தாழ்த்தி நின்றனர்.
கொழுத்து விட்டு எரிந்த தீ, முழுவதுமாக ஏற்று கொண்டது. கொடூர மனிதன் ஹிட்லரின், இறுதி முடிவும் கொடூரமாகவே இருந்தது.
குட்டீஸ்... என்ன தீமை செய்தாலும், அது அப்படியே நம் பக்கம் திரும்பிவிடும்; அதனால் தான் எப்பவும் நல்லது செய்து, நல்ல பெயரெடுக்க முயற்சிக்கணும்... சரியா!
- சாரதா விஸ்வநாதன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement