Advertisement

மண் குவியல்!

அவினாசி என்னும் ஊரில், மருதவாணன் என்பவன் மனைவி, எழிலரசியுடன் வாழ்ந்து வந்தான். வேலை எதுவும் கிடைக்காமல், சிரமப்பட்டு கொண்டிருந்தான்.
கணவன் கஷ்டத்தை, மனைவியால், தாங்கி கொள்ள முடியவில்லை.
“எதற்காக உள்ளூரிலேயே கஷ்டப்படுகிறீர். வேறு ஏதாவது ஊருக்கு சென்று, வேலை தேடலாமே... வீட்டில் இருக்கிற அரிசியை சமைத்து சோறு கட்டி தருகிறேன்; வெளியூர் சென்று வேலை தேடுங்கள்; முயற்சி செய்தால், கண்டிப்பாக வேலை கிடைக்கும்...” என்று கூறினாள்.
மனைவி பேச்சை கேட்ட மருதவாணனுக்கு, ஆறுதலாக இருந்தது; மனைவியின் அறிவுரையைக் ஏற்பது என, முடிவு செய்தான்.
மறுநாள் -
அவன் மனைவி, கட்டுச்சோறு கட்டிக் கொடுத்து, வழியனுப்பி வைத்தாள்.
வெளியூர் வந்து சேர்ந்தான், மருதவாணன். அது, சித்திரை மாதம். வெயில் கொடுமை அவனை வாட்டியெடுத்தது.
நீண்ட நேர நடைக்குப் பின், மிகவும் களைப்படைந்தான். அருகில் இருந்த மண்டபத்தில், இளைப்பாறினான்.
அது, மதிய நேரம். மண்டபத்தில் அமர்ந்து சாப்பிட முடிவு செய்தான். அங்கிருந்த தெப்பக்குளத்தில், கை, கால்களை சுத்தம் செய்தான். பின் எடுத்து வந்த கட்டுச்சோற்றை, மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்த்து, பிரிக்கத் துவங்கினான்.
அங்கு ஒரு முதியவர் படுத்திருந்தார். கட்டுச்சோற்றின் மணம், அவர் மூக்கை துளைத்தது. பசியோடு இருந்த அவர், மருதவாணன் முன் இருந்த, கட்டுச் சோற்றைப் பார்த்தார்; அவர் நாக்கில் எச்சில் ஊறியது.
முதியவர், கட்டுச்சோற்றைத்தான் பார்க்கிறார், என்று புரிந்து கொண்ட மருதவாணன், “ஐயா... மிகவும் பசியோடும், களைப்போடும் இருக்கிறீர் போல தெரிகிறதே... இதோ, இந்த கட்டுச்சோற்றை சாப்பிட்டு, பசியைப் போக்கி கொள்ளும்...” என்று கூறியபடி, முதியவரிடம் கொடுத்தான்.
“பாதி மட்டும் கொடுத்தால் போதும், மீதியை நீ சாப்பிடு...” என்றார், அந்த முதியவர்.
“ஐயா... முழுச் சோற்றையும், திருப்தியாக சாப்பிடுங்கள்; அப்போது தான், பசி அடங்கி, களைப்பு தீரும்...” என்றான், மதிவாணன்.
பசியோடு இருந்த முதியவர் வேகமாக சாப்பிட துவங்கினார்.
உணவு உள்ளே சென்றதும், மயக்கமும், களைப்பும் மறைந்தது. அவர், “இதோ பாராப்பா... நீ யாரோ, எவரோ, தக்க நேரத்தில் வந்து, பசியை போக்கினாய்... உன்னை பார்க்கும் போது, ஏதோ பாதிப்பு அடைந்தவன் போல் தெரிகிறது; உன் முகமும் கவலையால் வாடியதாக தெரிகிறது. உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது...” என்று கேட்டார்.
“ஐயா... எனக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை; நான், வேலை தேடி வெளியூருக்கு புறப்பட்டு வந்தேன்; எனக்கு சரியான வேலை கிடைக்க வில்லை... என்ற மனக்குறைதான் வாட்டுகிறது...” என்றான்.
“நீ எதற்கு வேலைக்காக அலைய வேண்டும்... உனக்கு என்ன வேண்டுமோ, அவை எல்லாமே உன் மனைவியின் வாயில் இருக்கிறது... கவலைப்படாமல் சென்று, உன் மனைவியின் வாயைப் பார். எல்லாமே நல்லபடியாக நடக்கும்...” என்றார்.
முதியவரின் பேச்சு, மதிவாணனுக்கு குழப்பத்தை கொடுத்தது. இருந்தாலும், அவர் முகத்தில் தெய்வீகத்தன்மை இருப்பதை உணர்ந்தான். அவருக்கு நன்றி கூறி புறப்பட்டான்.
அதன்பின், அவன் மனம் வேறு இடத்தை நாடவில்லை. வேகமாக நடந்தான்; கிராமத்தில் நுழைந்து, வீட்டுக்கு வந்த கணவனை பார்த்த அவன் மனைவி முகத்தில் திகைப்பும், ஏமாற்றமும் காணப்பட்டது. கவலையை வெளியே காட்டாமல், இன்முகத்துடன் வரவேற்றாள்.
நடந்ததை அறிய, ஆவலோடு இருந்தாலும், கணவன் வாய் வழியாகவே, செய்தி கிடைக்கட்டும் என்று, பொறுமையாக நின்றாள்.
“எழிலரசி... நீ எனக்கு கட்டுச்சோற்றை கட்டி தந்தாயல்லவா, அதை ஒரு முதியவருக்கு உண்ண கொடுத்தேன்; அவர் முகத்தில் தெய்வீகத்தன்மை இருந்தது. அவர், 'எல்லாமே உன் மனைவியின் வாயில்தான் இருக்கிறது...' என்று கூறினார். அதனால், வேறு எங்கும் வேலை தேடாமல், உன்னிடம் வந்துவிட்டேன்...” என்றான் மதிவாணன்.
“அப்படி என்ன, என் வாயில் நவரத்தினங்களா கொட்டி கிடக்கின்றன...” என்றாள் எழிலரசி. உடனே, அவள் வாயில் இருந்து, நவரத்தின கற்களாக கொட்டின. கண்களைக் கூசச் செய்யும், அந்த நவரத்தின கற்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மருதவாணன், அந்த கற்களை எடுத்து சென்று, விற்றான்; அதில், ஏராளமாகப் பணம் கிடைத்தது. அந்த சுற்று வட்டாரத்திலேயே, அவர்கள் பெரும் கோடீஸ்வரர் ஆயினர்.
மருதவாணன் பக்கத்து வீட்டில், சுகுமார் என்பவன் குடியிருந்தான். அவன், மருதவாணனுக்கு ஏற்பட்ட அபார வளர்ச்சியை கண்டு, பொறாமை கொண்டான்.
'இந்த மருதவாணன் நம்மை விட, மோசமான நிலையில் தான் இருந்தான்; பின், எப்படி இவ்வளவு பெரும் பணக்காரனாக மாறினான். இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து, நாமும் இவனைப் போன்று இல்லை... இல்லை... இவனை விட பெரும் பணக்காரனாக வேண்டும்' என்று முடிவு செய்தான்.
ஒரு நாள் -
மதிவாணனை ரகசியமாக சந்தித்தான், சுகுமார்.
“நண்பா... திடீரென எப்படி கோடீஸ்வரன் ஆனாய். அந்த ரகசியத்தை சொல்...” என்று கேட்டான்.
மனைவி கட்டுச் சோறு கட்டி கொடுத்தது, மண்டபத்தில் முதியவரை சந்தித்தது; அவர் அருளால், வளர்ச்சி அடைந்தது பற்றி சொன்னான் மருதவாணன்.
ஆனால், மனைவியின் வாயில், நவரத்தினங்கள் கொட்டியதை மட்டும், ரகசியமாக வைத்து கொண்டான் மதிவாணன்.
இதை கேட்டு, அளவற்ற மகிழ்ச்சியடைந்தான், சுகுமார்.
'இவ்வளவுதானா... நான் என்னவோ ஏதோ என்று நினைத்து கொண்டிருந்தேன்' என்று நினைத்து கொண்டவனாய், விடைபெற்ற சுகுமார், வீட்டிற்கு வந்தான். எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தாள், அவன் மனைவி.
“உங்கள் நண்பரை சந்தித்து, அவர் பணக்காரர் ஆன ரகசியத்தை அறிந்து வந்து விட்டீர்கள்... நான் சொன்னபடி செய்துவீட்டீர்கள். அதை நினைக்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது.
''உங்கள் நண்பரின் மனைவி பட்டுப்புடவையும், நகையும் அணிந்திருப்பதை போன்று அணிய ஆவலாக இருக்கிறது. என் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள, கட்டுச்சோற்றை கட்டி தருகிறேன்; இப்போதே அதை மண்டபத்திற்கு எடுத்து சென்று, முதியவரை சந்தித்து வாருங்கள்...” என்றாள்.
கட்டுச் சோற்றுடன் மண்டபத்திற்கு வந்ததும், களைப்பை மறந்து, முதியவரைத் தேடிப் பார்த்தான்.
முதியவர், அயர்ந்து துாங்கி கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பிய சுகுமார், “ஐயா... உங்களுக்காகத்தான் சாப்பாடு எடுத்து வந்தேன்; வயிறார சாப்பிடுங்கள்...” என்றான்.
“யாரப்பா நீ... நல்ல துாக்கத்தில் என்னை எழுப்பி விட்டாயே...” என்று ஆத்திரத்தோடு கேட்டார், முதியவர்.
“முதியவரே... என் மீது ஆத்திரப்பட வேண்டாம்; இதோ, இந்தக் கட்டுச் சோற்றை சாப்பிட்டு, உங்கள் பசியையும், களைப்பையும் போக்கி கொள்ளுங்கள்...”
“எனக்கு இப்போது பசியில்லப்பா...”
“ஐயா... நீங்கள் பசியில்லை என்று கூற கூடாது; கண்டிப்பாக, இந்த சோற்றை சாப்பிட்டுத்தான் தீர வேண்டும்...”
தர்மசங்கடமான நிலையைக் கண்டு, மனம் நொந்தார் முதியவர். வேறு வழியில்லாமல், கட்டு சோற்றை சாப்பிட்டு முடித்தார்.
“நீ யாரப்பா... எந்த நோக்கத்தோடு என்னை பார்க்க வந்தாய்...” என்று கேட்டார்.
“ஐயா... நான் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்; நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்...” என்றான் சுகுமார்.
“நானென்ன அருள்புரிவது; எல்லாமே, உன் மனைவி வாயில் தான் உள்ளது; நீ வீட்டிற்கு சென்று, இந்த தகவலை உன் மனைவியிடம் சொல்...” என்றார்.
அவரிடம் விடைபெற்று, வீட்டுக்கு வந்தான் சுகுமார். அவனைக் கண்டதும், மனைவி ஓடோடி வந்தாள்.
“முதியவரை சந்தித்தீர்களா... என்ன நடந்தது...” என்று ஆவலோடு கேட்டாள்.
“அவரை சந்தித்து கட்டுச்சோற்றை கொடுத்தேன்; சோற்றை சாப்பிட்டவர், 'எல்லாம் உன் மனைவி வாயில் தான் இருக்கிறது; வீட்டிற்கு சென்று, மனைவியை பார்' என்றார். நான் வந்து விட்டேன்...” என்றான்.
“எதற்காக அந்த முதியவர் அப்படி கூற வேண்டும்; என் வாயில், என்ன மண்ணா கொட்டி கிடக்கிறது...” என்று ஆத்திரத்தோடு கத்தினாள்.
அவள் கத்தி முடிக்கும் முன், வாயில் இருந்து, மண் கொட்டியது; வீடெல்லாம் மண் குவியலாகியது; சுகுமாரும், அவன் மனைவியும் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.
குட்டீஸ்... மற்றவர்களை பார்த்து பொறாமைப் படக்கூடாது... அது தீமையையே விளைவிக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement