Advertisement

யானையின் தும்பிக்கை வளர்ந்த கதை!

பல நுற்றாண்டுகளுக்கு முன், யானைகளுக்கு நீண்ட தும்பிக்கை கிடையாது; குட்டி தும்பிக்கை மட்டும் தான் உண்டு.
ஒருமுறை, ஆண்டு முழுவதும் மழையே இல்லாமல், குளம், குட்டைகள் வற்றி விட்டன. 'சல சல'த்து ஓடிக் கொண்டிருந்த நதிகளும் வற்றி போய், சிறிய அளவில் ஓடியது.
தண்ணீர் இன்றி தவித்த, காட்டு மிருகங்கள், தண்ணீரை தேடி, பரிதாபமாக ஓடித்திரிந்தன.
வெகு நாட்கள், வெகு துாரம் தண்ணீருக்காக அலைந்த, ஒரு சமத்து குட்டி யானை, காட்டை அடுத்து இருந்த நதியைக் கண்டுபிடித்தது. அது, மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. உடனே, ஓடிப் போய், நதியில் இறங்கி, தன் குட்டியூண்டு தும்பிக்கையால், தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்தது.
அந்த நதியில், பெரிய பச்சை நிற முதலை ஒன்று வசித்து வந்தது. நதியின் அருகே, யாரையுமே அண்ட விடாது; நதி, அதன் சாம்ராஜ்ஜியமாம்; அதனால், அங்கே யாரையுமே நுழைய விடாது.
அரை துாக்கத்திலிருந்த முதலைக்கு, யாரோ தண்ணீரை உறிஞ்சும் சத்தத்தை கேட்டதும், கோபம் தாங்க முடியவில்லை.
“யார் அது... என்ன தைரியம் இருந்தால், என் அனுமதியின்றி, இந்த நதித் தண்ணீரை குடிப்பாய்...” என்று கூச்சலிட்டபடியே, ஒரே, 'ஜம்ப்' அடித்து, குட்டி யானை அருகே, 'தொப்' என்று விழுந்தது.
“ஏய் பூதமே... மரியாதையாக ஓடி விடு... உன் அண்டா வயிற்றுக்கு, இந்த நீர் எப்படி போதும்... நான், 10 எண்ணுவேன். அதற்குள் இடத்தை காலி செய்யா விட்டால், உனக்கு அதோ கதிதான்...” என்று கூச்சல் இட்டது.
'இந்த அநாகரிக முதலையுடன், சச்சரவு செய்ய வேண்டாம்; இது நன்றாக துாங்கும் போது வந்து, வயிறு முட்ட தண்ணீரை குடித்துக் கொள்ளலாம்' என்று தீர்மானித்து, இடத்தை காலி செய்தது குட்டி யானை.
மகிழ்ச்சி தாங்க முடியவில்லை முதலைக்கு.
'அட... இந்த பூதப்பயலை என்னமாய் அடக்கி விட்டேன்' என்று பெருமையில், 'கெக்கக்கே' என்று சிரித்தது.
'நீ நினைப்பதை போல், நான் ஒன்றும் அத்தனை பயந்தாங்குளி இல்லை. நீ, நன்றாக குறட்டை விட்டு துாங்கும் போது, மறுபடியும் வந்து, அப்படியே இந்த நதி நீர் அனைத்தையும், உறிஞ்சி குடிக்கா விட்டால், என் பெயரை மாற்றி கொள்வேன்' என்று மெதுவாக சபதமிட்டு விட்டு, சற்று மறைவான இடத்தில் போய், அமர்ந்தது, குட்டி யானை.
இந்த ரகளையை மிகவும் ரசித்து, பார்த்து கொண்டிருந்தது, பச்சை நிற தவளை குட்டி ஒன்று. முதலை நகர துவங்கியதும், 'டக்'கென்று ஒரு, 'ஜம்ப்' அடித்து, 'ஜம்' என முதலையின் முதுகில் ஏறி, உட்கார்ந்தது.
“பைசா செலவில்லாமல் எனக்கு சவாரி...” என்று, உற்சாகமாக கத்தியது தவளை.
இந்த உருப்படாத பயலுக்கு, 'பிரீ ரைட்' கொடுப்பதில், முதலைக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை.
'இவனைத் தொலைத்து விட்டுத்தான் மறு வேலை' என்று, மனதில் திட்டி, இந்த அயோக்கியனை, ஆற்றுக்குள் வீழ்த்தி மூழ்கடித்து விட எண்ணி, முதுகை இப்படியும், அப்படியும் மிக வேகமாக ஆட்டியது.
முதலையின், முதுகை மிக இறுக்கமாக கட்டி சிரித்தது, தவளை.
“உனக்கு சிரிப்பு ஒரு கேடா... உன்னை, இந்த ஆற்றில் மூழ்கடித்து, சாகடிக்காவிடில், என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்.”
'அட... அட... என்ன வஞ்சனையான பேச்சு; என்ன நீ மூழ்கடித்து விடுவாயோ... அதையும் தான் பார்த்து விடலாமே' என நினைத்து, 'கெக்கெக்கே' என, அட்டகாசமாக சிரித்தது தவளைக்குட்டி.
அன்று மதியம் இளவெயிலாக இருந்தது. பக்கத்திலிருந்த பாறையில், படுத்து நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தது முதலை.
'அட, முதலை அண்ணன் மட்டும் இத்தனை சொகுசாக துாங்கினா எப்படி... எனக்கு மட்டும் இந்த சொகுசு துக்கம் வேணாமா...' என சொல்லியபடியே, 'டமால்' என்று ஒரு ஜம்ப் அடித்து, முதலை முதுகில் உட்கார்ந்தது தவளை.
“எந்த மடையன் என் துக்கத்தை கலைத்தது,” என்று கத்தியபடி கண்விழித்த முதலை, தவளையை கொன்று விடும் எண்ணத்துடன் மிக வேகமாக நீரில் குதித்தது.
ஆயினும் தவளைக்குட்டிப் பாப்பா, “அண்ணே! பீ கேர் புல்... உன்னோட பெரிய கண்ணாலே அங்கே பார்!” என்று துாண்டி விட, தன் குட்டை மூக்கால் ஆற்றுநீரை உறிஞ்சி கொண்டிருந்தது அந்த யானை.
முதலை அண்ணனின் கோபத்திற்கு கேட்கவா வேண்டும்.
“மானங்கெட்ட பூதமே! உனக்கு அழகு தான் இல்லை என்றால், மான ரோஷம் கூடவா இல்லை. உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று கத்தி, அப்படியே தண்ணீருக்கு அடியில் ஊர்ந்து போய், நீரை உறிஞ்சி கொண்டிருந்த சின்ன தும்பிக்கையை, கவ்வி பிடித்து இழுத்தது.
“ஏய்! என்னை விட்டு விடு... சத்தியமாக இனி இந்த ஆற்றங்கரை பக்கம் வரவே மாட்டேன்,” என்று கெஞ்சியது குட்டி யானை.
ஜெயித்துவிட்ட மகிழ்ச்சியில் முதலை, தன் வாயில், கவ்விய சின்ன தும்பிக்கையை இழுத்து கொண்டே தண்ணீரில் அங்கேயும், இங்கேயும் ஓடியாட, சின்ன மூக்கு நீண்டு கொண்டே போயிற்று.
“டேய்! கரும் பூதமே... இனி இங்கு வரமாட்டேன் என்று சத்தியம் செய்...” என்று அதட்டியது.
சட்டென்று பிடியிலிருந்து விடுபட்ட யானை, தன் முழு பலத்தையும் பிரயோகித்து, முதலையை, காலால் எட்டி உதைத்தது.
“ஐய்யோ!” என்று கதறியபடியே வெகு துாரத்தில் போய் விழுந்தது முதலை. உடனே, யானைக்குட்டி நீண்டு விட்ட தும்பிக்கையால், ஆற்று நீரை முற்றிலுமாக உறிஞ்ச, வெறும் சேறும், சகதியும் மிஞ்சியது.
'அட, இந்தப் பயலை இப்படியே விட்டு விட்டால் எப்படி... சரியான பாடம் கற்பிக்க வேண்டாமா' என்று கருவிக்கொண்டே, அந்த சகதியையும், சேற்றையும் நன்றாக இழுத்து உறிஞ்சி, முதலை மேல் விசிறி அடித்து, தன் காலால், குட்டியானை சகதியில் தள்ளி விட்டு புறப்பட்டது.
அன்றிலிருந்து தான், முதலைகள் தங்களின் அழகிய பச்சை வண்ணத்தை இழந்து, மண் கலராக மாறிவிட்டன. அதனுடன் சேர்ந்து கும்மாளமடித்த, குட்டித் தவளை பயலுக்கும் அதே கதிதான்.
அழகிய பச்சை நிறத்தை இழந்த அந்த குட்டி தவளையை, பார்த்து உலகமே சிரித்தது.
இப்படித்தான் யானை மூக்கு நீண்டு தும்பிக்கையாக மாறியதோ...

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement