Advertisement

அவன்பெயர் அனிருத்! (5)

இதுவரை: சுனாமியில் தொலைந்து போன அனிருத்தை தேடி அலைந்தனர் பெற்றோர்.
இனி -

அதிகாலையில், ஜோதிலட்சுமிக்கு ஒரு கனவு பூத்தது.
கனவில் அனிருத் வந்தான். அவன் முகத்திலும், உடலிலும் நீல நிறம் பூசியிருந்தது; கண்களில் இமை இல்லை; கழுத்தின் இரு பக்கங்களிலும், மீன் போன்ற செவுள்கள் இருந்தன. அவை, நீரில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசிக்க உதவும். ஆடை அணியாமல், பிறந்த நாள் உடையில் இருந்தான் அனிருத். ஒரு டால்பின் மீது அமர்ந்து வந்தான்; டால்பினை சுற்றி, பெரிய கடல் ஆமைகளும், கடல் கன்னிகளும் நீந்தினர்.
கடலுக்குள் நின்றிருந்த ஜோதிலட்சுமியை நோக்கி வந்தான், அனிருத்.
'என்னம்மா... என்னை தேடுறீங்களா...'
'ஆமன்டா... கண்ணா... நீ இல்லாம, என்னால ஒரு நொடிப் பொழுது கூட வாழ முடியாது; என் கூட வந்திரு...'
'இல்லம்மா... நான் கடலுக்குள்ளேயே இருந்துக்கிறேன்; இங்கே வாழ்றது எனக்கு ரொம்ப சவுகரியமாக இருக்கு; என்னை தேடுறதுக்கு பதிலா, ஊர் போய் சேருங்க...'
ஜோதிலட்சுமி கூப்பிட கூப்பிட டால்பின் மீது அமர்ந்து, ஆழ் கடலில் தாவி மறைந்தான், அனிருத்.
கனவின் இழை அறுந்தது.
எழுந்தமர்ந்தாள் ஜோதிலட்சுமி; பக்கத்தில் படுத்து துாங்கும் கணவனை வெறித்தாள்.
இந்த கனவு, எனக்கு எந்த உண்மையை உணர்த்துகிறது... அனிருத், கடலில் மூழ்கி இறந்து போனான் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உயிருடன் இருக்கிறான் என அர்த்தம் கொள்வதா...
கணவனை எழுப்பி, கனவை விவரித்தாள்.
'என்ன தோணுது உங்களுக்கு...'
'கண்டது வெறும் கனவு தானே... அதில் போய் என்ன அர்த்தம் தேடுவது... எனக்கென்னமோ அனிருத் உயிருடன் இருக்க, ஐம்பது சதவீதம் தான் வாய்ப்பிருப்பதாக தோணுது. டி.என்.ஏ., ரிப்போர்ட் அவன் மரணத்தை உறுதிபடுத்தினால், உடலை வாங்கியபடி சென்னை புறப்பட வேண்டியது தான்...'
'நீங்களே இப்படி அவ நம்பிக்கையாய் பேசினால் எப்படி... நம்பிக்கை தான் வாழ்க்கையின் அடி உரம்...' கண் கலங்கினாள், ஜோதி.
'யோசிக்க யோசிக்க மண்டை மூளை கொதிக்குது; ஒரு கணம் அவன் கட்டாயம் உயிரோடு இருப்பான்னு மனம் நம்புது; இன்னொரு கணம் அவன் இறந்திட்டான், அவனை தேடுவது வீண்... என்று மனசு இடித்துரைக்குது' என்று கலங்கினார் ஈஸ்வர்.
கைபேசி சிணுங்கியது; எடுத்து காதில் இணைத்தார் ஈஸ்வர்; எதிர்முனையில் அலுவலக நண்பன்.
'காணாம போன மகனை, இன்னும் தேடிக்கிட்டு இருக்கியா ஈஸ்வர்...'
'ஆமாம்...'
'விடுப்பு கடிதம் கொடுக்காமல், முன் அனுமதியும் பெறாமல், தொடர்ந்து நீ பணிக்கு வராமலிருப்பது, அலுவலக விதிகளின் படி குற்றம் இல்லையா...'
'குற்றம் தான்...'
'இன்னும், மூன்று நாட்களுக்குள் நீ பணியில் வந்து சேரவேண்டுமென்று, கல்லுாரி நிர்வாகம், கால அவகாசம் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து, விடுப்பில் இருக்க வேண்டுமென்றால், மருத்துவ சான்றிதழுடன் கூடிய, மருத்துவ விடுப்பு கடிதத்தை கூரியரில் அனுப்பு...'
'சரி...'
'மகனை தேடும் முயற்சியில், ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா ஈஸ்வர்...'
'இருக்கிறது...' பொய் கூறினார்.
'நீயும், உன் மனைவியும், மகனை தேடுறேன்... தேடுறேன்னு சொல்லி, உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்காதீங்க; உங்க மகன் கிடைக்க, நானும், என் குடும்பதாரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்...'
'நன்றி நண்பா...'
'ஓ.கே., போனை வைக்கிறேன்...' எதிர்முனை மரித்தது.
காவல்நிலையம் -
காவல்துறை ஆய்வாளர் அன்றைய பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்; ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும் பிரவேசித்தனர்.
'வணக்கம் சார்...'
'வணக்கம்... வணக்கம்... உட்காருங்க...'
'டி.என்.ஏ., டெஸ்ட் ரிப்போர்ட் வந்திருச்சா சார்...'
முகுந்தனின் முகத்தில், சிந்தனை ரேகைகள் படர்ந்தன.
'வந்திருச்சு...' அசுவாரசியமாய் பதில் வந்தது.
'என்ன சொல்லுது ரிசல்ட்...'
'உங்க தொந்திரவு எனக்கு தொடர்ந்து இருக்கணும்ன்னு விதி போல; அந்த பிரேதம் உங்களின் மகன் அல்லன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...'
சூரியனித்தாள், ஜோதிலட்சுமி.
'ஏற்கனவே நான்தான் சொன்னேன்ல... என் மகன் அனிருத் உயிரோடு தான் இருக்கிறான்; வெகு சீக்கிரம், அவன் எங்களிடம் திரும்பி வருவான்...'
முகுந்தன் எரிச்சலை வெளிக்காட்டாமல், அடக்கிக் கொண்டார்.
'அனிருத் பத்தி வேற எதாவது தகவல்கள் கிடைச்சதா இன்ஸ்பெக்டர்...'
'கிடைச்சிருந்தா... நானே சொல்லிருப்பேனே சார்... எனக்கென்னமோ, நீங்க ரெண்டு பேரும் தங்கியிருந்து, வீண் அலைச்சல் படுறது உசிதமா இல்லை...'
'நீங்களே இப்படி சொன்னா எப்படி...'
'நீங்களும், மன உளைச்சலுக்கு உள்ளாகி, பிறரையும் மன உளைச்சலுக்குள்ளாக்குகிறீங்க; நீங்க மட்டும் பாதிக்கப்படவில்லை; உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தையை தொலைத்து, தவிக்கும் உங்க மனைவியின் ஒரு வார்த்தை வெல்லுது; ஒரு வார்த்தை கொல்லுது...'
'நாங்க, உங்க மனசை புண்படுத்தினோமா...'
'கலெக்டரிலிருந்து, எஸ்.பி., வரை சுற்றுச்சூழல் அமைச்சரிலிருந்து, என்.ஜி.ஓ.,க்கள் வரை, யாரை நீங்க புண்படுத்தாம விட்டீங்க... சமயத்ல, உங்க மனைவி பேசுற வார்த்தைகள்ல அமிலம் கொப்பளிக்குது. உங்க ரெண்டு பேரையும் பாத்தாலே, மனசு பதட்டமாகுது. உங்களுக்கு என்ன பதிலை சொல்றதுன்னு மனசு பரிதவிக்குது. காணாமல் போனது ஒரு பொருளா இருந்தா, இன்னொரு பொருளை கொடுத்து சமாதானப்படுத்திரலாம்; காணாமப் போனது ஒரு மனித உயிர்; அதற்கு இன்னொரு மனித உயிர் ஈடாகுமா...'
'சாரி... சாரி...'
'உங்களைப் போலவே, ஒரு குழந்தையை சுனாமியில் தொலைத்த தாய், நேற்று மாலை கலெக்டரிடம் முறையிட்டாள். ஒரு குழந்தை போதும் என, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டாளாம் அந்த தாய். மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்து, புதிதாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக கூறினாள். கலெக்டரும் அப்பெண்மணிக்கு மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்ய, சுகாதாரத்துறைக்கு ஆணை பிறப்பித்தார். அதே யோசனைதான் உங்களுக்கும். இன்னும், உங்களுக்கு வயசும், வாலிபமும் அப்படியே இருக்கு; புதிதாய் ஒரு குழந்தையை நீங்கள் ஏன் பெற்றுக்கொள்ள கூடாது...'
'இனி, ஆயிரம் குழந்தைகள் பெற்றாலும், அது அனிருத்துக்கு ஈடாகாது; எங்களுக்கு பொருத்தமற்ற யோசனைகளை கூறாதீங்க இன்ஸ்பெக்டர்...'
'நாங்கள் கிளம்புகிறோம் சார்...'
இருவரும் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினர்.
எந்த கடற்கரையில் அனிருத்தை தொலைத்தனரோ, அதே கடற்கரைக்கு நடந்தனர்; சுனாமி அன்று, நடந்ததை இன்றும் நடித்து பார்த்தனர்.
நண்டுகளை துரத்தி அனிருத் ஓடுவது போல, ஜோதிலட்சுமி ஓடி பார்த்தாள்; சுனாமி வந்ததும், சிறுவன் எந்த திசையில் ஓடி தப்பிப்பான் என, யூகம் செய்தாள்.
மிகப்பெரிய மேட்டுப்பகுதி தென்பட்டது.
அதன்மேல் ஓடிப்போய் நின்றாள், ஜோதிலட்சுமி.
அங்கிருந்து, எப்பக்கம் ஓடியிருப்பான் அல்லது அங்கிருந்து யாராவது துாக்கி சென்றிருப்பரா... பல கேள்விகள் மனதிற்குள் ஓடின.
கணவன் ஈஸ்வரின் கைபேசி அழைத்தது.
எடுத்து காதில் வைத்தார்.
'ஹலோ...'
'ஹலோ... அனிருத்தோட அப்பாவா பேசுறது...'
ஆனந்தமாய் அதிர்ந்தனர்.
'ஆமா... யாரு பேசுறது...'
'நாங்க, நாகபட்டினவாசிகள் தான்; உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி...'
'சொல்லுங்க... சொல்லுங்க...'
'நீங்க, பல நாளா வலை வீசி தேடிக்கிட்டு இருக்கற, உங்க மகன் அனிருத் இப்ப, எங்க கஸ்டடில பத்திரமா இருக்கான்...'
'கடவுளே... நீங்க சொல்றது உண்மையா...'
'உண்மை உண்மை அக்மார்க் உண்மை; உங்க பையன் வேணும்னா, நீங்க கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டி வரும்...'
'எவ்வளவு...'
'ஒரு லட்சம் ரூபாய் எங்களுக்கு தேவை; தொகையை ரொம்ப கம்மியாத்தான் சொல்றம்; நீங்க பணம் கொடுத்து, பையனை கூட்டிட்டு போறது போலீசுக்கு தெரியக் கூடாது...'
'சரி... பணத்தை தயார் செய்றோம்; எங்க பையன, போன்ல ஒரு வார்த்தை பேசச் சொல்லுங்க...'
எதிர்முனை யோசித்து, கைபேசியை யாரிடமோ கொடுத்தது; ஒரு பிஞ்சுக்குரல், 'அம்மா... அப்பா... நல்லாருக்கீங்களா... சீக்கிரம் வந்து, என்னை கூட்டிட்டு போங்க...' கொஞ்சியது.
அனிருத்தின் குரல் தானா அது...
மழலைக்குரல்தான் பேசியது; ஆள்மாறாட்டம் இருக்க வாய்ப்பில்லை.
'பணத்தோடு எங்க வரணும், எப்ப வரணும்...'
'ஆறுமுகசாமி கோவிலுக்கு மாலை, 6:00 மணிக்கு வந்திருங்க...'
'சரி... அப்படியே செய்றோம்...'
விஷயத்தை, பரம ரகசியமாக வையுங்கள்; மகன் கைக்கு கிடைத்தவுடன் ஊருக்கே வெளிச்சம் போட்டு கூவுங்க...'
'நன்றி...' எதிர்முனை மரித்தது.
ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும் தரையில் கால்கள் படாமல் காற்றில் மிதந்தனர்.
'கடவுளே... எங்க வேண்டுதலுக்கு செவி சாய்த்ததற்கு நன்றி...'
'ஏங்க... திடீர்ன்னு ஒரு லட்ச ரூபாய்க்கு என்ன செய்றது...'
'அதுதான்... நானும் யோசிக்கிட்டு இருக்கேன்...'
கழுத்திலிருந்த செயினை கழற்றினாள், ஜோதிலட்சுமி.
'இதை விற்போம்... போதிய பணம் கிடைக்கலேன்னா, கை வளையல்களையும் சேத்து விப்போம்...'
அடுத்த ஒரு மணி நேரத்தில் நகைகளை விற்று, ஒரு லட்ச ரூபாய் திரட்டினர்.
பத்து நாள் துக்கம் இன்றோடு முடிவுக்கு வரப்போகிறது. அனிருத், அவர்கள் கைக்கு எப்படி கிடைத்தான்... அதுவா முக்கியம்... யாருமே அனிருத் உயிரோடு கிடைக்க மாட்டான் என, அவ நம்பிக்கை தெரிவித்தனர்; அத்தனை ஹேஷ்யங்களையும் தாண்டி, உயிர்த்து வந்து விட்டான்.
அழுகை, அலைச்சல், துாக்கமின்மை, பண இழப்பு போன்றவற்றை, நஷ்டக்கணக்கில் வைத்தாலும், அனிருத் கிடைத்ததை லாப கணக்கில் வைப்போம்; எல்லா நஷ்டங்களையும் இட்டு நிரப்பும் லாபம்.
ஜோதிலட்சுமியின் உள்ளம் கூத்தாடியது; ஆனந்தத்தால் பொங்கி வழிந்தது; இருவரும் குளித்து, புத்தாடைக்கு மாறினர். பத்து நாளைக்கு பின், 'பளிச்' சென்று தலைவாரினாள்; முகத்தில் பவுடர் அடித்தாள். ஆறுமுகசாமி கோவிலுக்கு புறப்பட்டனர்; கோவில் வாசலில், இரு வாலிபர்கள் நின்றிருந்தனர்.
கணவன், மனைவியை பார்த்து, 'பணம் எடுத்து வந்திருக்கீங்களா...'
'ஆமா... இந்தாங்க பணம்... எங்க மகன் எங்க...'
'கோவிலுக்குள் நிற்கிறான்; கூட்டிச் செல்லுங்க...'
பணக்கட்டை பிரித்து பார்த்து இருவரும் ஒரு பைக்கில் ஏறி மறைந்தனர்; 'தட தடக்கும்' இதயத்துடன், ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும் கோவிலுக்குள் நடந்தனர்.
உள்ளே...
முதுகைக்காட்டியபடி, நான்கு வயது சிறுவன் நின்றிருந்தான்!
- தொடரும்...

- ஆர்னிகா நாசர்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement