Advertisement

கணக்கு பாடம் தந்த கூலி!

அரசு கல்லுாரியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்; என் வயது, 58. நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியில், படித்துக் கொண்டிருந்த போது, சுவையான சம்பவம் நடந்தது!
கணிதத்தில், அதிக ஆர்வம் உள்ள நான், ஆசிரியர் தரும் பயிற்சி கணக்குகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். அவர், என்னை தட்டி கொடுத்து, புகழ்ந்து பேசுவார். அது, ஊக்கத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளித்தது.
கணிதம் புரியாத மாணவர்களில் சிலர், என்னிடம் சந்தேகம் தீர்ப்பதற்காக, தின்பண்டங்களை வாங்கித் தருவர்.
ஒரு நாள், சக மாணவர், காகிதத்தில் மடித்த பொட்டலம் ஒன்றை கொடுத்து, 'இதில், சுவையான எண்ணெய் பலகாரங்கள் உள்ளன; வீட்டில் போய் சாப்பிடு...' என்றான். பொட்டலத்தை வாங்கி, என், பைக்குள் வைத்துக் கொண்டேன்.
வகுப்புகள் முடிந்ததும், வீட்டுக்குச் சென்று, பொட்டலம் கொடுத்த மாணவனை பற்றி, பெற்றோரிடம் பெருமையாக சென்னேன். பின், பொட்டலத்தை எடுப்பதற்காக, புத்தக பையை திறந்த போது அதிர்ந்தேன்.
என் பையிலிருந்த புத்தகங்கள், எண்ணெயில் ஊறி நாசமாயிருந்தன. என் பெற்றோர், கடுமையாக திட்டினர். விஷயத்தை, ஆசிரியரிடமும், வகுப்பு மாணவர்களிடமும் கூறினேன். அனைவரும், விழுந்து விழுந்து சிரித்தனர்.
'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது போல, படிப்பில் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும், சில விஷயங்களில் ஏமாறுவதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த நிகழ்வை மறக்க இயலவில்லை.
- எல்.மூர்த்தி, கோவை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement