Advertisement

பேரன்ட்ஸ் வழிகாட்டலாம்; வற்புறுத்தக்கூடாது!

'பொறியியல் எடு', 'மருத்துவம் படி', 'சி.ஏ. எழுதேன்', 'லா தான் சூப்பர்' என்று உங்கள் பெற்றோரும் பெரியவர்களும் ஆலோசனை மழை பொழிகிறார்களா? இதில் உங்களுக்கு எதில் விருப்பம் என்பதைவிட, வருங்காலத்தில் எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற கணிப்பை ஒட்டியே அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இது சரியா? மாணவர்களையே கேட்டோம்:
சென்னை, அத்திப்பட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்:

கோ.விக்னேஷ் சுந்தர், 9ம் வகுப்பு
பேரன்ட்ஸ்தான் பிள்ளைகள் மேல அதிக அக்கறை இருக்கறவங்க. நமக்குப் பிடிச்ச பாடப்பிரிவு இருக்கலாம். ஆனா, எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தா எதிர்காலம் சிறப்பா இருக்கும்னு அவங்களோட அனுபவ அறிவுதான் நமக்கு வழிகாட்டும். அதனால உயர்கல்வியைப் பத்தி பேரன்ட்ஸ் முடிவெடுக்கறதுதான் சரி.


சீ.தீபக், 10ம் வகுப்பு
உயர்கல்வியில எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தா, நல்லா படிக்க முடியும்னு மாணவர்களுக்குத்தான் தெரியும். பேரன்ட்ஸ் வழிகாட்டலாமே தவிர வற்புறுத்தக்கூடாது. நிறையப் பேர் அப்பா, அம்மா சொல்றாங்கன்னு தங்களுக்குப் பிடிக்காத துறையத் தேர்ந்தெடுத்து படிக்க முடியாமலும், அதிக மதிப்பெண் எடுக்க முடியாமலும் தவிக்கறாங்க. இதனால எதிர்காலம் பாதிக்குது. உயர்கல்வியை மாணவர்களே தேர்ந்தெடுக்கற சுதந்திரம் வேணும்.

அ.ஸ்ரீநிதி, 10ம் வகுப்பு
பட்டம் வானத்துல உயரே பறக்கணும்னா அதுக்கு உதவறது நூலும் காத்தும்தான். அதுபோல மாணவர்களாகிய நாங்க படிச்சு சிறப்பா உயரணும்னா பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதல் அவசியம். அவங்களோட அனுபவ அறிவுதான் உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கறதுல சிறப்பான வழிகாட்டியா இருக்கும். நமக்குப் பிடிச்ச பாடத்தைப் படிச்சு தெரிஞ்சுக்கலாம். தப்பில்ல… ஆனா, எந்தத் துறையை தேர்ந்தெடுத்தா எதிர்காலம் சிறப்பா இருக்கும்னு பெற்றோருக்குத்தான் தெரியும். உயர்கல்வியைப் பத்தி அவங்க முடிவெடுக்கறதுதான் சரி.

மு.ரிஸ்வானா பேகம், 9ம் வகுப்பு
நிறைய பேரன்ட்ஸ் இந்தப் பாடப்பிரிவைத்தான் எடுக்கணும்னு கட்டாயப்படுத்தறாங்க. அவங்க கவலை நியாயமானதுதான். எதிர்காலத்துல பிள்ளைகள் நல்லா இருக்கணுமேன்னு நினைக்கறாங்க. ஆனால், மன நிம்மதியோடு, மகிழ்ச்சியோட இருக்க முடியுமா? பிடிக்காத பாடத்தைப் படிச்சு, என்ன பெரிய முன்னேற்றத்தை அடைஞ்சாலும் அது நிறைவு தராது. அதனால, மாணவர்கள் மனசைச் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த பாடத்தைத் தேர்ந்தெடுக்க பேரன்ட்ஸ் ஒத்துழைக்கணும். அப்பதான் மாணவர்கள் நல்லாப் படிக்க முடியும்.

த.நந்தினி, 11ம் வகுப்பு
அடிப்படையில சின்னவயசுலேருந்தே ஒரு லட்சியத்தை மாணவர்களுக்குப் போதிக்கணும். பெரியவனானவுடனே, மக்களுக்குச் சேவை செய்யணும், அல்லது ஒருசில குறிப்பிட்ட துறையியில மேம்பாடு அடையணும்னு சொல்லிக் கொடுக்கணும். அப்போ, வளர்ந்து வரும் மாணவர்களுக்கு மேற்படிப்பு பத்தி எந்தவிதமான குழப்பமும் இருக்காது. பெற்றோரும் பிள்ளைகளும் ஒரே நோக்கத்தோடு, சிறந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவிகரமாக இருக்கும்.

பெ.தேன்மொழி, 11ம் வகுப்பு
படிக்கறப்ப நமக்கு அவ்வளவு மனமுதிர்ச்சி வந்துடறதில்ல. போன வருஷம் ஒரு பாடம் பிடிச்சிருக்கும். இந்த வருஷம் வேற பாடம் பிடிக்கும். அதனால பிடிச்ச பாடத்தை உயர்கல்வியா தேர்ந்தெடுக்கறதுல மாணவர்களுக்குப் போதிய அனுபவ அறிவு இருக்காது. பெற்றோர் உயர்கல்வியைப் பத்தி முடிவெடுக்கறதுல எந்தத் தவறும் இல்லை. எந்தப் பாடப்பிரிவை எடுத்தாலும் படிக்கணும்னு நினைச்சா நல்லா படிக்கலாம். அதனால பெற்றோர் உயர்கல்வியைப் பத்தி முடிவெடுக்கலாம்.

த.மணிகலா, 11ம் வகுப்பு
நான் இன்ஜீனியரிங் படிக்கணும்னு நினைக்கறேன். ஆனா நீ மருத்துவம்தான் படிக்கணும்னு பேரன்ட்ஸ் சொல்றாங்க. இதுல என்ன சிக்கல்னா இன்ஜீனியரிங்ல எனக்கு நிறைய ஆர்வம் இருக்கு அப்படின்னு பேரன்ட்ஸ் புரிஞ்சுக்கறதில்ல. 'நான் மருத்துவம் படிக்க நினைச்சேன், படிக்க முடியல. நீயாவது படி'ன்னு அவங்க விருப்பத்தை நம்ம மேல திணிக்கறாங்க. இன்னொண்ணு, எந்தப் படிப்பைப் படிச்சாலும் அதுல முழு முயற்சியோடு படிச்சு, அதிகபட்ச உயரத்தைத் தொட்டுட்டா, நிச்சயம் வேலை கிடைக்கும், வாழ்க்கையும் இனிக்கும். இந்த உலகத்துல பொறந்த அத்தனை பேருக்கும் சாமி சாப்பாடு வெச்சுருக்காரு. அது எங்க இருக்குன்னு பெற்றோருக்கு மட்டும் தெரியுமா என்ன? அதனால், மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க அனுமதிச்சா, குறைந்தபட்ச நிம்மதியாவது கிடைக்குமே!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement