Advertisement

கதை சொல்லும் கோமாளி

குழந்தைகளின் உலகம் தனித்துவமானது. அந்த உலகில் கற்பனைகளும் அற்புதங்களும் கேள்விகளும் நிறைந்திருக்கும். குழந்தைகள் கதை கேட்கத் தயாராகவே இருக்கின்றனர். சொல்லத்தான் ஆட்கள் குறைவு. கூட்டுக்குடும்பங்கள் அருகியதன் முக்கிய விளைவுகளில் இதுவும் ஒன்று.
திருப்பூரைச் சேர்ந்த கதைசொல்லி சதீஷுக்கு குழந்தைகளின் உலகத்துக்குள் புகுவது நன்றாகவே கைகூடியிருக்கிறது. அவர் இருக்கும் இடத்தில் குழந்தைகளின் உற்சாகக் கூக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளுக்குக் கதை சொல்வதையே தன் முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறார் சதீஷ். வாய்மொழி, உடல்மொழி, மெளன மொழி, பொம்மை வழி, நிழல்கூத்து என சாத்தியப்பட்ட அத்தனை வகைகளிலும், குழந்தைகளுக்குக் கதை நிகழ்த்துகிறார் சதீஷ்.
கதைசொல்லியாக இருப்பது எப்படி இருக்கிறது? சதீஷிடம் பேசினோம்...
“திருப்பூர்தான் சொந்த ஊர். நான் சின்னவயசுல அக்கம்பக்கம் பாட்டிகள்கிட்ட கதைகேட்டுத்தான் வளர்ந்தேன். டிப்ளமோ முடிச்சுட்டு, டிசைனிங் ஒர்க் பண்ணிக் கொடுத்துட்டு இருந்தேன். நாம கதை கேட்ட அளவுக்கு, அடுத்த தலைமுறைக்கு கதை சொல்ல யாருமில்லையேன்னு தோணுச்சு.
வேலை செஞ்சுகிட்டே, பக்கத்துல இருக்கற பள்ளிகளுக்குப் போய் அவங்களுக்குக் கதை சொன்னேன். திருப்பூர் முழுக்க பொருளாதாரம் சார்ந்து இயங்கற ஊர். எனக்கு இந்தச் சூழல் பிடிக்கல. குழந்தைகளுக்கான முழுநேர கதை சொல்லியா மாற முடிவெடுத்தேன். 2010இல் அப்படி ஒரு கதை சொல்லும் நிகழ்ச்சியில, 'களிமண் விரல்கள்' அமைப்போட சந்திப்பு ஏற்பட்டுச்சு. அதில இருந்து அவங்ககூட சேர்ந்து இயங்கிட்டு இருக்கேன்.
வாய்மொழிக் கதை சொல்லலின் அடுத்த கட்ட நகர்வு, நாடகம்தான். அதைக் கத்துக்கறதுக்காக 2014- - 16 காலகட்டத்துல, புதுச்சேரில இருக்கற பிரெஞ்சு நாடக அகாடமியில இணைஞ்சு நிகழ்த்துக் கலைகளைக் கத்துக்கிட்டேன். வெளிநாட்டு நாடகக் கலைஞர்கள், நாடக முறைகளின் அனுபவம் கிடைச்சுது. அந்த மூன்றாண்டு அனுபவத்த வச்சு, இப்ப முழுக்கமுழுக்க குழந்தைகளுக்கான கதை சொல்லியா செயற்பட்டுட்டு வர்றேன்.
கடந்த 8 ஆண்டுகளா வேற எந்தத் தொழிலும் செய்யறதில்ல. தமிழகம், ஆந்திரம் உட்பட வெவ்வேறு பகுதிகளில் விரும்பி அழைக்கும் பள்ளிகள், அமைப்புகளுக்குப் போய், கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தறேன்.
நான் 'மித்ரா தியேட்டர்'னு அமைப்பு ஒண்ணு வச்சுருக்கேன். தனியாவும், 'களிமண் விரல்கள்' அமைப்போட இணைந்தும் நிகழ்ச்சிகள் பண்றேன்.
குழந்தைகளின் உலகத்துக்குள்ள போகணும்னா, நீங்க யாரா இருந்தாலும் உங்க கிரீடத்தை இறக்கி வச்சுட்டு, ஒரு கோமாளியா போகணும். அப்பதான் அவங்களுக்கு உங்களப் பிடிக்கும். உங்கள, தங்களோட வயசுக் குழந்தைகளா நினைச்சு பழகுவாங்க.
எந்தக் குழந்தையும் என்னை 'சார்'னு கூப்பிடாது. 'அண்ணா, மாமா, சித்தப்பா'ன்னு உறவுமுறையோடதான் அழைக்கும். ஏன் பேர் சொல்லிக்கூட கூப்பிடும்.
குழந்தைகளோட உறவு இருவழிப் பாதையில அமையணும். அவங்களையும் கதை சொல்ல ஊக்குவிக்கறேன்.
ஒருமுறை, பொள்ளாச்சியில நடந்த நிகழ்ச்சியில ஒரு குழந்தை கதை சொல்லுச்சு. “ஒரு ஊர்ல ஒரு எலி இருந்துச்சாம். அதுக்கு அப்பா, அம்மா இல்லையாம். ஒருநாள் பாட்டி வீட்ல சாப்பிடுமாம். ஒரு நாள் தாத்தா வீட்ல சாப்பிடுமாம். ஒருநாள் மாமா வீட்ல சாப்பிடுமாம். அப்புறம் தூங்கிடுமாம்” அப்டின்னு கதை சொல்லுச்சு. காரணம் அந்தக் குழந்தைக்குப் பெற்றோர் இல்லை. தெரிஞ்ச சொந்தக்காரங்க வீட்லதான் மாத்தி, மாத்தி சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. தன்னோட அனுபவத்தை அப்டியே கதையா மாத்திருச்சு.
பெரும்பாலான குழந்தைகள் அப்படித்தான். தாங்கள் சந்திச்ச இயல்பான நிகழ்வுகளை சாதாரண கதைகளாகவும், நிறைவேறா ஆசைகளை ஃபேன்டஸி கதைகளாகவும் சொல்லும்.
வெறும் பாடப்புத்தகங்கள் அப்படிங்கற முறையிலிருந்து மாறணும். வெகு சில ஆசிரியர்கள்தான் மாற்றுமுறைக் கல்வியை முன்னெடுத்துருக்காங்க. மாற்றுமுறைக் கல்வி போதிய கவனம் பெறணும்ங்கறதுதான் என்னோட ஆசை.”
குழந்தைகளுக்கு, சார்ட் பேப்பரில் பொம்மைகளை வெட்டிக் கொடுத்தபடியே சொல்லிமுடித்தார் சதீஷ்.
குழந்தைகள் தங்களுக்கான உலகை தாங்களே படைத்துக் கொள்கின்றனர். அந்த உலகை மேலும் அழகாக்க உதவுவோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement