Advertisement

பரங்கிமலை டூ இமயமலை

“ஒரே அலுப்பாக இருக்கிறது.” என்றான் பாலு. “எதனால் அலுப்பு?” என்று கேட்டார் ஞாநி மாமா.
“தினமும் ஏறத்தாழ அதே மனிதர்களைத்தான் காலை முதல் இரவு வரை பார்க்கிறேன். தெருவில் இறங்கினால் அதே ஏழெட்டு தெருக்கள் வழியாகத்தான் போய் வருகிறேன். ஒரே மாதிரி கட்டடங்கள். நெரிசலாக கார்கள், பஸ்கள். வீட்டுக்கு வந்து 'டிவி'யை திருகினால், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். எல்லாம் அலுப்பாக இருக்கிறது.” என்றான் பாலு.
“உண்மைதான். இந்த மாதிரி அலுப்பு உனக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே வருவதுதான். இதை முறியடிக்கத்தான் மனிதன் காலங்காலமாக பல விஷயங்களைக் கண்டுபிடித்து வருகிறான். இசை, ஓவியம், நடனம், நாடகம், விளையாட்டு எல்லாமே அலுப்பைப் போக்குவதற்கான மருந்துகள்தான். அவை எதுவுமே ஒருமுறை செய்ததுபோல இன்னொரு முறை இருக்காது. ஒவ்வொரு முறையும் ஏதாவது வித்தியாசம் காட்டும்.” என்றார் மாமா.
“இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தித்தான் நான் என் வழக்கமான அலுப்பைப் போக்கிக் கொள்கிறேன். இந்த முறை எனக்கு விஷுவல் அலுப்பு ஏற்பட்டிருக்கிறது.” என்றான் பாலு.
அதென்ன விஷுவல் அலுப்பு?
“எந்தப் பக்கம் திரும்பினாலும், பார்த்ததையே திரும்பத் திரும்பப் பார்ப்பது சோர்வாக இருக்கிறது. அதுதான் விஷுவல் அலுப்பு.” என்றான் பாலு.
“அதற்காகத்தான் நாம் நம் அறையைக்கூட அவ்வப்போது மாற்றி அமைத்துக்கொள்கிறோம். கட்டில், மேஜை, அலமாரி, சுவரில் மாட்டிய படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பது கொஞ்ச நாள் கழித்து அலுப்பாகத்தான் இருக்கும். உடனே மேஜை இருந்த இடத்தில் கட்டிலைப் போடுகிறோம். சுவரில் படங்களை மாற்றி மாட்டுகிறோம்.” என்றார் மாமா.
“அறையில் இருப்பதை மாற்றி அமைக்கலாம். தெருவை, கட்டடங்களை, போக்குவரத்தை நான் மாற்றி அமைக்க முடியாதே.” என்றான் பாலு. “நாம் பிக்னிக் போகவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். எங்காவது பசுமையான ஒரு வெளியூருக்குப் போனால் அலுப்புத் தீர்ந்துவிடும்.” என்றேன்.
“நாம் வெளியூருக்குப் போகலாம். வெளியூர்வாசிகள் எங்கே போவார்கள்?” என்றான் பாலு. “தமிழ்நாட்டில் சென்னையையும் கன்னியாகுமரியையும் விட்டால் வேறெங்கும் அழகான கடற்கரை கிடையாது. வெளியூர்வாசிகள் அதனால்தான் சென்னைக்கு வந்தால், தவறாமல் பீச்சைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.” என்றார் மாமா.
“பீச்சில்கூட ஒரே மாதிரி பஜ்ஜி, போண்டா, கிளிஞ்சல், பலூன், ஐஸ்கிரீம், ரங்கராட்டினம் கடைகள்தானே. அதுவும் அலுப்பாக இருக்கிறது.” என்றான் பாலு. “இயற்கை எப்போதும் அலுப்பை ஏற்படுத்தாது. அதே பீச்சில் நீ எல்லா கடைகளுக்கும் உன் முதுகைக் காட்டிக்கொண்டு கடலையே பார்த்துக்கொண்டு நின்று கடலை வேடிக்கை பார். அலைகளும் தொடுவானத்தில் மேகங்களும் அலுப்பையே ஏற்படுத்தாது.” என்றார் மாமா.
“எங்காவது மலைப் பிரதேசத்துக்குப் போக வேண்டும்.” என்றான் பாலு. “தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை இரண்டும்தான் மலை. மீதி எல்லாம் குன்றுகள்தான். இன்னொரு சிறந்த விஷயம் பல ஊர்கள் நடுவேயே குன்றுகள் இருப்பதுதான். சென்னையில்கூட ஊர் நடுவே குன்றுகள் இருக்கின்றன.” என்று மாமா சொன்னதும், எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. சென்னைக்குள்ளே குன்றுகளா என்றேன்.
“குரோம் பேட்டை அருகே திருநீர்மலை இருக்கிறது. பல்லாவரம் அருகே செயின்ட் தாமஸ் மெளன்ட் இருக்கிறது. பல்லாவரத்திலேயே இரு பெரிய குன்றுகள் இருந்தன. கல் எடுக்க ஒரு மலையை வெட்டியே இல்லாமல் ஆக்கிவிட்டோம்.”
மாமா தன் சொந்த ஊரான செங்கல்பட்டு நகரத்தில், இப்போதும் ஊர் நடுவே ஒரு குன்று இருப்பதாகச் சொன்னார். அதற்கு 'ரேடியோ மலை' என்று பெயராம். ஏன் அந்தப் பெயர்? அந்த மலை உச்சியில் ஒரு சின்ன பூங்கா. அதில் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி வைத்து வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவார்களாம். “இப்போதும் மலை இருக்கிறது; ஆனால் பூங்கா இல்லை. மலையை ஆக்கிரமித்து வீடுகள் வந்துவிட்டன. மலை சிதிலமடைந்து பாழாகக் கிடக்கிறது” என்ற மாமா, பல ஊர்களில் குன்றுகள் காப்பாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம், அவற்றின் உச்சியில் கோவிலோ தேவாலயமோ இருப்பதனால்தான் என்றார். பரங்கிமலை, பழநி, திருப்பரங்குன்றம், திருச்சி மலைக்கோட்டை, மருதமலை எல்லாம் அவர் சொன்ன உதாரணங்கள்.
மலைகள் நமக்கு ஏன் அவசியம் என்பதை மக்கள் உணர்ந்தால், மலைகளைக் காப்பாற்றுவார்கள் என்றது வாலு. எப்படி? மேகங்கள் உருவாவதற்கு மலைகள் தேவைப்படுகின்றன. காற்று, மலைகள் மீது வீசி மோதும்போது காற்று குளிர்கிறது. குளிர்ந்த காற்றால் அதிக நீராவியை தக்கவைத்துக்கொள்ள முடியாது. அந்த நீராவிதான் மேகமாக மாறுகிறது.
“மலை உச்சிக்குப் போகப்போக, குளிர்ச்சியாக இருக்கிறது. அது எப்படி? தரையில் இருப்பதைவிட மலை உச்சியில் நாம் சூரியனுக்கு இன்னும் நெருக்கமாகத்தானே இருக்கிறோம். அப்படியானால், அங்கே சூடு அதிகமாக வேண்டுமில்லையா?” என்று கேட்டான் பாலு.
“நாம் வெப்பத்தை உணர்வதே நம்மைச் சுற்றி இருக்கும் காற்றினால்தான். கீழே காற்று அடர்த்தியாக இருக்கிறது. மலை மேலே செல்லச்செல்ல, காற்றின் அடர்த்தி குறைந்து லேசாகிவிடுகிறது. அதனால் அது அதிக வெப்பத்தை தக்கவைக்க முடியாது. எனவே, குளிர்ச்சியாக இருக்கிறது.” என்றார் மாமா.
“உடனே எனக்கு ஏதாவது மலைக்குப் போக வேண்டும் போல் இருக்கிறது.” என்றான் பாலு. “இது டிசம்பர் மாதம். ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ போக முடியாது. கடும் குளிராக இருக்கும். உடனடியாக பக்கத்தில் இருக்கும் பரங்கிமலைக்குப் போகலாம்.” என்றார் மாமா. எல்லாரும் புறப்பட்டோம்.
மலைக்குச் சென்றதும் மாமா சொன்னார். “இந்தியா முழுவதும் நில அளவை செய்து வரைபடங்கள் உருவாக்குவதற்கான சர்வே இந்த மலையில்தான் ஆரம்பித்தது. 1802இல் வில்லியம் லாம்ப்டனும் ஜார்ஜ் எவரெஸ்டும் இங்கிருந்துதான் சர்வேயைத் தொடங்கினார்கள். அதற்குப் பெயர் கிரேட் டிரிக்னாமெட்ரிகல் சர்வே. இந்த சர்வேயில்தான் இமயமலையின் உயரம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த எவரெஸ்டின் பெயர் உயரமான சிகரத்துக்கு சூட்டப்பட்டது.” என்றார் மாமா.
பரங்கிமலைக்கும், இமயமலைக்கும் இருக்கும் இந்தத் தொடர்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. கிரேட் டிரிக்னொமெட்ரிகல் சர்வே என்றால் என்ன என்று தேடிப் படிக்கப் போகிறேன்.

வாலுபீடியா
டிசம்பர் 11:- உலக மலைகள் தினம்.
டிசம்பர் 7:- விமானப் போக்குவரத்து தினம்.
1911இல் அலகாபாத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் இருக்கும் நைனிக்கு தபால் எடுத்துச் சென்ற விமானம்தான் உலகின் முதல் சிவில் விமானப் பயணம். 1932இல் கராச்சியிலிருந்து மும்பைக்கு தபால் விமானத்தை பைலட்டாக இருந்து செலுத்தியவர்
தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா. அவருடைய விமான கம்பெனிதான், பின்னர் அரசாங்கத்தின் ஏர் இந்தியா ஆயிற்று.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement