Advertisement

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

புயல்களுக்கு எதன் அடிப்படையில் பெயர் சூட்டப்படுகிறது?
எம். ஆஷிகா, 10ஆம் வகுப்பு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் புயல்களுக்குப் பெயர் வைக்க, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, ஓமன், மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் எட்டுப் பெயர்களை பரிந்துரை செய்தன. இவற்றின் தொகுப்பாக 64 பெயர்கள் கொண்ட பட்டியல் இருக்கிறது. இந்தப் பட்டியல் அடிப்படையில் அடுத்தடுத்து வரும் புயல்களுக்குப் பெயர் வைக்கிறார்கள்.
சமீபத்தில் கன்னியாகுமரியை 'ஒக்கி' புயல் தாக்கியது. வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் கண் என்று அர்த்தம். இந்தப் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. ஒவ்வொரு புயல் உருவாகும்போதும், டில்லியில் உள்ள இந்தியத் துணைக் கண்டப் பகுதியின் வானியல் அமைப்புப் பட்டியலில் இருந்து பெயரைத் தெரிவுசெய்து சூட்டுகிறார்கள்.

ஒரே தாய் தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்களும் நோய்களும் மாறுபடுவது ஏன்?
தேவதர்ஷினி, 10ஆம் வகுப்பு, சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்களே. மனிதனுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒவ்வொரு குரோமோசோமிலும் பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உள்ளன. மரபணுக்கள் ஒவ்வொன்றிலும் குணாதிசயங்கள், திறமைகள், நோய்கள் ஏற்படும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் ரசாயனக் குறியீடுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரே தாய், தந்தை எனினும், டி.என்.ஏ.வில் ஐம்பது சதவீதம் மரபணு தாயிடமிருந்தும், ஐம்பது சதவீதம் தந்தையிடமிருந்தும் வருகிறது. தாயின் இரண்டு ஜோடி மரபணுவில் ஏதாவது ஒன்றுதான் ஒரு குழந்தைக்கு வருகிறது. தாயிடம் A1A2, B1B2, C1C2, D1D2 என்கிற நான்கு மரபணு ஜோடிகள் உள்ளன எனக்கொள்வோம். ஒரு குழந்தைக்குத் தாயிடமிருந்து A1B1C1D1 என்ற மரபணு வந்து சேர்ந்தால், இன்னொரு குழந்தைக்கு A2B2C2D2 அல்லது A1B2C1D2 அல்லது A2B2C2D2 என பல்வேறு கூட்டுகளில் அமையலாம். எனவே, தாய், தந்தையிடமிருந்து நாம் பெறும் மரபணு, தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். எனவே, ஒரே தாய் தந்தைக்குப் பிறந்திருந்தாலும், நமக்கும் நம் உடன் பிறந்தோருக்கும் பல்வேறு மாற்றங்கள் இருந்தே தீரும்.

பறவைகளின் சராசரி வயது என்ன? அவை எங்கே சென்று இறக்கின்றன? இயற்கையாக இறக்கும் பறவைகளைக் காண முடிவதில்லையே, ஏன்?
ஸ்ரீனிவாசன் கோபாலகிருஷ்ணமூர்த்தி, சென்னை.

பொதுவாக, சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகள், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஆனால், உருவில் பெரிய கொக்கு, பருந்து போன்ற பறவைகளின் ஆயுட்காலம் முப்பது ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.
பட்டினி, குளிர், வேட்டையாடப்படுதல், நோய் ஏற்படுதல் என பல்வேறு இயற்கை இடர்களால் பாதிக்கப்படும் பறவைகளின் சராசரி ஆயுட்காலம் குறைவு. நகர்ப்புறங்களிலும் உயிரியல் பூங்காக்களிலும் வளரும் பறவைகளின் ஆயுட்காலம் சற்றே நீண்டு அமையும். இயற்கையாக மடியும் பறவைகளின் உடலை வேறு விலங்குகளோ, பறவைகளோ உண்டுவிடும் என்பதால், இறந்த பறவைகளின் உடலைப் பார்க்க முடிவதில்லை. மரணம் அடையும் தருவாயில் ஒரு யானை குகையைத் தேடிச் செல்லும். அதுபோல ஒரு பறவை தன் இறுதி நாட்களை எங்கே கழிக்கிறது என்பது தெரியாதது ஆச்சரியமே!

கண்களில் ஏற்படும் குறைபாடுகளை இயற்கை முறையில் குணப்படுத்த முடியுமா?
எஸ். முகுந்தன், 9ஆம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி, சென்னை.

கண்களை கேமராவோடு ஒப்பிடலாம். ஒரு பொருளின் நிழலை கேமரா பதிந்து உருவமாகக் கொடுப்பதைப்போல கண்களும் செய்கின்றன. ஒளிக்கதிர்கள் கருவிழி மூலம் கண்ணுக்குள் சென்று கருமணியில் பட்டு வளைந்து ஒளித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாகப் பதிவாகிறது. அங்கு இருக்கும் பார்வை நரம்புகளின் உதவியால், மூளையின் பின்பகுதியை அடைந்து உருவம் நேராக்கப்படுகிறது. இதைத்தான் பார்வை என்கிறோம்.
சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) சிலருக்கும்; கிட்டப்பார்வை, மாலைக்கண் நோய் போன்ற பரம்பரை நோய்கள் சிலருக்கும்; மாறுகண் போன்ற குறைபாடுகள் சிலருக்கும் இருக்கும். இருந்தாலும், கண்களில் ஏற்படும் சில நுண்ணுயிரி கிருமி தாக்குதல் மட்டும் இயற்கையாக நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையால் குணமாகும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது பல்வேறு விதமான கண் நோய்கள், கண் குறைகள் போன்றவை இயல்பாகக் குணமடையாது. கண்ணாடி அணிதல், கண் அறுவைச் சிகிச்சை, மருந்து இடுதல் போன்றவற்றால் மட்டுமே குணப்படுத்த முடியும். அதற்கும் மேலாக நமது இரு கண்களையும் பொக்கிஷமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். ஏதாவது கோளாறு ஏற்பட்டால், சுயவைத்தியம் செய்யாமல் கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement