Advertisement

இதயத்திருடி!

படைப்பு : மெய்ப்பொய்கை
விலை : ரூ. 325
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம், சென்னை.
044 - 4200 9603

'நடத்தை கெட்டவள், நடத்தை கெட்டவன்' - இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான பொருள் என்னவோ ஒண்ணு தான். ஆனா, யதார்த்தத்துல அப்படியா இருக்கு? 'மெய்ப்பொய்கை' சிறுகதை தொகுப்புல, ஜே.பி.தாஸ் எழுதி இருக்கிற, 'விபச்சாரி' கதையில வர்ற ராதா, இப்படியொரு கேள் வியை எனக்குள்ளே எழுப்பினா. ஆனா, கேள்விக்கான பதிலை யும் அவளே கொடுத்துட்டா!
வேலை முடிந்ததும், பிரமோத், தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பினான். தன் கம்பெனி தயாரிக்கும் இயந்திரங்களுக்கு, நேர்மை பிறழ்ந்து பல இடங்களில், 'ஆர்டர்' பிடித்து விட்டான். எஞ்சியுள்ள இரவை அந்த ஊரில் குதுாகலமாகக் கொண்டாட நினைத்தான். மறுநாள், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் துணிமணி எடுக்கவும் திட்டமிட்டான். பின், ஒரு ரகசிய எண்ணுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். மறுமுனையில் ஒரு பெண்...
அடுத்த சில மணி நேரங்களில், எக்கச்சக்க பணம் உள்ள கைப்பெட்டியோடு, அவள் அழைத்த விடுதிக்கு வந்து சேர்ந்தான்.
'உள்ளே ராதான்னு ஒரு பொண்ணு. அவளிடம் போங்க. ரொம்ப அடக்கமான பொண்ணு!' - விடுதிக்கு வெளியில ஒரு கிழவர் பிரமோத்கிட்டே இப்படிச் சொன்னப்போ, 'ச்சே... மனைவிக்கு துரோகம் பண்ண இந்த ஆண்களுக்கு எப்படி மனசு வருது...' எனக்குள்ளேயே கேட்டுக்கிட்டேன். அந்த அறை சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. படுக்கையின் அருகில் நின்று கொண்டிருந்த பெண் பார்க்க அழகாக இருந்தாள்.
'உன் பெயர் என்ன?'
'ராதா' என்றாள்.
பிரமோத்திற்கு அத்தனை பணமும் கைப்பெட்டியில் இருப்பது நினைவிற்கு வந்தது. 'கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?' என்றான். அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், அவசர அவசரமாகத் தனது பெட்டியைத் திறந்து, அதிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்தான். பிறகு அதை மூடித் தள்ளி சாவியைத் தனது பேன்டிற்குள் மறைத்தான். 'இந்த மாதிரி இடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்று எண்ணினான்.
அவள் கேட்ட பணத்தை எடுத்து, ஒருமுறைக்கு இருமுறை எண்ணிப் பார்த்து அவளிடம் கொடுத்தான். 'நான் விளக்கை அணைக்கிறேன்' என்றாள். அவனும் தலையசைத்தான்.
பிரமோத் இருட்டில் விழித்து எழுந்தான். திடீரென்று திகிலானது.
பெட்டியைக் காணவில்லை என்ற நினைப்பு வந்தது. கண்கள் இருட்டுக்கு பழகியதும், தன் கைப்பெட்டி மேஜை மீது இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தான்; புறப்பட்டான்.
'நல்லவிதமா முடிஞ்சுதா எல்லாம்... நான் சொல்லலை, ராதா நல்ல பொண்ணுன்னு!' என்றார் கிழவர்.
தன் ஓட்டல் அறைக்குள் போனதும் பிரமோத் பணத்தை ஒருமுறைக்கு இரு முறை எண்ணிப் பார்த்தான். எல்லாம் சரியாக இருந்தது. அப்போது அவனுக்கு ராதா ஞாபகம் வந்தது. நல்ல பெண். தப்பு தப்பு... நடத்தை தவறான ஒருத்தி எப்படி நல்லவளாக இருக்க முடியும்? அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
ஆக, ராதா நடத்தை கெட்டவள்; பிரமோத் நடத்தை கெடாதவன்! நடைமுறையின் நிதர்சனத்தை பொட்டில் அடித்துச் சொன்னது கதை. 'கேடு கெட்ட உலகமடா இது!' - புத்தகத்தை மூடி வைத்தபடியே நொந்து கொண்டேன். எனக்குள் ராதா சிரித்தாள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement