Advertisement

ரௌத்ர வீணை!

'அம்மாவின் வழியில் ஆட்சி' எனச் சொல்லும் முதல்வர் பழனிசாமிக்கு,
உங்க ஆட்சியில மக்களுக்கு பாதுகாப்பு இருக்குன்னு நீங்க நம்புறீங்களா? தயவுசெஞ்சு, சமீபத்துல நடந்த விபத்துகளையும், அதுல ஏற்பட்ட உயிரிழப்புகளையும் மனசுல வைச்சு சொல்லுங்க. வீட்டை விட்டு வெளியே கிளம்புனா, உயிரோட வீடு திரும்புறதுக்கு உத்தரவாதம் இல்லாம போயிடுச்சேய்யா!
'அப்படியெல்லாம் இல் லையே!'ன்னு மட்டும் சொல்லி டாதீங்க. உங்க அரசோட அலட்சியத்துக்கு என் கணவரை பலி கொடுத்துட்டு, நாலு மாச கைக்குழந்தையோட தாய் வீட்டுக்கு வந்து நிற்கிறேன். நான் யாருன்னு இன்னும் உங்க ஞாபகத்துக்கு வரலை இல்ல! எப்படிய்யா வரும்; தினம் தினம் இந்த மாதிரி எத்தனையோ நடக்குது; அதுல இதுவும் ஒண்ணு; அப்படித்தானே?
அரசுப் பேருந்து நடத்துனரா இருந்த என் கணவருக்கு, செப்டம்பர் 7ம் தேதி அன்னைக்கு மதிய நேரப் பணி! சம்பவம் நடந்த இடத்துல இருந்து, 3 கி.மீ., தொலைவுல தான் நாங்க குடியிருக்கிற வாடகை வீடு! மதியம், 12:00 மணிக்கு கிளம்பி கருமத்தம்பட்டி பணிமனைக்கு போனவர், வருகைப் பதிவேட்டில கையெழுத்து போட்டுட்டு நேரா சோமனுார் பேருந்து நிலையத்துக்கு போயிட்டார்.
மதியம் 1:45 மணி சோமனுார் - திருப்பூர் பேருந்துக்கு இவர் தான் நடத்துனர். பேருந்துக்கு பக்கத்துல நின்னு பயணிகளை அவர் அழைச்சுட்டு இருந்தப்போ தான் அந்த கொடூர சம்பவம். அதை விபத்துன்னு உங்களை மாதிரி சொல்ல எனக்கு மனசு வர மாட்டேங்குது!
சிதிலமடைஞ்சு இருந்த பேருந்து நிலைய மேற்கூரை, கண்ணிமைக்குற நேரத்துல சரிஞ்சு விழுந்து என் தாலியை பறிச்சிருச்சு. அதிகாரிகள், அரசியல்வாதிகள்னு எல்லாருமே சம்பவ இடத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் வந்தாங்க; ஆய்வு பண்ணினாங்க. கடைசியா, 'தொடர் மழை தான் இதுக்கு காரணம்'னு கை நீட்டிட்டாங்க.அவர் இறந்த 5வது நாள் திருமங்கலம் வட்டாட்சியர் நேர்லவந்து, நீங்க அறிவிச்ச நாலு லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியை கொடுத்தார்! 'என்னோட இழப்பை இது எந்தவகையில ஈடு செய்யும்'னு கேட்டேன். அவர்கிட்டே பதில் இல்லை.
'கணவரை இழந்து கைக்குழந்தையோட தவிக்குற எனக்கு, கருணை அடிப்படையில அரசுப்பணி கொடுங்க'ன்னு சொல்லி, வந்தவர்கிட்டே மனு கொடுத்தேன். மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், சூலுார் வட்டாட்சியருக்கும் என்னோட மனு விபரத்தை தெரியப்படுத்திட்டதா சொல்லி பதில் கடிதம் வந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயும் நேர்ல போய் மனு கொடுத்திருக்கேன்.
ரொம்ப காலமா குழந்தைப் பேறில்லாம தவிச்ச எங்களுக்கு, பத்து வருஷம் கழிச்சு இப்பதான் குழந்தை பிறந்தது! சம்பவத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தான், குழந்தைக்கு நவீன்னு அவர் பேர் வைச்சாரு. அநியாயமா எங்க சந்தோஷத்தை பறிச்சிட்டீங்களேய்யா! என் மகனோட எதிர்காலத்துக்கு என்ன நியாயம் செய்யப் போறீங்க?
- கோவை, சோமனுார் பேருந்து நிலைய விபத்தில் தன் கணவர் சிவக்குமாரை இழந்து, கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டு நிற்கும் சவுந்தரி, திருமங்கலம், மதுரை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement