Advertisement

அவளே சரணம்!

றெக்க படத்தில் நந்தினி ஷ்ரிகர் பாடிய, 'கண்ணம்மா கண்ணம்மா...' பாடலை, 'யு - டியூப்'பில் பாடியதன் மூலம், பல இறுகிய மனங்களை நெஞ்சுருக வைத்த ஜோதிக்கு, 'கண்ணம்மா'வை வெறும் வார்த்தையாகத் தான் தெரியும். பாரதி கொண்டாடிய உருவ அருவமற்ற பரம்பொருள் தான் கண்ணம்மா என்பதை அறியாத மனம் ஜோதியுடையது. ஆம், என்றென்றைக்கும் குழந்தையாகவே இருக்கும் மனதை வரமாக பெற்று வந்த நிகழ்காலத்து கண்ணம்மா அவள்!

கலைச்செல்வி எனும் அம்மா
ஜோதி பிறந்ததும் அழவே இல்லை. அப்புறம் தான் இவ ஒரு 'சிறப்பு குழந்தை'ன்னு தெரியவந்தது. அதாவது அந்தந்த வயதுக்குரிய பக்குவம் இவகிட்டே இருக்காது. எதையும் ரொம்ப மெதுவா தான் கத்துப்பா. தவிர, இவளுக்கு பார்வை குறைபாடும் இருக்கிறதால இவளோட உலகமே வேற. அங்க வெளிச்சமே கிடையாது; அதனால இருட்டும் கிடையாது. இவளுக்கு மனுஷங்களை நல்லவங்க கெட்டவங்கன்னு பிரிக்கத் தெரியாது. மன உணர்வுகளுக்கு பெயரிடத் தெரியாது.
அதனால தான், 'கண்ணம்மா'ங்கிறது ஒரு பெயர்ச்சொல்னு கூட இவளால விளங்கிக்க முடியலை. தன் மனதை ஊடுருவிப் பேசும் தன் தாய் கலைச்செல்வியை, மலங்க மலங்க பார்த்து சிரித்தபடி இருக்கிறார் ஜோதி. தன், 26ம் வயதில் ஜோதிக்கு தாயான கலைச்செல்வி, அன்று தொட்டு தந்தையாகவும் இருந்து வருகிறார். தந்தையாக இருக்க வேண்டியவர், மகளின் நிலையறிந்ததும் அப்பொறுப்பில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டதே இதற்கு காரணம்.

நிரந்தர குழந்தை மனோபாவம் உள்ள பிள்ளை, தாய்க்கு வரம் தானே?
ஆமா, 16 வயசுலேயும் மழலை ததும்ப பேசிட்டு இருக்குற ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கிறது பாக்கியம் தான். பொதுவா, இன்னைக்கு தேதியில பிள்ளைகளால பிரச்னைகளும், மன வருத்தமும் தான் பெத்தவங்களுக்கு மிஞ்சுது. ஒருவேளை, அந்த பிள்ளைகள் எல்லாரும் குழந்தைகளாகவே இருந்திருந்தா நிம்மதி இருந்திருக்குமோ என்னவோ! எனக்கு அப்படியொரு வரம் கிடைச்சிருக்கு. 'அம்மா, நான் அழகா பாடுறேன் இல்ல'ன்னு இவ மழலையா கேட்குறப்போ எல்லாம், ஏதோ நேத்து தான் இவளை பிரசவிச்ச மாதிரி இருக்கு.

குழந்தை ஜோதி எப்படி பாடகியாகினீங்க?
முதல்ல பார்வையற்றவர்களுக்கான பள்ளியில தான் ஜோதியை சேர்த்தேன். ஆனா, அந்த கல்வி இவளுக்கு ஒத்துக்கலை. 13 வயசுல சென்னை அடையார் இசைக் கல்லுாரியில சேர்த்தேன். ஒலியோட தன் மனசை பொருத்திப் பார்த்து இவ சிரிச்சா! நமக்கு சுவாசம் மாதிரி ஜோதிக்கு இசை! 'யு - டியூப்'ல இவ பாடின 'கண்ணம்மா...' பாட்டை கேட்டுட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னோட அடங்காதே படத்துல வாய்ப்பு தந்தார். ஜோதி பாடகியானது இப்படித் தான்!

ஜோதிக்காக வாழ்ந்ததுல உங்க வாழ்க்கையை தொலைச்சிட்டீங்க தானே?
ச்சே... ச்சே... ஜோதிக்காக வாழ்றது தான் என் வாழ்க்கை. சென்னை, குரோம்பேட்டையில எங்களுக்கு இருந்த சொத்தை எல்லாம் வித்துட்டு, தேனாம் பேட்டையில இந்த வீட்டை வாங்கினதே இவளுக்காகத் தான். சில இழப்புகளும், உறவுகள் ஏற்படுத்தின வலிகளும் இருக்கு தான்; ஆனா, அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கிறது இல்ல. இன்னைக்கு இவளுக்குன்னு ஒரு சின்ன அடையாளம் கிடைச்சிருக்கு. இதை பயன்படுத்தி அடுத்தடுத்த உயரங்களை இவ தொடணும். என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும், என் வாழ்க்கை இந்த லட்சியத்துக்காகத் தான்!
'ஜோதி நிலையம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்த தேனாம்பேட்டை வீட்டில், எந்தவொரு பொருளும் வழக்கமான இடத்தில் இருந்து இடம்பெயராது. எவ்வித இடர்களும் இன்றி வீட்டினுள் ஜோதி உலாவுவதற்காகவே இந்த ஏற்பாடு. தேவைக்கு மீறி ஒரு பொருள் கூட அவ்வீட்டில் கிடையாது. அதற்கு கலைச்செல்வி சொல்லும் காரணம், 'இடத்தை அடைச்சுக்கும்; அதை பராமரிக்கிறது கால விரயம்; தவிர, ஜோதியை கவனிச்சுக்க எனக்கு போதிய நேரம் வேணும்!'
ஆஹா... அர்ப்பணிப்பு, கடமை, தியாகம் எனும் நிலைகளை எல்லாம் விட மேலான நிலையல்லவா இது!
ஒன்று மட்டும் சத்தியம்... 'கண்ணம்மா' எனும் வார்த்தையை உச்சரித்த கணத்தில் ஜோதியின் மனம் நிச்சயம் கலைச்செல்வியைத் தான் நினைத்திருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement