Advertisement

பரவச சுவை தரும் 'பார்டர் பரோட்டா'

பயணமும், சுவையான உணவுத் தேடலும் ஒன்றோடு ஒன்று கலந்தது. புதுப்புது இடங்களுக்கு சுற்றுலா செல்வதே கொண்டாட்டமான ஒன்றுதான். அங்கே சுவையான உணவும் கிடைத்தால் எப்படியிருக்கும்? தமிழகத்தின் சிறப்புமிக்க சுற்றுலா தலம், குற்றாலம். குற்றால அருவிகளில் குஷியாட்டம் போட்டுத் திரும்பினால், பசி வயிற்றைக் கிள்ளி எடுக்கும். அப்போது செல்ல வேண்டியது, பார்டர் பரோட்டா கடை.


குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில், 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரானூர் என்னுமிடத்தில் உள்ள 'பார்டர் ரஹ்மத் புரோட்டா ஸ்டால்' மிகவும் பிரபலம். 80களில் இருந்து இக்கடை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு-கேரள எல்லையில் இருப்பதால், பார்டர் பரோட்டா என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. காலை 11 மணி முதல், இரவு 11 மணி வரை, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கோ, அல்லது இங்கிருந்து கேரளாவுக்கோ செல்பவர்கள், தவறாமல் இங்கே பரோட்டா சுவைத்து விட்டுச் செல்கிறார்கள். குறிப்பாக பார்சல் வாங்கவே, ரேஷன் கடையை போல இங்கு வரிசை நீள்வதை பார்க்கலாம்.


இங்கு அப்படியென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? சிறிய அப்பள வடிவில் இருக்கும் பரோட்டா, அதற்கு நாட்டுக்கோழி சால்னா என்று அசத்துகிறார்கள். பரோட்டா சூரி காமெடி போலவே, 'எல்லா கோட்டையும் அழிங்க, நான் மறுபடியும் சாப்பிடுறேன்' என்று சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு ருசி உங்களை இழுக்கும். அதற்கு காரணம், அவர்களே அரைத்து பயன்படுத்தும் மசாலாக்கள் தானாம். சிக்கன் 65, கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி பெப்பர் சிக்கன், இவற்றுடன் காடை பிரையும் இங்கு ஸ்பெஷல்.


பரோட்டா போடும் ஸ்டைல், காடை பிரை, ஆம்லெட் ஆகியவற்றை பார்த்தாலே, நிச்சயம் சாப்பிட தூண்டும். சீரக சம்பா அரிசியில் தயார் செய்யப்படும் பிரியாணி, கொத்து பரோட்டா மற்றும் வீச்சு பரோட்டாவுக்கும் இங்கே ரொம்ப மவுசு. பார்டர் பரோட்டாவில் ருசித்து விட்டால், இந்த சுவை வேறு எங்கும் கிடையாது என்று நிச்சயம் துணிந்து சவால் விடலாம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement