Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 33; என் கணவரின் வயது, 39. எங்களது, காதல் திருமணம். உயர் வகுப்பை சேர்ந்தவர், என் கணவர். அதனால், அவர் வீட்டினருக்கு இத்திருமணத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை. என் கணவருடன் கூடப் பிறந்தவர், ஒரே ஒரு அண்ணன் மட்டும் தான். அவருக்கு, அவர்கள் ஜாதியிலேயே பெண் பார்த்து, திருமணம் செய்துள்ளனர்.
திருமணமானதிலிருந்து, எங்களை தனிக்குடித்தனம் வைத்து விட்டனர். விசேஷ நாட்களில் மட்டும் மாமனார் வீட்டுக்கு சென்று வருவேன். அப்படி ஒவ்வொரு முறை போகும்போதும், தன் மூத்த மகனையும், மருமகளையும் புகழ்ந்து தள்ளுவார், மாமியார். சின்னதாக ஜவுளி கடை வைத்துள்ளார், மூத்தவர். அவர் மனைவிக்கு சரியான படிப்பு இல்லை. நானும், என் கணவரும் அரசு பணியில் இருக்கிறோம்.
மாமியார் - மாமனார் வீட்டுக்கு, என் வீட்டினர் யாரும் வரக்கூடாது என்று சொல்லி விட்டனர். அதனால், அவர்களும் அங்கு செல்வதில்லை.
எனக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் தாத்தா - பாட்டியின் அன்போ, ஆதரவோ கிடைக்கவில்லை.
குழந்தைகளை வாரத்துக்கு ஒருமுறை அழைத்துச் சென்று, பெற்றோருக்கு காண்பித்து வருவார், என் கணவர்.
என் குழந்தைகள் இருவருமே நல்ல குணத்துடன், மரியாதையுடன் பழகுவர். மற்றவர்கள் எதிரில் குழந்தைகளை புகழ்ந்து, 'அப்படியே என் மகனை கொண்டுள்ளதுங்க...' என்பார், மாமியார்.
அதுவே, அவர்கள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால், 'எல்லாம் அவங்க அம்மா புத்தி...' என்று, என் ஜாதியை குறிப்பிட்டு ஏசுவார்.
என் குழந்தைகளிடம், என் மீது வெறுப்பு வரும்படி உபதேசம் செய்து அனுப்புவார். இதையெல்லாம் என் கணவரிடம் கூறினால், 'அவர்கள் இன்னும் எத்தனை காலம்
உயிரோடு இருக்கப் போகின்றனர்... விட்டுத்தள்ளு...' என்பார்.
என் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவே, சொந்த வீட்டை விட்டு, என் வீட்டருகே வாடகைக்கு குடியிருக்கின்றனர், என் பெற்றோர். அவர்களையும் அடிக்கடி குறை கூறியபடியே இருப்பார், மாமியார்.
எத்தனையோ முறை அழைத்தும், என் மாமியார் - மாமனார், கணவரின் அண்ணன் மற்றும் அவரது மனைவி என, யாரும் இதுவரை ஒருமுறை கூட, என் வீட்டுக்கு வந்ததே இல்லை.
இதெல்லாம் எனக்கு மன உளைச்சலையும், அவர்கள் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு மத்தியில் எப்படி என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க போகிறேனோ தெரியவில்லை.
நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு
உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
ஒரு காதல் திருமணத்திற்கு பின், நுாற்றுக்கணக்கான சவால்கள் உள்ளன. 400 மீட்டர் தடை ஓட்டம் கேள்விப்பட்டிருப்பாய். காதல் திருமணமோ, ஆயுளுக்கும் ஓட வேண்டிய ஓட்டம்!
ஒரு காதல், திருமணத்தில் முடிந்தால், அது, தற்காலிக வெற்றி; ஊர் மெச்ச தாம்பத்யம் செய்தால், அதுவே நிரந்தர வெற்றி. காதல் திருமணம் வெற்றிபெற, ஒரு பெண், பல தியாகங்களை செய்தாக வேண்டும். ஏச்சு பேச்சு, பழிசொல், இழிவுகளை பொருட்படுத்தக் கூடாது. சமூகம் கெட்டுப்போன முட்டைகளையும், அழுகிப்போன தக்காளிகளையும், சாண உருண்டைகளையும் அடித்தாலும், துடைத்தெறிந்து, இலக்கு நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
கூட்டுக் குடும்பத்தில் வைத்து உன்னுடன் போராடாமல், உங்களை தனிக்குடித்தனம் வைத்தது நல்ல விஷயம்தானே... உன் முன்னிலையில், தன் மூத்த மகனையும், மருமகளையும் உன் மாமியார் புகழ்வது, உன்னை சீண்ட, உசுப்பேத்த! அதனால், யாருக்கோ யாரையோ பிடித்துப்போய் பாராட்டுகின்றனர்; நமக்கென்ன என்றிரு.
அதேபோன்று, உன் மாமியார், உன் பெற்றோரை தன் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்று கூறியுள்ளாய். அதனால் என்ன கெட்டு போயிற்று... உன் மாமியாரை நம்பியா உன் பெற்றோர் இருக்கின்றனர்... அழையா விருந்தாளியாக போவதை விட, சொந்த வீட்டில் கவுரமாக இருப்பது மேல்!
சிறு குழந்தை செய்யும் குறும்புகளுக்கு கூட, ஜாதியைப் பற்றி குறிப்பிட்டு பேசுவது, உன் மாமியாரின் மனதில் கொட்டிக்கிடக்கும் குப்பையை காட்டுகிறது. அவரை அலட்சியப்படுத்து!
எதிரிகள் இல்லாத வாழ்க்கை, உப்பு சப்பில்லாமல் இருக்கும். எதிரிகள் எவ்வளவுக்கு எவ்வளவு தொந்தரவு தருகிறார்களோ அவ்வளவுக்கு வாழ்க்கை உத்வேகம் பெறும். அதுபோன்று தான், காதல் திருமணமும், எதிர்ப்பாளர்கள் இல்லாவிட்டால் ருசிக்காது. எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள அழுகையும், ஒப்பாரியும், சுய பச்சாதாபமும் ஆயுதங்களாய் அமையாது. காலே இல்லாத பெண், இமயமலை ஏறி சாதிக்கிறாள். அவளுக்கு முன் உன் பிரச்னை எம்மாத்திரம்!
உன் மாமனார், மாமியார், கொழுந்தனாருடன் இருக்கும் உறவுமுறை கவலைக்கிடமாய் இருந்தால் பரவாயில்லை; உனக்கும், உன் கணவருக்கும் இடையே ஆன நேச பிணைப்பை பலப்படுத்திக் கொள். உன் தோரணை திமிராய் இல்லாமல், அன்பு கலந்த கம்பீரமாகட்டும். நீ பார்க்கும் பணியில் அதிக கவனம் செலுத்து. உயர் பதவி பெற, தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் கூடுதல் பட்டங்கள் பெறு. பெரியவர்களிடம் இருக்கும் ஜாதி துவேஷம், உன் குழந்தைகளுக்கு பரவி விடாமல் அவர்களை நல்வழிப்படுத்து.
உலகம் ஒரு நாடக மேடை; நாடகத்தில் உனக்கு கதாநாயகி வேஷம் என்றால், உன் மாமியாருக்கு வில்லி வேஷம். அவர் வேஷத்தை அவர் சிறப்பாக செய்கிறார்; அதனால், அவரை வெறுக்காதே. அவரின் அறியாமையை நினைத்து, அனுதாபப்படு.
வாரம் ஒருமுறை கணவருடன் கோவிலுக்கு போ; மனம் அமைதிப்படும். உறவு வட்டம் பொய்த்தால் என்ன, நட்பு வட்டத்தை விரிவுபடுத்து. உன்னைப் போல காதல் மணம் செய்த குடும்பங்களை விருந்துக்கு அழைத்து நட்பு கொள். முகநுாலில், ஜாதி வெறிக்கு எதிரான கருத்துகளை எழுது. 'லவ் மேரேஜ் குரூப்' என, ஒன்றை, 'வாட்ஸ் - ஆப்'பில் ஆரம்பி. விரும்பிய இசை கேள்; மாதத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு சினிமாவுக்கு போ.
காதல் திருமணம் செய்வோருக்கு அழகிய முன்மாதிரியாக விளங்கு மகளே...

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement