Advertisement

திண்ணை

'ஜெயலலிதா நினைவுகள்' என்ற நுாலில், தன்னைப் பற்றி, ஜெயலலிதா கூறியது:
எனக்குள்ளும் சோகம், கோபம், அழுகை எல்லாம் உண்டு. ஆனால், தலைமை பொறுப்புக்கு வரும்போது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
*என்னை இகழ்வோருக்கு, என் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்வேன்.
*என் அம்மாவுடன் நிறைய நேரத்தை செலவழித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் உண்டு.
*என் அம்மா இறந்தபோதும், எம்.ஜி.ஆர்., இறந்தபோதும், காட்டில் தொலைந்த குழந்தையாக பரிதவித்தேன்.
*என் அரசியல் பாதையை, மென்மையாக்கி விட்டுச் செல்லவில்லை, எம்.ஜி.ஆர்.,
*அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நன்றாக படிக்க வைத்து, சாதாரணமாக இருக்கிற நல்ல குடும்பத்து பெண் மாதிரி, 18, 19 வயசிலேயே நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருந்தால், சந்தோஷமாக, நாலு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பேன்.

ஒரு பேட்டியில் ஜெயலலிதா கூறியது:
தங்களை கவர்ந்த மேடைப் பேச்சாளர் யார்... ஏன்?
பேரறிஞர் அண்ணா; தமிழக மேடைகளில் அவர் ஆற்றிய உரைகளும், நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் வளரும் தலைமுறையினருக்கு சிறந்த பாடங்கள்!
பெண்ணாக பிறந்து விட்டோமே என்று என்றைக்காவது வருத்தப்பட்டது உண்டா?
நிச்சயமாக இல்லை.
நடிகர் திலகம், மக்கள் திலகம்... இருவரும் தங்களை எந்தவிதத்தில் கவர்ந்தனர்?
தன் இணையற்ற நடிப்பால் என்னை கவர்ந்தவர், நடிகர் திலகம்; கலை மற்றும் அரசியல் துறையில் எனக்கு ஆசானாக திகழ்ந்தவர், மக்கள் திலகம்.
தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகள் பற்றி?
அம்மா இருந்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காது; ஏனென்றால், அவர், என்னை அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்.
உங்களை கவர்ந்த இதிகாசப் பாத்திரம்?
பீஷ்மர்!
தங்களுக்குள் ஒரு, 'சர்வாதிகாரி' ஒளிந்திருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
எந்த ஒரு இயக்கத்தின் தலைவரும், வலிமை உள்ளவராக இருந்தால் தான், தலைமை பொறுப்பை வெற்றிகரமாக வகிக்க முடியும். ஓர் ஆண் அப்படி விளங்கினால், 'வலிமையானவர்' என்று போற்றுவீர்கள்; அதே, ஒரு பெண் அவ்வாறு இருந்தால், அது சர்வாதிகாரமா?
உங்களை கவர்ந்த அரசியல்வாதி யார்?
சர்வதேச அளவில், மார்க்ரெட் தாட்சர்; இந்திய அளவில், இந்திரா காந்தி. தமிழக அளவில், புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர்.,
தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாக எதைக் கருதுகிறீர்கள்?
ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...
கடந்த காலத்தில் தாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று எதை கருதுகிறீர்கள்?
முதலமைச்சராக இருந்த காலத்தில், ஆட்சி நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்தியதால், கட்சிக்காரர்களை சந்திப்பதிலும், பத்திரிகையாளர்களை சந்திப்பதிலும், அதிக கவனம் செலுத்தாதது தான்.

விழா மேடைகளில் ஜெயலலிதா பேசியதிலிருந்து...
டிச., 15, 2012ல் மியூசிக் அகாடமியின், 86ம் ஆண்டு, இசை விழாவை துவக்கி வைத்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, 'சுருதி, ராகம், பாவம், சாகித்யம் ஆகியவற்றை உள்ளடக்கியது, கர்நாடக இசை. இதற்கு இணையாக உலக இசை அரங்கில் ஒரு சில மட்டுமே இருக்க முடியும்...' என்று கூறி, தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக் காட்டினார்.
அதேபோல், 1991ல், பல்கலைக் கழக நுாற்றாண்டு அரங்கில் நடந்த, கிரிக்கெட் சங்கத்தின், 60ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா, 'பிரான்சில், மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டும் விவசாய சமூகத்தினருடன் கிரிக்கெட் விளையாடியிருந்தால், பிரெஞ்சு புரட்சி நடக்காமலேயே போயிருக்கும்; காரணம், இந்த விளையாட்டுக்கு ஜாதி, வர்க்க, இனப்பாகுபாடு கிடையாது...' என்றார்.

'பிரபலங்களின் வாழ்வில்' நுாலிலிருந்து:
'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர், சோ. ராமசாமியின் பெயரை பலரும் அறிய வைத்த நாடகம், 'சம்பவாமி யுகே யுகே!' இந்நாடகத்தில், 'எங்கு பார்த்தாலும் ஊழல்; ஊழலை ஒழிக்க இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும், பைத்தியக்காரப் பட்டம் வாங்கி, அவன் திரும்பிப் போக வேண்டியது தான்...' என்று, ஒரு வசனம் வரும்.
அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது; பக்தவத்சலம் முதலமைச்சர். அந்த நாடகத்துக்கு அனுமதி தரவில்லை, காங்கிரஸ் ஆட்சி. உடனே, உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார், சோ. இவரது மனுவை படித்து பார்த்த தலைமை வழக்கறிஞர், சில வசனங்களை மட்டும் மாற்றச் சொன்னார். அதற்கு சம்மதிக்கவில்லை, சோ.
உயர்நீதிமன்றத்தில், சோ தாக்கல் செய்த மனு, அரசால் எதிர் வாதங்கள் வைக்க முடியாததாக இருந்தது. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து, 'இந்த நாடகத்துக்கு அனுமதி கொடுத்து விடுங்கள்...' என்று சொன்னார், அரசு வழக்கறிஞர்; அனுமதி கிடைத்தது.
சென்னை, பாலமந்திர் அரங்கத்தில் நாடகம் நடந்தது; சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார், காமராஜர். அவர், கொஞ்சம் தாமதமாக அரங்கிற்குள் நுழைந்தார். அப்போது, மேடையில் ஜெமினிகணேசன் பேசிக் கொண்டிருந்ததால், சோவின் அருகில் அமர்ந்தார், காமராஜர்.
'இந்த நாடகத்துக்கு லைசென்ஸ் மறுத்து விட்டனர்...' என்று காமராஜரிடம் சொன்னார், சோ.
'நீங்க ஏதாவது அதிகப்பிரசங்கித் தனமா எழுதியிருப்பீங்க...' என்றார் காமராஜர்.
'அப்புறம் எதற்காக இப்ப லைசென்ஸ் கொடுத்தாங்களாம்...' எனத் திருப்பி கேட்டார், சோ.
'லைசென்ஸ் கொடுத்தா எப்படி வேண்டுமானாலும் கார் ஓட்டுவீங்களா...' என்றார் காமராஜர்.
சோவும் விடாமல், 'நான், 'ரூல்ஸ்'படி தான் கார் ஓட்டுவேன்; என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது...' என்றார்.
இந்த பதிலை ரசிக்கவில்லை, காமராஜர். 'ஓகோ...' என்றார். இது, கூட்டத்தில் அனைவருக்கும் கேட்டது.
உடனே, 'ஹா... ஹா...' என்று கிண்டலாக சிரித்தார், சோ.
இதுவும் கூட்டத்தில் கேட்டது.
இரண்டு பேருக்கும் ஏதோ சண்டையாகிவிட்டது என நினைத்தனர், கூட்டத்தினர். திடீரென, எழுந்து வெளியே போய் விட்டார், காமராஜர்.
கவலைப்படாமல், நாடகத்தை நடத்தி முடித்தார், சோ. ஜெமினிகணேசன் உட்பட அனைவரும் காமராஜரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள்; மறுத்து விட்டார் சோ.
இதுதான் சோ; தன் மனதுக்கு சரியென பட்டு விட்டால், யார் சொன்னாலும் கேட்க மாட்டார்.
'யார் எதைச் சொன்னாலும், அதற்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் பாணி தன்னுடையது...' என, தனக்கான வரையறையை வைத்துக் கொண்டவர், சோ. அதை, அவர், கடைசி வரைக்கும் கைவிடவில்லை!

நடுத்தெரு நாராயணன்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement