Advertisement

படிச்ச பொண்ணு!

ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம்.
''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது.
'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள்.
பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும்.
ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் உரத்த குரல் வந்து போனது. அப்பா... எவ்வளவு நாராசமான சத்தம்... கல்யாணமாகி முதன் முதலாக புகுந்த வீட்டிற்கு வந்த போது, மாமியாரின் பேச்சு சத்தத்தை கேட்டவுடன் வயித்தை சுருட்டி, நெஞ்சை அடைத்தது. அந்த வீட்டில் உள்ள அத்தனை பேரும் அந்த சத்தத்திற்கு அடிமை.
'எங்க வீட்டுக்குன்னு சில பழக்க வழக்கங்கள் இருக்கு; தெரிஞ்சு, புரிஞ்சு நடந்துக்கோ... ஒவ்வொண்ணா சொல்லணும்ன்னு எதிர்பாக்காத... என்ன, வாய் திறந்து சொல்ல மாட்டியா...' என்ற அதட்டலான அந்த சத்தத்தை கேட்டவுடன், சரின்னு சொல்ல நினைத்தாலும், நிர்மலாவுக்கு பேச்சே வரவில்லை; தலை தான் ஆடியது.
மனுஷனுக்கு பேச்சு வந்தது எவ்வளவு சவுகரியமோ, அவ்வளவு அசவுகரியம்ன்னு நினைத்தது, அவளது மாமியாரைப் பார்த்து தான்.
'படிச்சா போதுமா, சுறுசுறுப்பா இருக்க வேணாமா... மசமசன்னு நிற்காத... உங்க அம்மா என்னத்த வளர்த்தா...
'படிப்பு படிப்புன்னு தரையை தேய்ச்சது எல்லாம் உங்க வீட்டோட இருக்கட்டும்; இங்க, உன் படிப்பை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நட...
'படிச்சவன்னு சொல்ற, இந்த சின்ன காரியத்த எப்படி செய்யணும்ன்னு தெரியலயா... என்னத்த படிச்சு கிழிச்ச...
'எப்படியும் கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்கு போக போறவ, அதுக்கு என்னென்ன செய்யணும்ன்னு கத்துக்காம, என்னத்த படிச்சியோ...' என, ஒவ்வொண்ணுக்கும் அவள் படிச்ச படிப்பு, மாமியாரின் வாயில் நாராக கிழிபட்டது.
'ஏம்மா என்னை படிக்க வெச்சே... இப்பப் பாரு... எம்மாமியார் கிட்ட எவ்வளவு திட்டு வாங்குறேன்...' என்று சொல்லி அழுவாள், நிர்மலா.
'கவலைப்படாத நிர்மலா... உன் மாமியார் படிக்காதவ; எல்லாமே புருஷன் தான்னு சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாம வாழ்ந்தவ. அதுமாதிரியே நீயும் நடக்கணும்ன்னு நினைக்கிறா. நீ படிச்சு, நாலு விஷயம் தெரிஞ்சவ. அவள மாதிரி ஒன்னால நடந்துக்க முடியாதுங்கிறது அவளுக்கு புரியல. அவ புள்ள படிச்சவன்னு தானே, உன்னை, தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தா. இப்ப, உன் படிப்பை வெச்சே உன்னை குத்தம் சொல்வான்னு எங்களுக்கு எப்படி தெரியும். அனுசரிச்சு போ...' என்று சமாதானப்படுத்துவாள்.
''நிர்மலா... என்னாச்சு... மச மசன்னு நின்னுட்டு இருக்க; கிளம்பு,'' என்று அவசரப்படுத்தினாள் அம்மா.
எழுந்து வாசலுக்கு வந்தாள், நிர்மலா. பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போய் பஸ் பிடிப்பதை நினைத்தாலே அலுப்பாக இருந்தது. கணவனை மருத்துவமனையில், 'அட்மிட்' செய்து, இன்றோடு ஒரு வாரம் ஆகி விட்டது. டாக்டர் ரிப்போர்ட் இன்றைக்கு தருவதாக கூறியிருந்தனர். அதை நினைத்த போது, மனம் படபடத்தது.
பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்லும் போது, ஸ்கூட்டியில் சென்ற அவ சினேகிதி, இவளைப் பார்த்து கை காட்டி சென்றாள். தன்னை விட சுமாராக படித்தவள், இன்று நல்ல வேலையில் இருக்கிறாள். அவள் செல்வதை ஆதங்கத்துடன் பார்த்தாள், நிர்மலா.
மருத்துவமனை வார்டுக்குள் நுழையும்போதே, ''ஏண்டி இவ்ளோ நேரம்... உன் புருஷன் மட்டும் தான் எனக்கு புள்ளையா... நான் வீட்டுக்கு போக வேணாமே... டாக்டர்கிட்ட என்ன, ஏதுன்னு கேட்கணும்ங்கிற அக்கறை கொஞ்சமாச்சும் இருந்தா, இவ்வளவு லேட்டா வருவியா...'' என்று, 'சிடுசிடு'த்தாள், மாமியார்.
வறண்ட சிரிப்பை பதிலாக தந்து, கட்டிலை பார்த்தாள். அவள் கணவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
''நான் பாத்துக்கிறேன், நீங்க கிளம்புங்க அத்தை... டாக்டர், 'ரவுண்ட்ஸ்' வரும்போது கேட்டு வைக்கிறேன்,''என்றாள்.
''கரெக்டா, எப்ப டிஸ்சார்ஜ்ன்னு கேளு... இப்பவே ஒரு வாரம் ஆச்சு. காசு பிடுங்க வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்; சரியா விசாரி... படிச்சவளா லட்சணமா இரு,'' என்று தேள் போல் கொட்டி விட்டு, கிளம்பினாள்.
கணவன் முகத்தை பார்த்தாள்; சலனமில்லாமல் இருந்தது. அவள் திட்டு வாங்கும்போதும் அவன் முகம் அப்படிதான் இருக்கும். கல்யாணம் ஆன முதல் நாளில், அவன் சொன்ன வார்த்தை...'அம்மாவை அனுசரிச்சு போ...' என்பதாகத் தான் இருந்தது. படித்தவனாக இருந்தும், அவள் படிப்பை அவன் அங்கீகரிக்கவில்லை. ஏதாவது யோசனை சொன்னால், 'என்ன படிச்சவன்னு காண்பிக்கிறயா... எதை செய்யணும்ன்னு எங்களுக்கு தெரியும்...' என்று கூறி வாயடைப்பான்.
திடீரென, வாந்தி, மயக்கம் என்று ஆக, அவனை, மருத்துவ மனையில் சேர்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர், '' பெரியவங்க யாரும் இல்லயாம்மா...'' என்று கேட்டார்.
''இப்பதான் போனாங்க... ஏதும் முக்கியமான விஷயமா டாக்டர்...''
''கிட்னி இரண்டும் பழுதாயிருச்சும்மா... மாற்று கிட்னி பொருத்தினாத்தான் காப்பாற்ற முடியும்,'' என்று கூற, நிலைகுலைந்து போனாள், நிர்மலா.
''ஏண்டி... இப்படி ஒரு குண்டை துாக்கி போடுறே... நான் என்ன பண்ணுவேன்... உன் ராசிதான் என் புள்ளய இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கு,'' என்று காட்டு கத்தல் கத்தினாள், மாமியார்.
முதன் முறையாக, நிர்மலாவின் அப்பாவிற்கு கோபம் வந்தது.
''இங்க பாருங்கம்மா மரியாதையா பேசுங்க... உங்க புள்ளைக்கு உடம்புக்கு முடியாம போனதுக்கு, என் புள்ளையா காரணம்... எங்க பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அடுத்து வைத்தியம் என்ன பண்ணுறதுன்னு யோசிப்பீங்களா... அதை விட்டு, எம் பொண்ணை கரிச்சு கொட்டுறீங்க,'' என்று பதிலுக்கு கத்தினார்.
அமைதியாக தன் கணவன் முகத்தை பார்த்தாள், நிர்மலா. கண்களில் கண்ணீர் மல்க படுத்திருந்தான், அவன்.
''என்னம்மா செய்யலாம்?'' முதல் முறையாக அவளிடம் அபிப்ராயம் கேட்டார், நிர்மலாவின் மாமனார்.
கணவனின் நெற்றியில் ஆதரவாக கை வைத்த நிர்மலா, ''மாமா... டாக்டர் கிட்ட என்னை பரிசோதிக்க சொல்லி பார்த்ததில், என் கிட்னி இவருக்கு பொருந்தும்ன்னு தெரிஞ்சது. உயிர் வாழ்றதுக்கு ஒரு கிட்னி போதும்; டாக்டரும் எந்த பயமுமில்லன்னு சொல்லியிருக்கார். கிட்னி மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவருக்கு எதுவும் ஆகாது; கவலைப்படாதீங்க,'' என்றாள்.
பட்டென்று, பிரச்னைக்கான தீர்வைச் சொன்ன மருமகளை பார்க்க கூச்சப்பட்டு, தரையை பார்த்தபடி நின்றாள், மாமியார். தான் வாழ்க்கை கொடுப்பதாக நினைத்திருக்க, தனக்கு வாழ்க்கை கொடுக்க தயாராகி விட்ட தன் மனைவியின் தியாகத்தை நினைத்து, கண்ணீருடன் அவளைப் பார்த்தான், அவள் கணவன்.
''படிச்ச பொண்ணுன்னு நிரூபிச்சுட்டேம்மா... உன்னை நினைச்சா பெருமையா இருக்கு... என் புள்ளை அதிர்ஷ்டம் பண்ணினவன்,'' என்று கூறி, நிர்மலாவின் கையை பிடிச்சு அழ ஆரம்பித்தார், அவள் மாமனார்.
முதன்முறையாக, தன் புகுந்த வீட்டில், தன் படிப்பிற்கான அங்கீகாரத்தைக் கேட்டு, சந்தோஷப்படுற மன நிலையில் இல்லாத நிர்மலா, சலனமில்லாமல் கணவனின் முகத்தை பார்த்தபடி நின்றாள்.
''வேலைக்கு அப்ளை பண்ணு,'' என்றான், அவள் கணவன்!

மு.பாலமுரளி

வயது: 52.
கல்வித் தகுதி: எம்.பில்., (காமர்ஸ்), எல்.ஐ.சி.,யில் நிர்வாக அதிகாரி.
சிறுகதை எழுதுவது பிடித்தமான விஷயம்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement