Advertisement

அந்துமணி பதில்கள்!

எஸ்.விஜயலட்சுமி, வேடந்தாங்கல்: நம் நாட்டு பெண்கள் கடுமையாக உழைப்பது போல, வெளிநாட்டு பெண்களும் உழைப்பதுண்டா?
நம்மிடம் வசதி இல்லை; அதனால், மிஷின்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் நம் பெண்கள் செய்ய வேண்டியுள்ளது. துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது, சமைப்பது... இப்படியெல்லாம் நம் பெண்களின் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்கும் பெண்கள், நம் பெண்களின் உழைப்பைக் கண்டால், வாயடைத்துப் போவர்!

ஜி.தேவி, நிலக்கோட்டை: தற்போது, கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறதே... காரணம் என்ன?
தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னவோ... செய்யும் தப்புக்கு பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக் கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்!

* ச.குருசாமி, சென்னை: சாதாரண பாட்டாளி ஓடி ஓடி சம்பாதித்தாலும் கோடீஸ்வரனாக முடிவதில்லையே...
முடியாது; உடல் உழைப்பு மட்டுமே பாட்டாளியைப் பணக்காரனாக்காது. மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்; அது, பல சமயங்களில் கைக் கொடுக்கும்; பையை நிறைக்கும்!

*கே.அருணாசலம், பொள்ளாச்சி: குறைகளைச் சுட்டிக் காட்டுவதால், நட்பை இழக்க நேரிடும் நிலை வந்தால் என்ன செய்வது?
இழப்பு நல்லதற்குத் தான். புகழ் பாட மட்டுமல்லவே நட்பு; குறை இருப்பின் அதையும் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்தத்தான் நட்பு. இதை, விரும்பாதவர் சினேகிதம் வேண்டவே வேண்டாம்!

வி.ஹரிணி, விருதுநகர்: சந்தர்ப்பம் கிடைக்காதவரை தான் ஆண்கள், யோக்கியர்கள் என்பது உண்மையா?
நடைமுறையைப் பார்க்கும்போது உண்மை என்றே சொல்லத் தோன்றுகிறது!

அ.ராதா, அவனியாபுரம்:கணவன் --- மனைவி சண்டை, குழந்தைகளுக்கு தெரிவது நல்லதா... கெட்டதா?
ரொம்ப கெட்டது; சின்னஞ் சிறுசுகளின் மனநிலை முழுவதும் பாதிக்கப்பட்டு, அவர்களின் படிப்பு முதல் மற்ற வளர்ச்சிகள் அனைத்துமே தடைப்படும். அம்பலத்துக்கு வர வேண்டாம் தம்பதியரின் சங்கதி!

எஸ்.சிவப்பிரகாசம், கடலுார்: 'ஹை- கிளாஸ், மிடில் கிளாஸ், லோ- கிளாஸ்' -இவர்களில் யாருக்கு கனவுகள் அதிகம்?
எப்பவுமே நடுவில் சிக்கித் தவிப்பவர், 'மிடில் கிளாஸ்' வர்க்கத்தினர் தான்... 'ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' எந்த பாட்டியோ சொன்ன பழமொழி இது!

சி.கோபிநாத், திருவொற்றியூர்: ஒருவன் வாழ்க்கையில் உயரும்போது, எதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்?
நிதானம்! உயரும்போது கிடைக்கும் புகழும், பணமும் கண்ணை மறைத்து, ஆணவத்தைக் கொடுக்கும். ஆணவம் கொண்ட எவனும் உருப்பட்டது இல்லை; வாழ்வின் கடைசி கட்டத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்தே சாவான்!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement